'இலவசமாக வேலை பார்க்க ரெடி' - இங்கிலாந்தில் தங்க வித்தியாசமான போஸ்ட் போட்டு சர்ச்சையில் சிக்கிய இந்திய மாணவி!
எப்படியும் இங்கிலாந்தில் தங்கியே ஆக வேண்டும் என்பதற்காக, சம்பளமே இல்லாமல் இலவசமாக பணிபுரியத் தயாராக இருப்பதாக இந்திய மாணவி ஒருவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று, சர்ச்சையில் சிக்கியுள்ளது.
என்னதான் இந்தியாவிலேயே அனைத்து உயர் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும், வெளிநாட்டு மோகம் என்பது இன்னமும் பலருக்குத் தீர்ந்தபாடில்லை.
எப்படியும் வெளிநாட்டில் படித்துவிட வேண்டும், அங்கு வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும். பிறகு, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும், என இக்கரைக்கு அக்கரைப் பச்சையாக பலர் கனவு காண்கின்றனர். அதிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் இந்த ஆசை அதிகமாக உள்ளது. பலரது எதிர்கால இலக்கே வெளிநாட்டுக்குச் செல்வதாகத்தான் உள்ளது.
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால், மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பும் எண்ணம் பலருக்கு இருப்பதில்லை. அப்படித்தான் படிப்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய மாணவி ஒருவர்,
'மீண்டும் தாய்நாடு திரும்ப மனமில்லாமல், தனது விசாவை நீட்டிப்பதற்காக, இலவசமாகக்கூட வேலை செய்து தரத் தயார்...’ என வேலை கேட்டு லிங்ட்டு இன் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
விசாவை நீட்டிக்க முயற்சி
சம்பந்தப்பட்ட அந்த மாணவி, கடந்த 2021ம் ஆண்டு, உயர்கல்விக்காக இங்கிலாந்தில் உள்ள லெஸ்டர் நகரத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சென்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், இன்னும் மூன்று மாதங்களில் அவரது விசாவை மீண்டும் புதுப்பித்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளார்.
ஆனால், தனது படிப்பு முடிந்தும் தாய்நாடு திரும்ப விரும்பாத அந்த மாணவி, தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்க திட்டமிட்டுள்ளார். எனவே, அங்கு எப்படியும் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதைக் காரணம் காட்டி தனது விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம், என திட்டமிட்டுள்ளார் அந்த மாணவி.
இதற்காக அவர் சுமார் 300 நிறுவனங்களுக்கும் அதிகமாக வேலை வேண்டி விண்ணப்பங்களை அனுப்பி உள்ளார். ஆனால், அவரது போதாத காலமோ என்னவோ, அவருக்கு ஒரு இடத்திலும் வேலை கிடைக்கவில்லை. எனவே, தனது இங்கிலாந்து இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, சம்பளம் இல்லாமல் வேலை கொடுத்தால்கூட சம்மதம் என சமூகவலைதளப் பக்கத்தில் அதிரடியான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார் அம்மாணவி.
இலவசமாக வேலை
இது தொடர்பாக தனது லிங்ட்டு இன் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“என்னை ஒரு மாதத்திற்கு இலவசமாக வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். நான் எனது வேலையைச் சரியாகச் செய்யவில்லை என நீங்கள் கருதினால், அந்த கணமே என்னை வேலையில் இருந்து நீக்கி விடுங்கள். நான் உங்களிடம் எதுவும் எதிர்க் கேள்வியே கேட்க மாட்டேன்...” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பதிவில்,
“டிசைன் இன்ஜினியர் படித்துள்ள தனக்கு, அது சம்பந்தமான வேலை கிடைக்குமா எனத் தேடி வருவதாகவும், தனது படிப்பிற்காகப் பெறப்பட்ட விசா இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைவதால், தான் இங்கிலாந்திலேயே தங்கி வேலை தேடுவதற்காக இப்படி ஒரு பதிவை மீண்டும் பதிவு செய்திருப்பதாக," அம்மாணவி குறிப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு முதலே அம்மாணவி விசா ஸ்பான்சர் செய்யும் இங்கிலாந்து நிறுவனத்தில் வேலை தேடி வருகிறாராம். ஆனால், வேலைவாய்ப்பு சந்தையில் தனக்கும், தன் திறமைக்கும் உரிய மதிப்பு கிடைக்கவில்லை என்றும், சுமார் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தும் பயனில்லை என்றும் அந்தப் பதிவில் அவர் சோகமாகக் கூறியுள்ளார்.
அதிரடி ஆஃபர்கள்
அதோடு, இந்தப் பதிவு இங்கிலாந்திலேயே தான் தங்கிக் கொள்வதற்கான தன்னுடைய கடைசி முயற்சி எனக் குறிப்பிட்டுள்ள அம்மாணவி, தனக்கு வேலை வேண்டி பல ஆஃபர்களை தாராளமாக அள்ளி வீசியுள்ளார்.
அதில், தனது ஒரு மாதம் மட்டும் வேலை கொடுத்தால்கூட போதுமானது, அதற்குள் தான் ஒரு நிரந்தர வேலையைத் தேடிக் கொள்வேன் என்பதோடு, வார விடுமுறை கேட்க மாட்டேன், ஓவர்டைம் வேலை பார்க்கத் தயார், ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் என வாரத்தின் 7 நாளும் வேலை பார்த்து, தனது திறமையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மோசமான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார் அந்த மாணவி. தனக்கு வேலை கிடைக்கும் என நினைத்து அவர் போட்ட பதிவு, தற்போது அவரை சர்ச்சையில் சிக்க வைத்து விட்டது.
படித்த படிப்பு தனது தாய்நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என நினைக்காமல், தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்க நினைக்கிறார், இது அபத்தமான முடிவு என நெட்டிசன்கள் பலர் அவரைத் திட்டிப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய், தனது இனவெறியைத் தாக்குதலையையும் இணையத்தில் வாயிலாக அம்மாணவி மீது நடத்தி வருகின்றனர். அவர் தங்கள் நாட்டை விட்டு வெளியேற மறுத்து, ஒட்டுண்ணியாக இங்கேயே தங்கிக் கொள்ள நினைப்பதாக அவரைக் கடுமையாக சாடி வருகின்றனர்.
இதையும் யோசியுங்கள்
அம்மாணவி அறிவித்துள்ள இந்த ஆஃபர்கள், தற்போது வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் அங்கு வேலை தேடுபவர்களுக்கும் ஆபத்தாக அமையலாம் என்றும் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இது முதலாளிகளுக்கு தொழிலாளர்கள் மீதான எதிர்பார்ப்பை வேறு கோணத்திற்கு மாற்றி விடும் அபாயத்தை உண்டாக்கும் என்றும், வேலை பார்க்கும் சூழல் மோசமாக அமைவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதோடு, இப்படி இலவசமாக வேலை செய்வதற்காக முன்வந்தால், அது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் திறமைசாலியை பணிநீக்கம் செய்வதற்கான காரணமாகக்கூட மாறி விடலாம், என்றும் அவர்கள் யதார்த்தமான எச்சரிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர்.
”இப்படி மாதத்திற்கு ஒரு இலவச தொழிலாளி என 12 மாதங்களுக்கும் நிறுவனம் தேர்வு செய்து விட்டால், அதற்கு சம்பளம் தருவதற்கான தேவையே இருக்காது. சம்பளம் மற்றும் இலவச வேலை. இந்த வகையான இடுகைகள் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த மக்கள் உணரவில்லை,” என்று ஒரு ரெடிட் பயனர் கூறியுள்ளார்.
"வெளிநாட்டில் தங்குவதற்கு இந்தியர்கள் எப்படி வேலை கேட்கிறார்கள் என்பதைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது..." என்று ஒரு கருத்தைப் படியுங்கள். "உங்களை வெளியேற்ற விரும்பும் ஒரு நாட்டைப் பிடித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“வெளிநாட்டில் தங்குவதற்காக இந்தியர்கள் எப்படியெல்லாம் வேலை கேட்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. உங்களை வெளியேற்ற விரும்புகின்ற ஒரு நாட்டைப் பிடித்துக் கொள்ள இவ்வளவு பிரயத்தனம் படுகிறீர்களே...” என ஒரு பயனர் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ இந்த புதுமையான பதிவு மூலம் அம்மாணவி இணையத்தில் வைரலாகி விட்டார். ஆனால், அவரது இந்த முயற்சி அவருக்கு பயனளித்ததா, அங்கு வேலை எதுவும் கிடைத்ததா என்பதைப் பற்றி அவராக இனி பதிவு போட்டால்தான் தெரிய வரும்.