'என் அப்பா ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒரு ஸ்டார்ட் அப்' போல் நிறுவினார்’ – முகேஷ் அம்பானி!
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா மும்பையில் இந்தியாவின் முன்னணி சிஇஓ-க்களுடன் உரையாற்றினார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா மும்பையில் இந்தியாவின் முன்னணி சிஇஓ-க்களிடையே உரையாற்றினார். அவரது சிறப்புரையின் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி உடன் கலந்துரையாடினார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நாதெள்ளா வழிநடத்துவது குறித்து அவரது தலைமைப்பண்பையும் இந்தியாவின் நலனில் பங்களிக்கும் விதத்தையும் முகேஷ் அம்பானி பாராட்டினார்.
“மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நீங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்துவதற்காகவும் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்காகவும் உங்களைப் பாராட்டுகிறேன். அதுமட்டுமின்றி இந்தியாவின் நலனில் மிகப்பெரிய அளவில் நீங்கள் பங்களிப்பதற்காக அனைவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை,” என்றார் அம்பானி.
அதேபோல் நாதெள்ளாவும் இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகப் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பாராட்டினார். இணைய உலகில் மிகக்குறைந்த விலையில் அதிக டேட்டாவை வழங்கி தொழில்முனைவோர்களுக்கு ஜியோ சக்தியளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் ஜியோ நிறுவனம் 2016-ம் ஆண்டு முதல் ஒரு ஜிபி 300 ரூபாயாக இருந்த இணைய டேட்டா கட்டணத்தை 12 ரூபாயாக குறைத்தது. இந்தச் சேவையை அறிமுகப்படுத்தியபோது இந்தத் தொகையை வடா பாவ் விலையுடன் அம்பானி ஒப்பிட்டார்.
இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் மொபைல் புரட்சிக்கு சராசரி இந்தியர்கள் பங்களித்துள்ளதாக ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். அவர் கூறும்போது,
“2020 ஆண்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பார்க்கும் இந்தியாவானது, இதற்கு முன்பு பில் க்ளிண்டன் பார்த்த இந்தியாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது மக்களின் வளர்ச்சி. உலகின் முன்னணி டிஜிட்டல் சமூகமாக இந்தியா உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சியும் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும்,” என்றார்.
சமூகத்தில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் மேம்படுவதற்கான வாய்ப்பை தொழில்நுட்பம் வழங்கமுடியும் என்பது குறித்தும் அம்பானி பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில்,
“என்னுடைய அப்பா நாற்பதாண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒரு ஸ்டார்ட் அப்’பாக நிறுவினார். ஒரே ஒரு மேசை மற்றும் நாற்காலியுடனே இந்நிறுவனம் செயல்படத் தொடங்கியது. பின்னர் ஒரு மைக்ரோ நிறுவனமாகவும் சிறு நிறுவனமாகவும் வளர்ந்து தற்போது பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சிறிய தொழில்முனைவோரும் திருபாய் அம்பானி போல் உருவாகமுடியும்,” என்றார்.
அம்பானியின் மகன் ஆகாஷ், கேமிங் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதால் ஜியோ இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கியம் குறித்து அம்பானியிடம் கேள்வியெழுப்பினார் நாதெள்ளா.
“அடுத்த பத்தாண்டுகளில் நீங்களும் கேம் விளையாடக்கூடும்,” என்று முகேஷ் அம்பானியிடம் தெரிவித்தார் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா. அம்பானி இதற்கு பதிலளிக்கும் விதமாக,
“விரைவில் இசை, திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் காட்டிலும் கேமிங் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையும் என்பது கேமிங் குறித்த புரிதல் இல்லாதவர்களின் கற்பனைக்கும் எட்டாதது,” என்றார்.
வெவ்வேறு அளவுகளிலும் செயல்படும் அனைத்து வகையான நிறுவனங்களுக்காகவும் ஒரு முழுமையான தொழில்நுட்பத் தளத்தை வழங்குவதற்காக மைக்ரோசாஃப்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் மூலோபாய கூட்டு ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ கடந்த மூன்றாண்டுகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பாக வெற்றியடைந்துள்ளது. இதைக் காட்டிலும் பி2பி பிரிவில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக இந்த இரு நிறுவனங்களும் கருதுகிறது. நாதெள்ளா கூறும்போது,
“நாங்கள் ரிலையன்ஸ் உடன் முழுமையாக இணைந்து பணியாற்றுகிறோம். அவர்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடுதல் தொழில்நுட்பத்தை உருவாக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர். ரிலையன்ஸ், மைக்ரோசாஃப்ட் இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்,” என்றார்.
இந்திய நிறுவனங்கள் சொந்தமாக தொழில்நுட்பத் திறனை உருவாக்கி மேம்படுத்திக்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் நாதெள்ளா வலியுறுத்தினார்.
“நிறுவனங்கள் தற்சார்புடன் செயல்பட உதவுவதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா