ரூ40 ஆயிரம் நகைக்கடன் பெற்று பிரதமர் அலுவலகத்துக்கு பொருட்களை விற்று, ரூ.1கோடி டெர்ன்ஓவர் செய்யும் மதுரைப்பெண்!
2016 மகிலா வங்கியில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று, தொழிலை துவங்கிய மதுரையைச் சேர்ந்த அருள்மொழி சரவணன், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பொருள்களை அரசின் ‘ஜெம்’ இ-மார்கெட்ப்ளேஸ் ஆன்லைன் தளம் மூலம் விற்று, பிரதமர் மோடியின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
ஆம், ரேடியோவில் பிரதமர் உரையாற்றும் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் அருள்மொழியை பற்றிக்கூறி பாராட்டியதுடன், கடந்தமாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவந்த பிரதமர், அருள்மொழியை நேரில் சந்தித்து பேசினார். அத்துடன் இல்லாமல், பிரதமர் யுவர்ஸ்டோரிக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலும் அருள்மொழியை பற்றி பகிரந்துள்ளார்.
பிரதமர் புகுழும் அருள்மொழி யார்?
மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் உள்ள குட்டி கிராமமான தொட்டப்பநாயக்கனூரை பிறந்தவர் அருள்மொழி. குடும்பச் சூழலின் காரணமாக கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான வசதியின்றி, பன்னிரெண்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்து ஓராண்டிலே 19 வயதில், அருள்மொழிக்கு மணம் முடிக்கப்பட்டள்ளது.
இரு குழந்தைகள், குடும்பம் என பொறுப்புகளுடன் மதுரையில் செட்டிலாகியுள்ளனர். வேலைக்குச் சென்றால் குழந்தைகளை கவனிக்க முடியாது என்ற காரணத்தினால் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையே அவர் சிந்தையில் இல்லை.
“வேலைக்கு செல்லாமலே குடும்ப வருவாயை எப்படி பெருக்குவது என்பது குறித்து தேடித் தேடி படித்தேன். அப்படி தான், செய்தித்தாளில் ஒருமுறை அரசுஅலுவலகங்களுக்கு பொருள்களை விற்கும் தளமான GeM (Government e Marketplace) இணையதளம் பற்றி தெரிந்துகொண்டேன். உடனே, அலுவலக பொருள்களை சப்ளை செய்வதாக பதிவு செய்தேன். என் நகைகளை 40,000 ரூபாயுக்கு அடகு வைத்து அலுவலக பொருள்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேமிப்பில் வைத்துக்கொண்டேன்.”
ஜெம்-ல் பதிந்தது அவருடைய முன்னேற்றத்துக்கான முதல் படியாய் இருந்தாலும், அதன் பிறகு வலிநிறைந்த காத்திருப்பு இருந்தது. ஏனெனில், இணையதளத்தில் பதிவு செய்து பொருள்களை வாங்கிவைத்து ஆர்டருக்காக இரு மாதங்கள் காத்திருந்தும் எந்தவொரு ஆர்டரும் கிடைக்கவில்லை.
“தொடங்கிய முதல் இரு மாதங்களுக்கு எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை,” எனும் அவரது பெருமுயற்சி மற்றும் பொறுமைக்கு கிடைத்த பரிசாய் வந்தது முதல் ஆர்டர். “இரண்டு மாதங்களுக்குப் பிறகு, டெல்லியிலுள்ள ஹெல்த் டிபார்ட்மென்டிலிருந்து 243ரூபாய் மதிப்புக் கொண்ட 10 ஸ்டாம்ப் பேடுகள் கேட்டு ஆர்டர் கிடைத்தது,”
என்று தனது முதல் ஆர்டரை நினைவுகூறுகிறார் அருள்மொழி. மிகக்குறைந்த
லாபத்துக்கு பொருள்களை சப்ளை செய்யும் அருள்மொழிக்கு தொடக்கத்தில் கிடைத்த குட்டி குட்டி ஆர்டர்கள் கொடுத்த ஊக்கம், தொழிலை விரிவுப்படுத்துவதற்கான உந்துசக்தியை கொடுத்துள்ளது.
விற்கும் பொருள்களின் பட்டியலில் பலவற்றை சேர்த்து தொழிலை விரிவுப்படுத்தியுள்ளார். அதற்காக மத்திய அரசின் ’முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ 50,000 கடன் பெற்றுள்ளார்.
தேவைமிகு அலுவலகப் பொருள்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து, மொத்தக்கடைகளில் இருந்து பொருள்களை வாங்கி உள்ளார். பொருள்களை கொள்முதல் செய்வதில் தொடங்கி, பொருள்களை டெலிவரி கொடுப்பது வரைக்குமான அனைத்து செயல்பாடுகளையும் அருள்மொழி பார்த்து கொண்டாலும், அதற்கு பக்கபலமாய் இருக்கின்றனர் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர்.
