'வாழ்க்கையை மாற்றிய கல்' - ஒரே நாளில் 1.8 மில்லியன் பணக்காரர் ஆன ஏழை இளைஞன்!
ஒரே நாளில் 1.8 மில்லியன் பணக்காரர் ஆகியிருக்கிறார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஏழை இளைஞர் ஒருவர்.
வாழ்க்கை சில சமயங்களில் நமக்கு பல சர்ப்ரைஸ்களை ஒளித்து வைத்திருக்கும். வாழ்க்கை மீதான அத்தனை வெறுப்புகளும், அந்த ஒரு நிமிடத்தில் கரைந்து வழிந்து ஓடிவிடும். அந்த ஒரு நிமிடம் வாழ்க்கையின் எல்லா எதிர்மறை பிம்பங்களை உடைத்து சுக்கு நூறாக்கி விடும். அப்படித்தான் இருந்தது ஜோசுவாவுக்கு.
இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் ஜோசுவா ஹுடகலுங். இவர் பெரிய பணக்காரரெல்லாம் இல்லை. கைநிறைய சம்பாதிப்பவரும் இல்லை. இதையெல்லாம் அறிந்துகொண்டுதானோ என்னவோ வாழ்க்கை இவரது நிலையை மாற்றியுள்ளது. சவப்பெட்டி செய்வதை தன் தொழிலாகக் கொண்ட ஜோசுவாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டிலிருந்தபடியே வழக்கம்போல தன் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் ஏதோ ஒன்று வீட்டின் கூரையின் மீது விழுந்துள்ளது. உடனே பதறிப்போனார் ஜோசுவா. பதறியது அவர் மட்டுமல்ல அக்கம்பக்கத்து வீட்டுக்கார்களும், அங்கிருந்த குழந்தைகளும் தான். சத்தம் பலமாக கேட்கவே அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். வீட்டிலிருந்த ஜோசுவாவும், மனைவியும் கூட வீட்டை விட்டு வெளியேறி தெறித்து ஓடினர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து, தன்னை சுதாரித்துக்கொண்ட ஜோசுவா வீட்டின் கூரையின் மேல், அப்படி என்னதான் விழுந்தது? என்று ஆர்வத்துடன் காணச்சென்றார். கூடவே பயமும் இருந்தது.
பார்த்ததும் ஜோசுவாவுக்கு பெரும் அதிர்ச்சி. ஜோசுவாவின் கண்கள் கண்டதை நாமும் கண்டிருந்தால் இதே அதிர்ச்சிதான் ஏற்பட்டிருக்கும்.
ஆம்! அவர் பார்த்தது ஃபுட் பால் சைஸில் ஒரு கல். அது அப்படி தரையில் பதித்து கிடந்தது. அது சாதாரணக் கல் அல்ல என்பது ஜோசுவாவுக்கு அப்போது தெரியவில்லை. அதன் மதிப்பைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜோசுவா,
“வீட்டில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென ஏதோ சத்தம் கேட்டது. நாங்கள் அனைவரும் பயந்து வீட்டிலிருந்து வெளியேறி ஓடிவிட்டோம். ஏதோ பெரிய மரம்தான் விழுந்துவிட்டது என்று பயந்தோம். விழுந்தது கல் எனத் தெரிந்ததும் உடனே அதே மண்வெட்டி கொண்டு தோண்டி பார்த்தேன். பின்பு அது வீண்மீன் கல் என தெரிய வந்ததது. அதனை அமெரிக்க ஆராய்ச்சியாளா்களிடம் கொடுத்த போது அந்த வீண்மீன் கல் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பழமையானது என அவர்கள் தெரிவித்தனர்," எனக் கூறியுள்ளார்.
இந்த விண்மீன் கல்லை ஆராயாச்சியாளர்களிடமே கொடுத்துள்ளார் ஜோசுவா. இதைப் பெற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஜோசுவாவுக்கு அவர் இதுவரை பார்த்திராத பணத்தை கொடுத்துள்ளனர். 1.8 மில்லியன் டாலாரை கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அப்படியே உறைந்த ஜோசுவா, அந்த 1.8 மில்லியன் டாலர் என்பது, தன் 30 ஆண்டுகால வருமானம் என்பதை எண்ணி பூரிப்படைந்தார்.
இத்தனை பணத்தையும் தான் ஒரே ஆளாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் பேராசைப்படவில்லை. தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு, மீதி பணத்தில் தான் வாழும் கிராமத்தில் தேவலாயம் கட்ட போவதாக அவர் கூறியுள்ளார்.
அதிர்ஷ்டம் ஜோசுவா போன்ற பேராசையில்லாதவர்களுக்குத்தான் கல் வடிவத்தில் கிடைக்கிறது. தன் தேவைக்கு மட்டும் பணத்தை வைத்துக்கொண்டு, மற்றதை பொதுபயன்பாட்டிற்காக செலவழிக்கும் ஜோசுவாவை பாராட்டலாமே!
தகவல் மற்றும் பட உதவி : thejakartapost