மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வைத்திருந்த முக்கியப் பங்குகள் என்னென்ன?
இந்திய பங்குச்சந்தையில் ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா எந்த நிறுவனங்களில் எவ்வளவு சதவீத பங்குகளை வைத்திருந்தார் என பார்க்கலாம்...
இந்தியாவின் ‘வாரன் பஃபெட்’, ‘இந்திய பங்குச்சந்தையின் தந்தை’ ‘பிக் புல்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
பல ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தையை ஆண்டு வந்த இவர், பல புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வுகளைச் செய்ததால் 40,000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புள்ள, இந்தியாவின் 36வது பணக்காரராக மாற்றியது. இந்திய பங்குச்சந்தைகளில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எந்த நிறுவனங்களில் எவ்வளவு சதவீத பங்குகளை வைத்திருந்தார் என பார்க்கலாம்...
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தை முதலீடுகள்:
ஜூன் மாதம் இந்திய பங்குச்சந்தைகள் மூலம் கிடைக்கப்பட்ட அடிப்படை தகவல்களின் படி, சமீபத்தில் தனது சொந்த விமான நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனத்தை தொடங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 32 நிறுவன பங்குகளை வைத்திருந்துள்ளார்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு அனுபவத்தைப் போலவே, பல்வேறு துறைகளில் தனது ஈக்விட்டி போர்ட்ஃபோலியோவை வைத்துள்ளார்.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையில் அதிகபட்சமாக 13 சதவீத பங்குகளை வைத்துள்ளார். நிதித்துறை, மருத்துவத்துறை, வங்கிகள், கட்டுமானம் மற்றும் ஒப்பந்தம் ஆகிய துறைகளில் தலா 6 சதவீத பங்குகளை கொண்டுள்ளார். மென்பொருள், உள்கட்டமைப்பு, காலணி, ஆட்டோ, பேக்கேஜிங்.போன்ற துறைகளில் 3% முதலீடு செய்திருந்தார்.
- ஜூன், 2022 நிலவரப்படி, 17% பங்கு கையிருப்புடன், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 100.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்தார், இதன் மதிப்பு ₹7017 கோடி.
- மெட்ரோ காலணி பிராண்டில் ₹2255 கோடி, கிரிசில் ₹1285 கோடி மற்றும் Fortis-இல் ₹853 கோடி ஆகியவை அவரது மற்ற முக்கிய பங்குகளில் அடங்கும்.
- டைட்டன் கோ லிமிடெட் நிறுவனத்தின் 8,728 கோடி மதிப்பிலான 4 சதவீத பங்குகளையும், கரூர் வைஸ்யா வங்கியில் 229 கோடி மதிப்பிலான 4.5 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளார்.
- ஜுன்ஜுன்வாலா தனது புதிய நிறுவனமான ஆகாசா ஏர் விமான நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளுக்காக $35 மில்லியன் முதலீடு செய்திருந்தார்.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கடந்து வந்த பாதை:
மும்பையில் பணியாற்றி வந்த வருமான வரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ், 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மும்பையில் தான் வளர்ந்தார்.
சைடன்ஹாம் கல்லூரியில் பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றார். இதனாலேயே, ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் பங்குச் சந்தையைப் பற்றி எப்பொழுதும் அறிந்து வைத்திருந்தார். 1985ம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே பங்குச்சந்தைகளில் முதலில் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததன் மூலமாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
மேலும், பங்குச்சந்தை தொடர்பாக RARE எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர். டாடா டீ, சேஷ கோவா போன்ற சிறிய அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தார். அதில் வெற்றி கண்டதை அடுத்து டைட்டன், ஸ்டார் ஹெல்த், டாடா மோட்டார்ஸ் மற்றும் மெட்ரோ பிராண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தார்.
1986 ஆம் ஆண்டு டாடா டீயின் 5,000 பங்குகளை ₹43க்கு வாங்கினார். அடுத்தடுத்தடுத்து 3 மாதங்களிலேயே அதன் விலை 143 ரூபாய் வரை உயர்ந்தது. கடைசியாக 3 வருடங்கள் கழித்து டாடா டீயின் பங்குகளை 25 லட்சம் ரூபாய் வரை விற்று தனது முதல் லாபத்தை சம்பாதித்தார்.
இதனால் டாடா நிறுவனங்கள் மற்றும் அதன் பங்குகள் மீதான தனது அன்பை தொடர வேண்டும் என்பதற்காக, டாடா மோட்டார்ஸில் தலா 1% பங்குகளை 1,731 கோடி மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் ₹336 கோடி மதிப்பில் வைத்திருந்தார்.
2002-03 இல், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா டைட்டன் பங்குகளை சராசரியாக ₹3 விலையில் வாங்கினார், தற்போது அது ₹2472க்கு மேல் விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. டைட்டன் நிறுவனத்தின் 4.4 கோடி பங்குகளை வைத்திருந்தார். ஜூன் 2022 நிலவரப்படி 11 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 5.1 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.