HCL தலைவர் பதிவியை ராஜினாமா செய்த ஷிவ் நாடார்: மகள் ரோஷ்னி பொறுப்பு ஏற்பு!
ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்துள்ளார்.
ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்துள்ளார். இருப்பினும் அவர் நிர்வாக இயக்குநராகவும் நிறுவனத்தின் தலைமை மூலோபாய அதிகாரியாகவும் பொறுப்புகளைத் தொடர உள்ளார்.
“ஷிவ் நாடார் தலைமை மூலோபாய அதிகாரி பதவியுடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தொடர்வார்,” என்று இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா உடனடியாக பொறுப்பேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயதாகும் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா சமீப காலம் வரை சிஇஓ மற்றும் நிர்வாகி அல்லாத இயக்குநராக (Non-executive Director) பொறுப்பு வகித்து வந்தார்.
நாட்டின் பணக்காரப் பெண்களில் ஒருவரான ரோஷ்னியின் மொத்த சொத்து மதிப்பு 36,800 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுவதாக IIFL Wealth Hurun 2019-ம் ஆண்டின் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹெச்.சி.எல் நிறுவனம் ஜூன் 2020 காலாண்டின் 2,925 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 31.7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கிறது. 2019-ம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் 2,220 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளதாக ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே காலாண்டில் கடந்த ஆண்டு 16,425 கோடி ரூபாயாக இருந்த வருவாயுடன் ஒப்பிடுகையில் மதிப்பாய்வில் உள்ள காலாண்டில் 17,841 கோடி ரூபாயுடன் வருவாய் 8.6% அதிகரித்துள்ளது. மார்ச் காலாண்டில் 18,590 கோடி ரூபாயாக வருவாயுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் குறைந்துள்ளது.
“இந்த காலாண்டின் மோசமான சூழல் எங்கள் வருவாயை பாதிக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டது. இருப்பினும் எங்களது வணிக மாதிரி பணப்புழக்கத்திற்கு பேருதவியாக இருந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் சிஇஓ விஜயகுமார்.
அவர் மேலும் கூறும்போது,
“தேவை அதிகரித்து வருவதைப் பார்க்கமுடிகிறது. இதனால் எங்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹெச்.சி.எல் நிறுவனம் அதன் 1.5 லட்சம் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கப்போவதில்லை
என்றும் கடந்த ஆண்டிற்கான போனஸ் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் லிமிடெட் பங்குகள் மதிப்பு வெள்ளிக்கிழமை 635.35 ரூபாயாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் முந்தைய நாள் 627.75 ரூபாயாக இருந்த மதிப்புடன் ஒப்பிடுகையில் 1.30 சதவீதம் அல்லது 8.15 ரூபாய் உயர்ந்துள்ளது.
தகவல் உதவி: பிசினஸ்டுடே