வீட்டில் இருந்தே பார்க்கிங் புக் செய்யுங்க, இனி கவலை இல்லாம வெளில கிளம்புங்க!
சென்னை ட்ராபிக்கில் பார்கிங் தொல்லை இனி இல்லை...
தமிழகத்தின் தலைநகரம் சென்னை மாநகரின் தலையாயப் பிரச்சனை போக்குவரத்து, கண்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்வது. எல்லா ஊர் மக்களையும் வரவேற்று அரவணைத்துக் கொண்டு இருப்பதால் சென்னையின் மக்கள்தொகை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு எகிறிக்கொண்டே போகிறது. மக்கள் தொகைக்கேற்ப வாகனப் போக்குவரத்தும் உயர்ந்து கொண்டே போகிறது.
வீட்டிற்கு 2 கார், 4 இரு சக்கர வாகனங்கள் என்று பெருகிவிட்ட வாகனப் பயன்பாட்டால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகன நிறுத்தத்திற்கு இடம் இல்லாமல் தெருக்களில் நிறுத்திவிட்டு செல்வதும் நடக்கிறது. ஆசை ஆசையாய் வாகனத்தை வாங்கிவிட்டு போக்குவரத்துக்கு பயந்தும், பார்க்கிங் கிடைக்குமா என்று அஞ்சியுமே அதனை எடுக்க பயப்படும் அக்மார்க் சென்னைவாசியா நீங்க? கவலையை விடுங்க உங்களுடைய தலைவலிக்கு இன்ஸ்டன்ட் ரிலீஃப் தருகிறது சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் பார்க்கிங் செயலி.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், அரசு காலியிடங்களில் பாதுகாப்பான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தித் தர சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
ரூ. 7 கோடி மதிப்பீட்டில் 80 இடங்களில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது முதற்கட்டமாக அண்ணா நகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தியாகராய நகர், வாலாஜா சாலை, காதர் நவாஸ் கான் சாலை உள்ளிட்ட 17 இடங்களில் ’ஸ்மார்ட் பார்க்கிங்’ வசதி அறிமுகபடுத்தப்பட உள்ளது.
இந்தப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதற்கான இடவசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார்களுக்கு மணிக்கு ரூ.20, இரு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காதர் நவாஸ் கான் சாலையில் மட்டும் பிரீமியம் கட்டணமாக ரூ.40 கார்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. கட்டணத்தை பணமாக அல்லது டெபிட்/ கிரெடிட் கார்ட் வழியாக செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் 20% இருசக்கர வாகனங்களுக்கும், 5% மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட உள்ளது. ஜிசிசி என்ற செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பெயர், வாகன எண், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொண்டு, எந்தப் பகுதியில் தனக்கு இடம் வேண்டும் என்பதை முன்கூட்டியே புக் செய்து கொள்ளலாம். அருகில் உள்ள பார்க்கிங்கில் இடமில்லை என்றால் அதற்கு அருகாமையில் உள்ள மற்றொரு இடத்தையும் அந்த செயலி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பொதுமக்கள் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பார்க்கிங் நிறுத்தத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்கள் கண்காணிப்பு, கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணியானது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
3 மாதத்திற்குள்ளாகவோ அல்லது சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னரோ ஸ்மார்ட் பார்க்கிங் அறிமுகம் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் பார்கிங் ஆப் டவுண்ட்லோட் செய்ய: GCC Smart Parking