'4 காதல் தோல்வி; இந்தியாவின் பிஸினஸ் ஹீரோ'- ரத்தன் டாடா எனும் மாமனிதர்!
ரத்தன் டாடா எனும் மாமனிதரின் கதை!
“சிறிய முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்காது,” என்பார் டாடா. "எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்,” என்றும் கூறுவார்.
குஜராத்தின் சூரத் நகரில் 1937ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா. தனது பத்து வயதில் பொற்றோரை பிரிந்தார். பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார்.
தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு முடித்தார். படித்து முடித்ததும், பெரிய நிறுவனமாக IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணியாற்ற பிடிக்கவில்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா, தாய்நாடு திரும்பினார்.
பின்னர், தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என்று கூறி, பெரிய பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணியாற்றி, நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அறிந்துகொண்டார்.
ஏறக்குறைய 30 வருடம் உழைத்தார். டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார். 1991ம் ஆண்டு, நிறுவனர் ஜே.ஆர்.டி டாடாவால், டாடா குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் ரத்தன் டாடா.
அன்றைக்குத் தொடங்கி இன்றைக்கு வரை, டாடா குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவராக உலகமே வியக்கும் தலைவராக உருவெடுத்திருக்கிறார் ரத்தன் டாட்டா.
என்னதான் செய்தார் ரத்தன் டாடா?
அவர் பொறுப்பேற்பதற்கு முன்புவரை, டாடா குழுமம் என்பது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனம் என்று மட்டுமே இருந்தது. அதை உலக அளவில் அடையாளப்படுத்தினார் ரத்தன் டாட்டா. உலக மார்கெட்டில் மிகப்பெரிய அடிகளை எடுத்து வைத்தது டாடா குழுமம்.
உலகின் மூலை முடுக்கெங்கிலும் தனக்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தவர். ஒவ்வொரு நாட்டிலும், சந்தையிலும் முத்திரைப் பதிக்க விரும்பினார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என இவர் கால்பதிக்காத துறைகளே இருக்கக் கூடாது என்ற முனைப்புடன் அனைத்து துறைகளிலும் டாடாவின் பெயரை இடம்பெற வைத்தார்.
இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது டாடா குழுமத்தைச் சார்ந்த டிசிஎஸ்.
கார்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகரிக்க, 2008ம் ஆண்டு லேன்ட்ரோவர், ஜாக்குவார் நிறுவனங்களின் இந்திய உரிமையை வாங்கினார். வெளிநாட்டில் இந்திய கார்களுக்கு மிகப்பெரிய மார்கெட்டை திறந்துவைத்தவர் ரத்தன் டாட்டா என்றால் அது மிகையில்லை.
உலகின் மிகப்பெரிய இரும்பு நிறுவனமான கோரஸ்-ஐ வாங்கி, இரும்பு உற்பத்தியில் உலக அளவில் பெயர் சொல்லும் நிறுவனமாக வளர்ந்தது டாடா ஸ்டீல்ஸ். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பு வகித்ததால் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது.
உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்!
’டாடா நானோ’ திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டமாகப் பார்க்கப்பட்டது. சாமானியனும் காரில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற விதை தூவியவர் அவர். அதன் எதிரொலியாக உதித்தது தான் டாடா நானோ திட்டம்.
வெறும் 1 லட்ச ரூபாயில் கார்களை வெளியிட முன்வந்தது டாடா. ஆனால், அவரின் இந்த முயற்சியை பார்த்து உலகமே சிரித்தது. 1லட்சத்தில் காரா? குறைந்த தரத்துடன், சிறிய விபத்தில் அப்பளமாக நொறுக்கும் வகையில்தான் இருக்கப்போகிறது என கிண்டல் செய்தனர்.
இவற்றையெல்லாம் உடைக்க எண்ணினார் டாட்டா. அவர்களின் வாய் வார்த்தைகளை பொய்யாக்கிக் காட்டினார்.
இந்திய சந்தைகளில் தரம் வாய்ந்த நானோ கார்கள் ஓடின. விலை 1.25 லட்சம் என, அறிவிக்கப்பட்ட தொகையை விட சற்று கூடுதலாக இருந்தாலும், உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன், நல்ல தரத்துடன் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ.
வாயடைத்து போனது உலகம். இப்படியாக ஒவ்வொரு இடத்திலும் சொல்லி அடித்தார். உலகிற்கு தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டினார். பணத்தை விட தாய்நாடுதான் தனக்கு முக்கியம் என்று கருதுபவர் டாடா. இளைஞர்கள் பலருக்கும் தொழில் நுணுக்கங்களைப் பயிற்று வருகிறார்.
கொடை வள்ளல் டாடா
பிசினசில் வெற்றிப் பெறுபவர்கள் பெரும்பாலும் பணத்தின் பின் ஓடுபவர்களாகவே பார்க்கப்படும் இவ்வுலகில் அதிலிருந்து மாறுபட்ட இருந்த டாடா பலருக்கும் முன்மாதிரியாய் இருக்கிறார் என்றே சொல்லலாம்.
உலகமெங்கும் தொழிலில் பல துறைகளில் சிறக்க நினைத்தாலும், ரத்தன் டாடா பணம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டு இவற்றை செய்யாததே அவரின் தனிச்சிறப்பு.
“வணிகம் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. வாடிக்கையாளர்கள் மற்றும் பங்கு வகிப்போரின் தேவைகளை அறம் சார்ந்த செயல்பாடுகளுடன் பூர்த்தி செய்யவேண்டும்,” என்பார் டாடா.
அவர் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும், திட்டத்திலும் அறம் தலைத்தூக்கி இருக்கும் வகையில் செயல்பட்ட பெருமைமிக்க தொழிலதிபர் டாடா மட்டுமே. அதனால் தான் இவரின் ஊழியர்கள், இவருடன் தொழிலில் ஈடுபவர்களுக்கு இன்றளவும் பெரிய ஊக்கமாகவும், உந்துதலாகவும் உள்ளார் அவர்.
அதேபோல், டாடா ட்ரஸ்ட் மூலமாக ரத்தன் டாடா முன்னெடுத்துள்ள தொண்டு பணிகள் மற்றும் நன்கொடைகள் சொல்லில் அடங்காதவை. அண்மையில் உலகமே கோவிட்-19 வந்து திணறிக்கொண்டிருந்த நிலையில், அதை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக ரத்தன் டாடா 500 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தார்.
களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நோயாளிகளின் சிகிச்சைக்காக சுவாசிக்க உதவும் உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் என பலவற்றுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார் டாடா.
அதேபோல் தமிழகத்துக்கு டாடா குழுமம், கொரோனா கண்டறிவதற்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கிட் கருவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவிக்காக டாடா குழுமத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
பல்வேறு புகழுக்குச் சொந்தக்காரர், உலகத்தையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருமுறை ரத்தன் டாடாவிடம், ’நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செயதுகொள்ளவில்லை?’ எனக் கேட்டதற்கு, சிரிப்புடன் இப்படிக்கூறினார்,
“4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன” என்றார்.
அதுதான் அவர். செல்லப்பிராணிகள் மீது அளப்பறிய அன்பு கொண்டவர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் இதை புரிந்துகொள்ளலாம்.
உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்ததை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும், ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது.
வில் மிஸ் யூ டாடா...!