Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கார்பரேட் டூ தொழில் முனைவு: ஆன்லைனில் தங்க நகை விற்பனையில் நம்பகத்தன்மை பெற்ற சேலம் பெண்மணி!

15 ஆண்டுகள் டிஜிட்டல் வர்த்தக அனுபவத்தை பாரம்பரியத் தொழிலான நகை விற்பனையில் புகுத்தி ஒரே ஆண்டில் மக்களின் நன்மதிப்பை பெற்று பிரபலமடைந்திருக்கிறார் சேலத்தை சேர்ந்த அபிராமி சந்தோஷ்.

கார்பரேட் டூ தொழில் முனைவு: ஆன்லைனில் தங்க நகை விற்பனையில் நம்பகத்தன்மை பெற்ற சேலம் பெண்மணி!

Monday January 24, 2022 , 5 min Read

வரிசைகட்டும் சுபமுகூர்த்தங்கள், ஒருபுறம் அச்சுறுத்தும் கோவிட், டெல்டா, ஓமிக்ரான். ஆடைகள் முதல் சீர்வரிசை சாமான்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் வாங்கிவிடலாம், திருமணத்திற்கான நகைகளை அப்படி வாங்க முடியுமா?

நகை என்றாலே ஒன்றிற்கு இரண்டு கடை ஏறி இறங்கி டிசைன் பார்த்து வாங்கினால் தான் திருப்தி இருக்கும். அப்படி ஒரே இடத்தில் நம்பகமான நகைக்கடைகளின் ஆபரணங்களை பார்த்து வாங்க முடியுமா என்று கருதுபவர்களின் கவலையை போக்குகிறது ’யெல்லோ’ (Yeloo) ஜூவல்லரி.

தொடங்கிய ஒரே ஆண்டில் பலரின் நன்மதிப்பை பெற்றிருக்கும் ’யெல்லோ’ ஜூவல்லரி உருவான விதம் பற்றி அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ அபிராமி சந்தோஷ் உற்சாகத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

abirami

"எல்லோருக்குமே திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கை எனும் வட்டம் குடும்பம் என்னும் வளையத்திற்குள்ளே சிக்கிக்கொள்ளும். நானும் இதற்கு விதிவிலக்கல்ல ஆனால், என் மகள் பிறந்த பின்னர் எனக்கான அடையாளத்தைத் தேட வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூரில், எங்களுடைய குடும்பம் மிகவும் கட்டுப்பாடான குடும்பம் அதிலும் எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்பிள்ளைகள், நான் முதல் மகள் என்பதால் 19 வயதிலேயே என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

பி.காம் இரண்டாமாண்டு படிக்கும்போதே திருமணம் முடிந்துவிட்டாலும் என்னுடைய கணவர் மற்றும் மாமியார் அனுமதித்ததால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சேலத்திற்கு வந்தேன். இளநிலை பட்டம் மட்டுமே பெற்றிருந்தாலும் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

மகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதும் நேரத்தை பயனுள்ளதாக செலவிட வேண்டும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை என் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். கணவர் வீட்டிலும் பல கட்டுப்பாடுகள் இருந்த போதும் சற்று முற்போக்காக சிந்திப்பார்கள் என்பதால் பகுதி நேரமாக பணியாற்ற அனுமதி பெற்றுக்கொண்டு முதன்முதலில் டெலிகாலராக என்னுடைய வேலையைத் தொடங்கினேன். இப்படித்தான் என்னுடைய பயணமானது ரூ.2,500 சம்பளத்துடன் தொடங்கியது என்கிறார் அபிராமி.

அபிராமி

அபிராமி சந்தோஷ்(இடது) சிஇஓ மற்றும் நிறுவனர், யெல்லோ ஜூவல்லரி

டெலிகாலர் டூ ஒரு நிறுவனத்தில் சேல்ஜ் மேனேஜர் எனத் தொடர்ந்து 7 முதல் 8 நிறுவனத்தில் பயிற்சி மேலாளர், மண்டல பயிற்சி மேலாளர் என்று 15 ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவத்தை பெற்றிருக்கிறார் இவர்.

"என்னுடைய வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது அஸ்மி.காம் (பழைய getit yellow pages) என்னும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றியது. சேலத்தில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு இல்லாததால் ஓராண்டு கோவையில் பணிபுரிய வேண்டிய கட்டாய நிலை ஆனால் 3 மாதங்களிலேயே சேலத்தில் இதன் கிளைப்பிரிவைத் தொடங்கி அதனை கோவை கிளையை விட அதிக வருமானம் ஈட்டுவதாக மாற்றிக்காட்டினேன். இதனால் என் மீதான நம்பிக்கை மற்றும் பதவியும் கூட உயர்வு கண்டேன்.”

