அழகுப் பொருட்கள் விற்பனையில் ரூ.350 கோடி வருவாய் ஈட்டும் ’வாவ்’ பிராண்ட்
4 ஆண்டுகளுக்கு முன், குறைந்த முதலீட்டில் தோல் பராமரிப்புத் துறையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 1 மில்லியன் டாலர் இழப்பைக் கண்டு கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட நிலையில் மீண்டு எழுந்தது எப்படி?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அரவிந்த் சொக்கே, அஸ்வின் சொக்கே, மனிஷ் சவுத்ரி மற்றும் கரண் சவுத்ரி ஆகியோர் மிகக் குறைந்த முதலீட்டில் தோல் பராமரிப்பு குறித்த துறையில் பெரிய அளவில் வளரவேண்டும் என்ற கனவுடன் தொழில் தொடங்கினர்.
பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து 2019ல் அவர்களின் வாவ் பிராண்ட் உலகளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இவர்களின் ’ஃபிட் அண்ட் க்ளோ’ 'Fit and Glow' நிறுவனம் ரூ.350 கோடிக்கு வணிகம் புரிந்து தொழில் துறையில் புதிய தடம் பதித்துள்ளது.
ஒரு சிறிய ஆஃப்லைன் இருப்பைக் கொண்டு இணையவழி மூலமாகவே ஓர் உலகளாவிய வணிகத்தை உருவாக்க முடிந்துள்ளதே இந்நிறுவனத்தின் மிகப் பெரிய சாதனையாகும். மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், விற்கப்படாத சரக்கு மற்றும் இணையவழி வணிகங்களில் தள்ளுபடிகள் அதிகரித்ததன் காரணமாக 1 மில்லியன் டாலர் இழப்பைக் கண்டது. கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட நிலையிலேயே நிறுவனம் செயல்பட்டது.
அப்போதுதான் அரவிந்த், அஸ்வின், கரண், மனிஷ் ஆகியோர் வாவ் பிராண்ட் மூலம் ஓர் புதிய தொடக்கத்தை உருவாக்கத் திட்டமிட்டனர். மின் வணிகம் மூலம் சுகாதாரம் மற்றும் அழகுப் பொருட்கள் தயாரிப்புத் துறையில் கவனம் செலுத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் தங்களின் சேமிப்புகளைப் பயன்படுத்தி, தரமான தயாரிப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர். அவர்களின் இந்த யுக்தி அவர்களை வணிக உலகின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இதுகுறித்து ஃபிட் & க்ளோவின் இணை நிறுவனர் மனிஷ் கூறியதாவது,
”கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் வணிகம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. எங்கள் வருவாய் மற்றும் தயாரிப்புகளின் வரம்பில் ஒரு நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். எங்களின் கடின உழைப்பு எங்களை உயர்த்தியிருப்பது மிகவும் திருப்தி அளிக்கிறது. புதிய தயாரிப்புகள், வேகமான வளர்ச்சி என எங்களின் வாவ் பிராண்ட் புதிய சூத்திரங்களுடன், நுகர்வோரின் தேவைகளை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.
மேற்கு நாடுகளில் இயற்கையான பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
எங்களின் வாவ் ஸ்கின் சயின்ஸ் அதனை வழங்கியது. எங்களிடம் 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளன. குறிப்பாக எங்கள் நிறுவனம் பராபின் எண்ணெய்கள், சல்பேட்டுகள், நிறமிகள், மினரல் ஆயில் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதில்லை. வாவின் ஆப்பிள் சைடர் வினிகர் ஷாம்பு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அமேசானில் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு ஆகும். இது மாதத்திற்கு 1 மில்லியனுக்கும் மேலாக விற்பனையாகிறது என்கிறார் மனீஷ்.
ஆப்பிள் சைடர் வினிகர் ஷாம்பூவின் வெற்றியைப் பயன்படுத்தி, இந்த பிராண்ட் தோல், ஆரோக்கியம் மற்றும் அழகுப் பொருள் தயாரிப்புகளுக்காக முழு ஆப்பிள் சைடர் வரம்பை உருவாக்கியது. இன்று இவர்கள் ஆப்பிள் சைடர் வினிகரை அடிப்படையாகக் கொண்ட பானம், ஃபேஸ் வாஷ் மற்றும் ஹேர் மாஸ்க் ஆகியவற்றையும் தயாரித்து வெளியிடுகின்றனர்.
வாவ் ஸ்கின் சயின்ஸ் வெங்காய கருப்பு விதை எண்ணெய் தயாரிப்பு எங்களுக்கு எல்லா ஆன்லைன் சந்தைகளிலும் ஹேர் ஆயிலை விற்பனை செய்வதில் முதலிடத்தைப் பெற்றுத் தந்தது. இதேபோல், வாவ் ஸ்கின் சயின்ஸ் அலோவேரா ஜெல் எங்கள் நுகர்வோர் மத்தியில் பெரும் தேவை, திருப்தியையும் பெற்றுத் தந்துள்ளது என்கிறார் மனீஷ்.