“ஏன், அலுவலகப்பொருள்களை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டால், விரைவில் கெட்டுபோகக்கூடிய பொருள்களை வாங்கி விற்பதைவிட இதில் ரிஸ்க் குறைவு.” என்றவர் தொடர்ந்து கூறுகையில்,
“நான் பொருள்களை டெலிவர் கொடுப்பதற்கு இந்திய போஸ்ட்- ஐ பயன்படுத்துகிறேன். நாட்டின் தொலைத்தூர முக்கில் உள்ள நகரங்களுக்கு பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் சிறந்து விளங்குகிறது. நாங்கள் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லே பகுதியிலிருந்து கிடைத்த ஆர்டரை அனுப்பி வைத்தோம்”என்கிறார்.
இச்சமயத்தில் தான் கிடைத்த ஒரு ஆர்டர் அருள்மொழியின் இன்றைய வளர்ச்சிக்கான அடித்தளமக அமைந்தது. ஏனெனில், ஆர்டர் பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்தது. பிரதமர் அலுவலகத்திலிருந்து ரூ 1,600 மதிப்புள்ள இரண்டு தெர்மோ பிளாஸ்குகள் ஆர்டர் கிடைத்துள்ளது.
மகிழ்ச்சியில் திகைத்த அருள்மொழி பிளாஸ்க்குடன் சேர்த்து, மத்திய அரசின் முத்ரா திட்டத்திலே நிதியுதவி பெற்று, அரசால் தொடங்கப்பட்ட GeM இணையதளத்திலே வணிகம் செய்து குடும்பத்துக்கான வருவாயை பெருக்க முடிந்ததுடன், நிதி ரீதியாக சுயாதீனமாக செயல்பட முடிவதாகக்கூறி அதற்கு நன்றி தெரிவித்து கடிதம்ஒன்றையும் பிரதமருக்கு எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
அப்போதே, வானொலியில் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் அருள்மொழியின் வெற்றிக்கதையை நாடறிய தெரியப்படுத்தினார் பிரதமர் மோடி.
“என் விவரங்களை கேட்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து போன் செய்திருந்தனர். ரேடியோவில் மோடி என்னைப் பற்றி பேசியிருப்பதை மறுநாள் பத்திரிக்கைகளில் படித்தே தெரிந்துகொண்டேன்,” என்கிறார்.
அச்சம்பவத்துக்கு பிறகிருந்து பிரதமர் மோடி, ஒரு பெண் மனது வைத்தால் எதையும் சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் அருள்மொழி என்று பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார். அதுவே, அருள்மொழியை பல மடங்கு பிரபலப்படுத்தியது.
கடந்துவந்த தொழில் பயணத்தில் சந்தித்த சவாலை பற்றி அவரிடம் கேட்டதற்கு, ரூ2,74,000 மதிப்புள்ள ஆர்டரை முடித்தது பெரும் சவாலாகயிருந்தது என்கிறார்.
“50க்கும் மேற்பட்ட வகையான பொருள்கள் தனித்தனி இடங்களில் வாங்கப்பட்டு, பார்சல் செய்து அனுப்பி வைத்தேன். பொருள்கள் பாதுகாப்பாக டெலிவரி ஆகாதோ என்று பயந்து கொண்டேயிருந்தேன். நல்லவேளை சரியாக டெலிவரியாகியது, உரித்த நேரத்தில் பணமும் அனுப்பி வைத்தனர்,” என்று பகிர்ந்தார்.
அவருடைய வாழ்க்கைதரம் எந்தளவுக்கு அப்டேட்டாகியுள்ளது என்பதை குறித்து தெரியப்படுத்தி பிரதமருக்கு மற்றுமொரு கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். வலைத்தளத்தின் கூற்றுப்படி, அவரது ஆண்டுவருவாய் தற்போதைய நிதி ஆண்டில் ரூ 1 கோடியை தாண்டிவிட்டது.
இதேத் தொழிலை விரிவுப்படுத்துவதுடன், அலுவலகப் பொருள்களை சொந்தமாக தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ள அவர் இறுதியாக கூறுகையில்,
“உங்களிடம் புதுத்தொழில் தொடங்க யோசனை இருந்து, நிதியில்லையெனில் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கியில் கடன் பெற முயலுங்கள். நீங்கள் ஒரு புத்திசாலியான, நேர்மையான, கடின உழைப்பாளியாக இருந்தால், வானமே உங்களது எல்லை,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி தூபே | தமிழில்: ஜெயஸ்ரீ