4 மாதங்களே பணியாற்றிய நிலையில், 2 பதவி உயர்வுகள் பெற்று மாநிலத் தலைவர் என்னும் பெருமையோடு அந்த நிறுவனத்தில் இருந்து விடைபெற்றேன். அதனைத் தொடர்ந்து ஓயோ ரூம்ஸில் மைக்ரோ மார்க்கெட் சிஇஓவாக பணியில் சேர்ந்தேன். 9 மாதங்கள் இந்தப் புதிய பணியில் சென்னையில் பணியாற்றி அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணையாக இருந்ததால் அதன் பின்னர் சேலம், ஈரோட்டில் ஓயோ ரூம்ஸை அறிமுகம் செய்து அதையும் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டினேன் என்று தன்னுடைய வெற்றிகளை பட்டியலிடுகிறார் அபிராமி.

திருமணத்திற்குப் பின்னர் சேலத்திற்கு வந்துவிட்டாலும் பணி நிமித்தமாக பல ஊர்களுக்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தேன். இடைபட்ட காலத்தில் என்னுடைய மகளும் வளர்ந்து 10ம் வகுப்பு வந்துவிட்டதால், அந்த சமயத்தில் அவளுடைய படிப்பிற்காக நேரம் செலவிட வேண்டும் என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேலத்திற்கே மீண்டும் வந்துவிட்டேன்.

பரபரப்பாக இயங்கிவிட்டு வீட்டில் அமைதியாக என்னால் இருக்க முடியவில்லை. எனக்கு இருக்கும் பழக்கம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து கொண்டு என்னை நானே பரபரப்பாக வைத்துக் கொள்வது அல்லது தூங்கிவிடுவது. பணிக்குச் செல்லாவிட்டாலும் ஏதேனும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று தோழிகளுடன் சேர்ந்து Car Treasure Game எனும் விளையாட்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினோம். சிங்கப்பெண்ணே என்னும் நிகழ்ச்சியை நடத்தி சேலத்தில் இருந்த சாதனைப் பெண்களை வைத்து வீடியோ பதிவு செய்து அந்தப் பாடலை மறுஅறிமுகம் செய்து 26 பிரிவுகளில் பெண்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்கி கவுரவித்தோம்.

Yeloo உருவானது எப்படி?

இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் கோவிட் என்னும் பெருந்தொற்று தமிழகத்திற்குள் நுழைந்ததால் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது திடீரென உதயமானது யோசனை தான் Yeloo online Jewellery.

என்னுடைய அப்பா, கணவர், உறவினர்கள் என பலரும் தங்க நகை வியாபாரத்தில் பல ஆண்டுகளாக இருக்கின்றனர், ஏன் அதற்கு ஒரு புது வடிவத்தை ஆன்லைனில் தரக்கூடாது என்று நினைத்து இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்தேன்.

”நகை வியாபாரமானது அமைப்புசாராத் துறையாகவே இருக்கிறது. ஒரு கடையில் லட்சக்கணக்கில் நகைகள் இருந்தாலும் நமக்கு விருப்பமான டிசைன் இருக்காது, அதுவே ஆன்லைனில் விதவிதமான டிசைன்கள் கொட்டிக் கிடக்கின்றன. எனினும் இணையவழியில் தங்கத்தை வாங்குவதற்கு பலரும் தயங்குகிறார்கள். இந்த இடைவேளையை போக்குவதற்காகவே யெல்லோ ஜூவல்லரி தொடங்கப்பட்டது,” என்றார்.

ஸ்விக்கி, டன்சோ போலத்தான் ’யெல்லோ’வும் நாங்கள் 5 கட்டங்களில் ஆய்வு செய்து நகைக்கடைகளுடன் இணைந்து இந்த வர்த்தகத்தை செய்கிறோம். சேலம், கோவையில் இருக்கும் 100 ஆண்டுகள் பாரம்பரியமான நகைக்கடைகள், வியாபாரிகள், நகை உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்து நானும் என்னுடைய சகோதரியும் இணைந்து முழு நேரமாக இந்த வர்த்தகத்தில் இறங்கினோம்.

yeloo

2021 ஜனவரி மாதத்தில் யெல்லோ தொடங்கப்பட்ட போது மோதிரம் மற்றும் பரிசுப் பொருட்கள் என்று சின்ன சின்ன ஆர்டர்கள் வரத்தொடங்கின. பின்னர், ஊரடங்கு தீவிரமான சமயத்தில் கடைகள் இல்லாததால் பலரும் திருமணத்திற்குத் தேவையான மாங்கல்யம் ஆர்டர் செய்தனர், அதே சமயத்தில் வெளிநாட்டில் இருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கின.