இந்த பிராண்ட் நவீன விற்பனை நிலையங்கள், சிறப்பு அழகு மற்றும் பல்பொருள் அங்காடிகள், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் தனது ஆஃப்லைன் விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த பிராண்ட் நாடு முழுவதும் சுமார் 1,600 கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மிக்க சூத்திரங்களை பயன்படுத்தி வாவ் பிராண்ட் தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. பிராண்டின் அனைத்து உற்பத்திகளும் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள அதிநவீன ஆய்வகங்களிலேயே நடைபெறுகின்றன.
வலுவான இணையவழி சந்தைக்கு டிஜிட்டல் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. முதல் சந்தைப்படுத்துபவர்களுக்கு அதிக வாங்குபவர்களை சென்றடைய இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. உண்மையில், 2016ஆம் ஆண்டு நாங்கள் உடல்நலம் மற்றும் அழகு பிராண்ட் குறித்து விவரித்தபோது, யாரும் எங்கள் கதையை நம்பவில்லை.
அந்நாள்களில் அழகு வணிகமானது கடையில் இருக்கும் அழகு உதவியாளர்கள் அல்லது ஆலோசகர்களின் செல்வாக்கை பொறுத்தே இருந்தது. இறுதி வாங்கும் முடிவை எடுக்க அவர்களே நுகர்வோரை நெருக்கினர். ஆனால், டிஜிட்டல் ஊடகங்கள் அனைத்து தடைகளையும் உடைத்துவிட்டன. சமூக ஊடகங்களில் நுகர்வோருக்கு எது நல்லது, கெட்டது என்பது பற்றி அதிகம் தெரியும்.
"இன்றைய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆர்வமுள்ள இளைஞர்களுடன் இணைவது எளிதானது. உண்மையான பயனர் கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இது சந்தையில் மேலும் முன்னேற ஒருவருக்கு உதவுகிறது என்று அவர் கூறுகிறார்.
நிறுவனங்கள் கவனிக்கும் ஓர் பெரிய மாற்றம் என்னவென்றால், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை குடும்பத்தில் மூத்தவர்கள்தான் என்ன அழகு மற்றும் ஆரோக்கியத் தயாரிப்பு பொருள்களை வாங்கவேண்டும் என்பதை முடிவு செய்தனர்.
ஆனால் தற்போது அந்நிலை மாறி இளம்வயதினர் தங்களது செல்போன் மூலம் சமூகவளைதளங்களில் ஊடுருவி தங்களது குடும்பத்திற்கு எது நல்லது, எது வேண்டும் என வாங்கவேண்டியதை தீர்மானிக்கின்றனர். இன்றைய புதிய தலைமுறை நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்கிறார் மற்றும் சர்வதேச போக்குகளுடன் பொருந்தக்கூடிய தயாரிப்புகளை விரும்புகின்றனர். மேலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுடன், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பிராண்டுகளை அதிகம் விரும்புகின்றனர். எனவே, இதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம் என்கிறார் நிறுவனத்தின் இணை நிறுவனர் கரண்.
ஃபிட் & க்ளோ ஐ.டி.சி. மற்றும் எச்.யு.எல். போன்ற அனைத்து முன்னணி நிறுவனங்களுடனும் போட்டியிடுகிறது. டிஜிட்டல் முறையில் வணிகம் மேற்கொள்வதால் எந்த ஆஃப்லைன் வணிகமும் இல்லாமல் ஆன்லைன் மூலமே சிறிய மற்றும் பெரிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களை எளிதில் அடைய முடிந்ததே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.
அமேசான், ஃபிளிப்கார்ட், நைகா, மின்த்ரா மற்றும் பிக்பாஸ்கெட் போன்ற பெரும்பாலான இணையவழி இணையதளங்களில் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கின்றன. எங்கள் தயாரிப்புகள் தயாரிப்புகளை மேம்படுத்த யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் மூலம் அனைத்து தரப்பு நுகர்வோரையும் சென்றடையச் செய்கிறோம் என்கிறார் கரண்.
இன்று, ஃபிட் & க்ளோ, மிகக் குறுகிய காலத்தில் 50 மில்லியன் டாலர் வணிகத்தை மேற்கொண்டுள்ளது. இது ஒரு சாதாரண ஆரம்ப முதலீடாகும். ஒரு வியாபாரத்தை நடத்த பொது அறிவு முக்கியமானதாகும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், உங்கள் மூலதனத்தை, பணத்தை புத்திசாலித்தனமாக லாபம், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு எரிபொருளாகப் பயன்படுத்தவேண்டும் என்கிறார் மனீஷ்.
ஆங்கிலத்தில்: விஷால் கிருஷ்ணா