‘தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை’ - Akasa Air விமான தொடக்கம் குறித்து ராகேஷ் ஜூன்ஜூன்வாலா!
பொருளாதார சூழ்நிலை நிலையாக இல்லாத சமயத்தில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றிற்கு தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் பில்லியனர் ஆதரவு பெற்ற விமான நிறுவனங்களின் சரிவு மற்றும் பணவீக்கம் காரணமாக உலக நாடுகள் அடைந்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மலிவு விலையிலான விமான சேவையை பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தொடங்கியது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கொரோனா லாக்டவுன், ரஷ்யா - உக்ரைன் போர், பணவீக்கம் என அடுத்தடுத்த பிரச்சனைகளால் உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விமானப் போக்குவரத்து என்பது ஒரு நிலையற்ற தொழிலாக மாறி வருகிறது. ’இந்தியாவின் வாரன் பஃபெட்’ என்று அழைக்கப்படும் என அழைக்கப்படும் கோடீஸ்வரர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது புதிய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ சேவையை தொடங்கியுள்ளார்.
பொருளாதார சூழ்நிலை நிலையாக இல்லாத சமயத்தில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றிற்கு தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் சேவை:
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ, இந்திய பங்குச்சந்தைகளின் பெரு முதலீட்டாளர், கோடீஸ்வரர் என பலமுகங்களைக் கொண்ட 62 வயதான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ‘ஆகாசா ஏர்’ என்ற புதிய விமான சேவை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மும்பை-அகமதாபாத் இடையிலான முதல் சேவை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இரண்டு 737 மேக்ஸ் விமானங்களுடன் மும்பை, அகமதாபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய வழித்தடங்களிலும் முதல் சேவையை தொடங்குவதற்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 22ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 7ம் தேதி முதல் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 28 வாராந்திர விமானங்களை இயக்க தொடங்கியுள்ளது. வரும் 13ம் தேதி முதல் பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் 28 வாராந்திர விமான சேவையை தொடங்கப்படவுள்ளது.
டெல்லி சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமானத்தை டெல்லியில் அமைச்சர்கள் சிந்தியா, வி.கே. சிங், சிவில் விமானத்துறை செயலாளர் ராஜீவ் பன்சல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் ஆகாசா ஏர் விமான நிலைய நிறுவனர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா அவரது துணைவியார் ரேகா ஜூன்ஜூன்வாலா, ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி வினய் துபே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தோல்வியடைய தயாராக இருக்கிறேன்:
விமானப் போக்குவரத்து நிறுவனங்களை பொறுத்தவரை பல்வேறு வகையான தோல்விகள் இதற்கு முன்னர் அரங்கேறியுள்ளன.
2012 ஆம் ஆண்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான விஜய் மல்லையா கடனில் சிக்கினார். கடன் தொல்லையால் நாட்டை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். இந்திய வங்கிகளுக்கு ஒரு பில்லியன் அளவுக்கு கடனை திரும்பச் செலுத்த வேண்டியுள்ளதால், மல்லையாவை நாடு கடந்த வேண்டும் என்ற வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஏர் சஹாரா நிறுவனம் தொடர்ச்சியான நஷ்டங்களை சந்தித்து வந்தது. இதனால் அதன் நிறுவனர் சுப்ரதா ராய், 2007ம் ஆண்டு அதனை நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் பின்னர் 2019ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் சரிவுகளை சந்தித்தது, இதற்கு ஏர் சஹாரா நிறுவனத்தை வாங்கியதே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்நிலையில், ஆகாசா ஏர் விமான நிறுவனத்தை ஏன் தொடங்கினேன் என்பது குறித்து ராஜேஷ் ஜூன்ஜூன்வாலா கூறுகையில்,
“நான் ஏன் ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கினேன் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு பதிலளிப்பதை விட, நான் தோல்விக்கு தயாராக இருக்கிறேன். ஏனென்றால் முயற்சி செய்யாமல் இருப்பதை விட, முயற்சி செய்து தோல்வி அடைவது நல்லது,” எனக்கூறியுள்ளார்.
மேலும், ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்த கருத்தை தனிப்பட்ட விஷயமாக எடுத்துக் கொண்டது, விமானப் போக்குவரத்தில் முதலீடு செய்தது தவறு என விமர்சிப்பவர்களின் கருத்து தவறானது என நிரூப்பிப்பேன் என்றும் சவால் விட்டுள்ளார்.
இந்தியாவின் 52வது பணக்காரர் ஆன ஜுன்ஜுன்வாலா, நிகர மதிப்பு $3.5 பில்லியன் மற்றும் 30க்கும் மேற்பட்ட இந்திய பங்குகளில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறார், ஆனால், அரிதாகவே தனது சொந்த நிறுவனங்களைத் தொடங்குகிறார்.
விமானப் போக்குவரத்தின் நிலை என்ன?
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் பயணச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில், சில விமானத் தொழில்முனைவோர்களுக்கு விமான சேவை நிறுவனம் லாபம் ஈட்டக்கூடியது என்பதையும் நிரூபித்துகாட்டியுள்ளது.
2006ம் ஆண்டு ராகேஷ் கங்வால் மற்றும் ராகுல் பாட்டியாவால் தொடங்கப்பட்ட இண்டிகோ நிறுவனம் இந்தியாவின் முதன்மையான விமான சேவை நிறுவனமாக வலம் வந்ததோடு, அதன் நிறுவனர்களையும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது. கங்வால் மற்றும் பாட்டியா இருவரும் இண்டிகோ நிறுவனம் மூலமாக 4 பில்லியன் அளவுக்கு வருமானம் பெற்றுள்ளனர்.
ஆனால், தற்போது விமான எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள கணிசமான உயர்வு மற்றும் பலவீனமடைந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் தவிக்கும் தொழில் நிறுவனங்களின் நிலை ஆகியவற்றைக் கருத்திக் கொண்டு பொருளாதார நிபுணர்கள் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் விமான சேவை நிறுவனத்தை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி