50 மில்லியன் Msme நிறுவனங்கள் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாற உதவும் ரிலையன்ஸ் ஜியோ!
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் இந்தியாவின் எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்களுக்கு சந்தையில் தற்போது கிடைக்கும் விலையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்கு விலையில் ஜியோ இணைப்பு கிடைக்கும்.
இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் ரீதியாகப் பலனடையும் வகையில் ஒருங்கிணைந்த ஃபைபர் இணைப்பையும் டிஜிட்டல் தீர்வுகளையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்க உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்திட்டங்கள் மூலம் 50 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பலனடையலாம்.
இத்திட்டத்தின்கீழ் இந்தியாவின் எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்களுக்கு சந்தையில் தற்போது கிடைக்கும் விலையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்கு விலையில் ஜியோ இணைப்பு கிடைக்கும்.
மேலும், இந்நிறுவனங்கள் ஜியோ பார்ட்னர்களுடன் இணையலாம். இதன் மூலம் தங்கள் தொழிலைத் திறம்பட நடத்துவதற்கும் பெருநிறுவனங்களுடன் சிறப்பாக போட்டியிடுவதற்கும் உதவக்கூடிய எளிமையான தீர்வுகளைப் பெறமுடியும். இவ்வாறு ரிலையன்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ஜியோ இயக்குநர் ஆகாஷ் அம்பானி கூறும்போது,
“எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை வழங்கப்படாத காரணத்தால் இந்நிறுவனங்கள் தங்களது தொழிலைத் திறம்பட நடத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வலிமையைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே ஒருங்கிணைந்த எண்டர்பிரைஸ்-கிரேட் வாய்ஸ் மற்றும் தரவு சேவைகள், டிஜிட்டல் தீர்வுகள், சாதனங்கள் போன்றவற்றை சிறு வணிகங்களுக்கு வழங்கி இந்த இடைவெளியை ஜியோபிசினஸ் நிரப்ப உள்ளது,” என்றார்.
எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்கள் இணைப்பு, உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் டூல்களுக்காக மாதந்தோறும் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவிடுகின்றன. மாதத்திற்கு 1,000 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி சிறு நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைக்கலாம்.
ஜியோபிசினஸ் கீழ் வழங்கப்படும் இத்திட்டங்கள் 901 ரூபாயில் தொடங்கி 5,001 ரூபாய் வரை உள்ளது. எம்.எஸ்.எம்.ஈ தேர்வு செய்யும் தீர்வுகளின் பிரிவைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடும்.
எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்கள் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளவோ அல்லது கூடுதல் தகவல்கள் பெறவோ ஜியோ வலைதளத்தைப் பார்வையிடலாம். பிசினஸ் பிரிவிற்குச் சென்று 'இண்டரஸ்டட்’ என்கிற பகுதியில் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அதைத் தொடர்ந்து ஜியோபிசினஸ் எக்சிக்யூடிவ் இவர்களைத் தொடர்புகொள்வார்.