15 மாதங்களில் ICC-யின் விருதைப் பெற்ற இளம் கிரிக்கெட் வீராங்கனை; யார் இந்த ரேணுகா சிங்?
2022ம் ஆண்டின் ஐசிசி மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2022ம் ஆண்டின் ஐசிசி மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் 2022 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்காக அவர் திறமையான மூன்று வீராங்கனைகளை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான டார்சி பிரவுன், இங்கிலாந்து பேட்ஸ்வுமனான ஆலிஸ் கேப்சி மற்றும் இந்திய வீராங்கனை யாஸ்திகா பாட்டியா ஆகியோரை வீழ்த்தி விருதை வென்றார். இதனுடன், ஐசிசி மகளிர் டி20 ஆண்டின் சிறந்த அணியிலும் ரேணுகா இடம் பிடித்துள்ளார். அவர் யார், அவர் செய்துள்ள சாதனைகள் என்னென்ன என பார்க்கலாம்...
யார் இந்த ரேணுகா சிங் தாகூர்?
ரேணுகா சிங் தாக்கூர், பிப்ரவரி 1, 1996ம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள பர்சா என்ற கிராமத்தில் பிறந்தார். தனது மகளை கிரிக்கெட் வீராங்கனையாக ஆக்க வேண்டும் என்ற தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாகவே ரேணுகா சிங்கிற்கு கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்துள்ளது.
ரேணுகா சிங்கின் தந்தை கேஹர் சிங் தாகூர் இமாச்சலப் பிரதேசத்தின் நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ரோஹ்ருவில் பணியாற்றியவர். அவர் மறைவிற்கு பிறகு தான் கிரிக்கெட் போட்டிகளில் சாதிப்பதை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக அவரது உருவத்தை தனது கையில் டாட்டூவாக வரைந்துள்ளார்.
கேஹர் சிங் தீவிர கிரிக்கெட் ரசிகர். தனது மூத்த மகனுக்கு கூட இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான வினோத் காம்ப்ளி நினைவாக வினோத் சிங் தாகூர் என்றே பெயர் வைத்துள்ளார். தந்தையின் மறைவிற்கு பிறகு ரேணுகாவின் தாயார் சுனிதாவிற்கு அவரது வேலை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக ரேணுகாவும், அவரது அண்ணனும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், ஒருவரது வருமானத்தை மட்டும் வைத்து இரண்டு பேருக்கும் கிரிக்கெட் பயிற்சிக்கான செலவை சரி கட்ட முடியாததால் வினோத் கிரிக்கெட் பயிற்சியை கைவிட வேண்டியதானது. அவருக்கு பதிலாக ரேணுகா மட்டுமே பயிற்சியைத் தொடர்ந்தார்.
2009 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் பெண்களுக்கான ரெசிடன்சியல் அகாடமியில் இணையும் வாய்ப்பு ரேணுகாவிற்கு கிடைத்தது. இதுதான் ரேணுகாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த அகடாமியில் பயிற்சியாளர்கள் பவன் சென், வீணா பாண்டே ஆகியோர் ரேணுகாவிற்கு பயிற்சி அளித்தனர்.
கல்வித் தகுதி:
2000 ஆம் ஆண்டில், ரேணுகா சிங் தாக்கூர் தனது இடைநிலைக் கல்வியை தர்மசாலாவில் உள்ள ஜி.எஸ்.எஸ். பள்ளியிலும், மேல்நிலை படிப்பை காங்க்ராவில் உள்ள JAV மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கல்சா கல்லூரியிலும், தர்ம சாலாவில் உள்ள அரசு கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தார்.
15 மாதத்தில் தடம் பதித்த ரேணுகா:
2016ல் கர்நாடகாவுக்கு எதிரான அண்டர் 19 போட்டியில் களமிறங்கிய ரேணுகா சிங் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு BCCI மகளிர் ஒரு நாள் போட்டியில் 23 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்களை வீழ்த்திய முன்னணி வீராங்கனையாக மாறினார்.
அதன் பின்னர், ரேணுகா சிங் ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய டி20 போட்டி அவரது கிரிக்கெட் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு நாள் டிராபியில் ஐந்து ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
பிப்ரவரி 2020ல் நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்தின் போது, அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமியின் கேப்டன்சியின் கீழ் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ரேணுகா சிங் 2022ம் ஆண்டு ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வானார்.
2022ம் ஆண்டில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில், தாக்கூர் 29 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை (ஒருநாள் போட்டிகளில் 18 மற்றும் டி20 போட்டிகளில் 22) எடுத்துள்ளார்.
2022ம் நடந்த காமன்வெல்த் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ODI மற்றும் T20I சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டிகளில் ரேணுகாவின் பந்துவீச்சு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இந்த போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்க காரணமாக அமைந்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, வெள்ளிப் பதக்கம் வென்ற ரேணுகா தனது அபாரமான பந்து வீச்சு மூலமாக பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகள் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தை பிடித்தார்.
இந்தியாவுக்கு எதிராக 155 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலியா ஐந்தாவது ஓவரில் 34/4 என்ற கணக்கில் சுருண்டது.
அலிசா ஹீலி, பெத் மூனி, கேப்டன் மெக் லானிங் மற்றும் தஹ்லியா மெக்ராத் உட்பட 4 விக்கெட்டுகளையும் ரேணுகா சிங் வீழ்த்திய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
தனது 15 மாத கேரியரில் 25 டி 20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரேணுகா சிங், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெறும் 7 போட்டிகளிலேயே 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது, 2022ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை என்ற விருதைப் பெற காரணமாக அமைந்துள்ளது.
கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்டும், இன்று இந்திய அணிக்கே கேப்டனாகிய ‘சச்சின் சிவா’