மீன் வளர்ப்பில் சீசனுக்கு 10 லட்ச ரூபாய் லாபம் ஈட்டும் பொறியாளர்!

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரகார் சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலையில் சேர்ந்தாலும் மீன் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டதால் அந்த வணிகத்தில் களமிறங்கி நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

மீன் வளர்ப்பில் சீசனுக்கு 10 லட்ச ரூபாய் லாபம் ஈட்டும் பொறியாளர்!

Friday June 04, 2021,

2 min Read

விவசாயப் பின்னணி கொண்ட இன்றைய இளம் தலைமுறையினர் உயர்கல்வி, நல்ல நிறுவனத்தில் வேலை, நல்ல சம்பளம் போன்றவற்றை இலக்காகக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறையவில்லை.


உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரகார் அவரது அப்பாவின் விருப்பப்படி படிப்பை முடித்தாலும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல வருவாய் ஈட்டி வருகிறார்.


உத்திரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகார். இவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பிரகாரின் அப்பா ஒரு விவசாயி. பிரகாரை விவசாயத்தில் ஈடுபடுத்துவதில் அவரது அப்பாவிற்கு விருப்பமில்லை. மகனை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்பதே இவரது கனவு. பிரகார் சிவில் என்ஜினியர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார்.


பிரகார் தனது கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்தார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தார். இவருக்கு விவசாயத்தில் ஆர்வம் இருந்தாலும் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்மானித்தார். பொறியியல் படிப்பில் சேர்ந்து அப்பாவின் ஆசைப்படியே சிவில் இன்ஜினியரிங் முடித்தார்.

1

பொறியியல் படிப்பை முடித்த பிரகாருக்கு மேற்கு வங்கத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பணி நிமித்தமாக பிரகார் அடிக்கடி பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரிசா, மேற்குவங்கம் போன்ற பகுதிகளிலுக்குச் செல்லும்போது மீன்பிடித்தொழில் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. மீன் வளர்ப்பில் ஆர்வம் பிறந்தது.


பிரகார் தனது கிராமத்தில் பாரம்பரிய விவசாய நடைமுறைகளுடன் மீன் வளர்ப்பிலும் ஈடுபடத் தீர்மானித்தார். குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெற போராடவேண்டியிருந்தது. எப்படியோ அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து வணிகத்தை தொடங்க ஏற்பாடு செய்தார்.


உள்ளூர் மீன்வளத் துறையை அணுகினார். ஆனால் இது பெரிதாக பலனளிக்கவில்லை. துறை சார்ந்த நபர்களுக்கே மீன் வளர்ப்பில் நிபுணத்துவம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

மீன் வளர்ப்பு நுட்பங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். திறனை மெருகேற்றிக்கொள்ள விரும்பிய பிரகார் உத்திரப்பிரதேசத்தில் மேஜா பகுதியில் மீன்வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரைத் தொடர்புகொண்டு கிராமத்திற்கு வருமாறு அழைத்தார்.

பிரகாருடன் தங்கியிருந்து அந்த நிபுணர் உரம் இடும் முறைகளையும் நுட்பங்களையும் குறித்து ஆலோசனை வழங்கினார். இதைப் பின்பற்றிய பிரகாரால் பலனைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. நல்ல லாபம் கிடைத்தது.

மீன் வளர்ப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்திய பிரகார் 10 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டினார்.

பிரகார் லாபம் ஈட்டியதுடன் தனது பகுதியைச் சேர்ந்த மற்ற விவசாயிகளும் கூடுதல் வருவாய் ஈட்ட உதவ ஆரம்பித்தார். அவர்களது வழக்கமான விவசாய நடைமுறைகளுடன் மீன் வளர்ப்பையும் மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறார்.


ஹிந்தி: ஷோபித் ஷீல் | தமிழில்: ஸ்ரீவித்யா

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற