கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக இலவச செயலி- ‘கல்வி 40’
ஐடி ஊழியர் பிரேம் குமார், கிராமப்புற மாணவர்களுக்கு சிறு சிறு வீடியோக்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம் என அனைத்து பள்ளிப் பாடங்களையும் சிம்பிளாகப் புரியவைக்கும் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
ஆப்ஸ் இன்றி அமையாது உலகு என்றாகிவிட்டது இன்றைய நிலை. கட்டைவிரல் வீரனை பயன்படுத்தி சகலத்துக்கும் ஸ்மார்ட்ஃபோன் செயலிகளை நாடுகின்றனர் மக்கள். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா என நக்கல், நய்யாண்டிகளுக்காகவும், பொழுதுபோக்கிகளாக மட்டுமே ஆப்கள் விளங்காமல், கற்றலுக்கும் உதவுகின்றன. பள்ளிப்பாடம் தொடங்கி அரசுத் தேர்வுக்கான பாடம் வரை சகல பாடங்களையும் கற்பிக்க பிளே ஸ்டோரில் கொட்டிகிடக்கின்றன ஆப்ஸ் ஆசான்கள். அவற்றுள் கிராமப்புறங்களில் பயிலும் 3ம் வகுப்பு முதல் 8வகுப்பு வரையுள்ள அரசுப்பள்ளி மாணவர்களை கல்வியினை நேசிக்க வைப்பதையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது ‘கல்வி 40’ செயலி.
மனிதனின் வாழ்க்கையில் கல்வி எந்தளவிற்கு முக்கியம் என்பதை குறித்து அழகாய் 10 குறளில் திருவள்ளுவர் 40வது அதிகாரத்தில் விளக்கியதன் அடையாளமாய் செயலிக்கு ‘கல்வி 40’ என்று பெயரிட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த ஆப். சிறு சிறு வீடியோக்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம் என அனைத்து பள்ளிப் பாடங்களையும் சிம்பிளாகப் புரியவைத்து விடுவது இதன் ஸ்பெஷாலிட்டி.
மாணவர்களை மார்க் பின் ஓடச் சொல்லாமல் அவர்களை கல்வியை நேசிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆப்பினை உருவாக்கியுள்ளார் Bumblebee அறக்கட்டளையின் நிறுவனர் பிரேம் குமார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அறக்கட்டளை லாபநோக்கமற்று மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பாகும். அதன் முதல் திட்டமே - ‘கல்வி 40’
“கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மெதுவாக கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட மாணவர்களுக்கு நன்கு படிக்கக்கூடிய மாணவர்களைவிட அதிகம் முறை சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு புரியும். அப்படியான கற்பித்தல் கிடைக்காத குழந்தைகள் மெல்ல கல்வி மீதான விருப்பு குறைந்து ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். அவர்களது பெற்றோர்களும் படித்திருக்கமாட்டார்கள். வீட்டுக்கு போனால் சொல்லிக்கொடுக்க ஆள் இருக்கவும் மாட்டாங்க.
இந்த இரு பிரச்னைகளையும் எப்படி தீர்ப்பது என்ற சிந்தித்தோம். குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நேரடியாய் சென்று கற்பித்து பிரச்னைக்கு தீர்வுகட்டக்கூடாது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து கிராமங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு எப்படி தீர்வுகொடுக்க முடியும். அப்படி யோசித்ததின் நீட்சியாய் உருவாக்கப்பட்டதே கல்வி 40,” என்றார் பிரேம் குமார்.
சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் ஐடி ஊழியர். படித்து முடித்து பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவருடைய வாழ்க்கையை மாற்றியமைத்தது கல்வி என்பதால், கல்வியின் அவசியத்தை வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்தி அவர்களை ஆர்வத்துடன் கற்கவைக்கவேண்டும் என்ற முனைப்பில் ‘கல்வி 40’ திட்டத்தை தொடங்கியுள்ளார். தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே, வீக்கெண்ட்களிலும், கிடைக்கும் ஃப்ரீ டைம்களிலும் செயலி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
“காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமப்புற அரசுப்பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுடன் கலந்து பேசினோம். வாரம் முழுவதும் பள்ளியில் பணிபுரிந்த சமயத்திலும் வீக்கெண்ட்களில் குடும்ப வேலைகளையும் கவனித்து கொண்டு ஒவ்வொரு ஆசிரியர்களும் தன்னலமற்று எங்களுடன் இணைந்து வீடியோக்களுக்கான கன்டென்ட்டை தயாரித்து கொடுத்தனர். அவர்களுடைய உந்துதலாலே இந்த திட்டம் வெற்றிபெற்றது. ஆசிரியர்கள் வீடியோக்களுக்கான கன்டென்ட்டை ரெடி செய்து கொடுக்க, எடிட்டிங் டீமில் அதை மெருகேற்றினர். சரியாக ஆப்பை உருவாக்க ஒரு ஆண்டு காலம் ஆகியது,” என்றார் பிரேம்.
ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் எக்கச்சக்க கல்வி சார் செயலிகள் ஏகப்பட்ட மெகாபைட் அளவுகளில் இருக்கும். கிராமப்புற மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டதால், 12 மெகாபைட் அளவுக்குள் இதை அடக்கியுள்ளனர்.
கிராமப்புறங்களில் இணையதள சேவை தடையில்லாமல் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதால், அதற்கு தீர்வு காண செயலில் உள்ள பாட வீடியோக்களை 5 மெகாபைட்டுக்கும் குறைவான சைசில் 2 நிமிடத்திற்குள் முடியும் வண்ணம் உருவாக்கியுள்ளனர்.
செயலியின் செயல்பாடு!
1. பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை பற்றி 2 நிமிடத்திற்குள் எளிமையான வீடியோவாக உருவாக்கி பதிவேற்றியுள்ளோம். பாடங்களை வெற்று மனப்பாடம் செய்யும் மாணவனுக்கும் பாடத்தை காட்சியாக பார்க்கையில் விஷயம் என்னவென்பது எளிதில் புரியும். முதல் பருவத்திற்கான பாடத்திற்கு 350 வீடியோக்கள் உள்ளன.
2. மாணவன் படித்திருக்கிறானா? அவனுக்கு பள்ளியில் நடத்திய பாடம் புரிந்ததா? என்பதை பெற்றோர்கள் அறியவேண்டும் என்றால், அவனுக்கு டெஸ்ட் வைத்து திருத்த வேண்டும். அதனால், ஆன்லைன் டெஸ்ட் சேர்த்தோம். சரியா, தவறா மற்றும் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக... ஆகிய இரண்டு முறைகளில் குட்த்டி தேர்வுக்கான வினாத்தாள் அடங்கியுள்ளன. தேர்வினை முடித்தவுடன் இன்ஸ்டன்ட் ரிசல்ட் தரும். எனவே,முதல் முயற்சியில் பத்துக்கு 5 மதிப்பெண் பெற்றால் மீண்டும் மீண்டும் அதே தேர்வினை முயற்சித்து பயிற்சி எடுத்து கொள்ளலாம்.
3. பள்ளித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்நோக்கையில், எப்போதுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். அதனால், போட்டித் தேர்வுகள் என்ற கேட்டகரியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பரீட்சையினை முடிக்க மாணவர்கள் பழகிக்கொள்ளும் விதத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் எந்த அளவுக்கு தேர்வுக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
4. இளம் வயதிலிருக்கும் மாணவர்களுக்கு சிந்தனையாற்றலை அதிகரிக்க வைப்பது அவசியம் என்பதால் நாள்தோறும் ஒரு விடுகதை விடுக்கிறோம். அதற்கான விடை மறுநாளே தெரிந்து கொள்ள முடியும்.
5. நற்பண்புகளை மாணவர்களிடம் விதைக்க தினமும் ஒரு நன்னெறி ஆடியோ கதைகளும் கேட்கலாம். ஒவ்வொரு ஆடியோவும் மூன்று நிமிடங்கள் ஒலிக்கக்கூடியது.
மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்காமல், பாடத்திட்டத்தில் இருக்கும் அனைத்தையும் காட்சி வழிப்படுத்துதல் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், கிராமப்புறங்களில் 15 சதவீத மாணவர்களது குடும்பங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், அதிகப்படியான மாணவர்களை சென்றடைய வைப்பது சிரமமாகவே இருக்கிறது என்கிறார் அவர்.
அதற்காகவே கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை முதலில் செயலியை பயன்படுத்த வைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதற்காக, அவருடைய தனியார் பணியையும் விட்டுவிட்டு முழுநேரமாய் மாணவர்களின் நலனுக்காக உழைக்கத் திட்டமிட்டுள்ளார்.
தன்னலமின்றி வருங்கால சந்ததியினரின் வளர்ச்சிக்காக பாடுபடும் கல்வி 40 -ன் குழுவினருக்கு பாராட்டும்! வாழ்த்தும்!...
ஆப்பினை தரவிறக்கம் செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.kalvi40.android
இணையதள முகவரி: http://www.kalvi40.com/