இப்போது பெரிய ஆரம் உள்ளிட்ட நகை என 20க்கும் மேற்பட்ட ஆர்டர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருக்கிறோம். இவை அனைத்துமே 916 ஹால்மார்க் நகைகள். தமிழ்நாட்டிலும் யெல்லோவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எல்லா நகைகளுமே ஹால்மார்க் அங்கீகாரம் பெற்றது, பொருள் வாடிக்கையாளரை சென்று அடையும் வரை எங்களுடைய பொறுப்பு அதாவது கூரியரில் கோளாறுகள் ஏற்படாமல் காப்புரிமையுடன் நகைகளை அனுப்பி வருகிறோம்.

அடுத்ததாக நகை மறுவிற்பனைக்கான உத்தரவாதம், எளிமையான ரிட்டன் கொள்கை என மக்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கக் காரணம் நாங்கள் அளிக்கும் 6 உறுதிமொழிகளாகும்.

நகையை UNBOX செய்வதை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும், இந்த வீடியோவை ஒரு புறம் நாங்கள் விளம்பரத்திற்காக எங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிடுகிறோம், மற்றொருபுறம் பொருள் எந்த நிலையில் வாடிக்கையாளரைச் சென்றடைந்தது என்பதும் இதை வைத்தே உறுதி செய்யப்படும், அதன் அடிப்படையிலேயே பொருளுக்கான ரிட்டன் மதிப்பும் அளிக்கப்படும்.

https://www.yeloo.in/ என்ற எங்களின் இணையதள பக்கத்திலும், முகநூலிலும் ஏராளமான புதுப்புது டிசைன்களில் பலவகைளான நகைகள் விலை மற்றும் அதன் எடையுடன் உள்ளது அதனைப் பார்த்து விருப்பமானவற்றை தேர்வு செய்யலாம் என்கிறார் அபி.

புதிதாக தொழில் தொடங்கிய மூன்று மாதங்கள் எந்த வரவேற்பும் இல்லை எனினும் நான் சோர்ந்து போகவில்லை, என்னுடன் சேர்ந்து 3 பேர் வீட்டிலிருந்தபடியே செயல்பட்டு வந்தோம். மெட்டி, வெள்ளி விளக்கு என ரூ.500ல் தொடங்கிய வர்த்தகமானது 12 மாதங்களில் லட்சக்கணக்கில் பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சுமார் 1000 பேர் எங்களிடம் தொடர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

அதிஷ்டவசமாக இதுவரை எந்த ஆன்லைன் மோசடியிலும் யெல்லோ சிக்கவில்லை மேலும், நகையை அனுப்புவதற்கும் பிரத்யேகமான கூரியர் சேவையை பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவித எதிர்மறை கருத்தும் வரவில்லை.

நகைக்கடையில் வாங்கும் அதே விலையில் ஆன்லைனிலும் அன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்திற்கு ஏற்ப நகைகளை வாங்கலாம். பிரத்யேகமான டிசைன்கள், என்றென்றும் நினைவில் இருக்கும் விதத்திலான தாய்ப்பாலில் செய்யப்படும் நகைகள், உருவம் செதுக்கப்பட்ட நகைகள் உள்ளிட்டவை யெல்லோவின் தனித்துவ கலெக்ஷன்கள், என்கிறார் அபிராமி.

நகை

பெண்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுவிட்டால் குடும்பத்தை கவனிக்கமாட்டார்கள் என்ற கருத்து பல வீடுகளிலும் நிலவுகிறது. இந்த மனநிலையை மாற்றினால் நிச்சயமாக குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாம். இப்போதும் நான் என்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டே தொழிலையும் வெற்றிகரமாக நடத்த முடிகிறது, ஆனால் நான் குடும்பத்தினரின் இந்த நம்பிக்கையை பெறுவதற்கு 15 ஆண்டுகள் ஆகி இருக்கிறது.

இந்த நம்பிக்கையுடன் மக்களின் நன்மதிப்பையும் பெற்று யெல்லோவை நம்பர் 1 ஆன்லைன் தளமாக மாற்ற வேண்டும். சுமார் ரூ. 2 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட யெல்லோ 3வது மாதத்தில் இருந்தே லாபம் ஈட்டத் தொடங்கி இருக்கிறது. விளம்பரத்திற்கான செலவு இல்லை அதே சமயம் விற்பனையிலும் தொய்வு இல்லை என்பதனால் நகைக்கடைகளும் திருப்தியோடு கமிஷனைத் தருகின்றன.

யெல்லோவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்ல நகைகளை அணிந்து பார்க்கும் விதத்திலான அனுபவத்தை தரும் செயலி ஒன்றை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நகையை தேர்வு செய்யும் முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். அதே போன்று உயர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் இணையதளம் ஒன்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் ’யெல்லோ’ உலக அளவில் நம்பகமான பிராண்டாக உருவாக வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம் என்கிறார் அபிராமி சந்தோஷ்.