45 நிறுவனர்களுக்கு ரூ.16.39 கோடிக்கான முதலீட்டு ஆணை - மதுரையில் நடைபெற்ற 'ஸ்டார்ட் அப் திருவிழா'
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2024 - மதுரை பதிப்பு பிரமாண்டமாக நிறைவடைந்தது, இதில், ஸ்டார்ட்அப் சூழமைவின் முக்கிய தலைவர்கள், நிபுணர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 80க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்திய இரண்டு நாள்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2024 - மதுரை பதிப்பு பிரமாண்டமாக நிறைவடைந்தது, இதில், ஸ்டார்ட்அப் சூழமைவின் முக்கிய தலைவர்கள், நிபுணர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் இரண்டாம் நாளில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றுகையில், கடந்த சில பத்தாண்டுகளில் இளைஞர்கள் கல்வி கற்க ‘திராவிட மாடல்’ உதவியுள்ளது, என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“தரமான வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தொழில்முனைவோர், குறிப்பாக தொழில்நுட்பம் போன்ற விரைவாக அளவிடக்கூடிய துறைகளில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தை கருத்தில் கொள்ளும்போது, கிராமப்புற சேவைகள், விவசாயம், உள்ளூர் தொழில்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கவனிப்பது முக்கியம்,“ என்றார்.
ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான பயணயங்களின் போது, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டேன். நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் MSME துறையை மையமாகக் கொண்ட அவர்களின் ஜனநாயகத்தின் வலிமை என்னை மிகவும் கவர்ந்தது.
“சைபர் பாதுகாப்பு மற்றும் காப்புரிமை தாக்கல் போன்ற துறைகளுக்கு அந்த அரசுகள் சிறப்பு நிதி மற்றும் ஆதரவை வழங்குகிறது. பல்வேறு முயற்சிகள் மூலம் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது,” என்றார்.
அவர் நிதித் துறையில் இருந்தபோது, TNIFMC மூலம் தொடங்கப்பட்ட விதை நிதியுடன் StartupTN மற்றும் iTNT ஆகியவற்றை முக்கிய எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார். டெண்டர் விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்ய உதவும் "ஸ்டார்ட்அப் டு கவர்மென்ட்" திட்டத்தை உருவாக்குவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
இதோடு பொது வென்ச்சர் ஃபண்ட் மற்றும் SC/ST வென்ச்சர் ஃபண்ட்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவாக நிறுவப்பட்டன. இந்த முயற்சிகள் கணிசமான வெற்றியைக் கண்டன, என்றார் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு மதுரை ஸ்டார்ட்அப் திருவிழா 2024 நிறைவு குறித்த அறிக்கை:
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்திய இரண்டு நாள்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டு தமிழ்நாடு பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் புத்தொழில் நிதி மற்றும் டான்சீட் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.
டான்சீட் திட்டம்: தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின்கீழ் (டான்சீட்) மொத்தம் 37 பயனாளிகள் ரூ.4.84 கோடிக்கான அனுமதி ஆணைகளைப் பெற்றனர். தொடக்க நிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் மிகச் சிறந்த ஆதார நிதி முதலீட்டுத் திட்டமாகும்.
தமிழ்நாடு பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் புத்தொழில் நிதி:
இத்திட்டத்தின் கீழ், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்களில் பங்கு முதலீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ. 11.55 கோடிக்கான முதலீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
தடம் பரிசுப் பெட்டி:
தடம் பரிசுப் பெட்டியின் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரிசுப் பெட்டியில் கைவினைக் கலைஞர்கள் மற்றும் மலைவாழ் மக்களின் கைவினைப் பொருள்கள் இடம்பெறுகிறது. இத்திருவிழாவில் முக்கிய விருந்தினர் மற்றும் பிற சிறப்பு அழைப்பாளர்களுக்கு தடம் பரிசுப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று ஸ்டார்ட்அப் கண்காட்சி ஆகும், இது புத்தொழில்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் 150 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றன. ஒரு பிரத்யேகப் பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்களின் 100 புதுமையான வாடிக்கையாளரை நேரடியாகச் சென்றடையும் உணவுப் பொருட்கள் இடம்பெற்றன.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், பன்முக தொழில் முனைவோர், மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கண்காட்சியில் ஸ்டார்ட்அப்டிஎன் மூலம் அமைக்கப்பட்ட வெப் 3 மெட்டாவர்ஸ் எக்ஸ்பிரியன்ஸ் (Metaverse Experience) அரங்கம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
விழாவின் ஒரு பகுதியாக முதலீடுகளை ஈர்ப்பதற்கான தொழில் விளக்க (Investor Pitches) அமர்வுகள் இடம்பெற்றன. இதில் 60 -க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொழில் முதலீட்டாளர்களுக்கு தங்களது நிறுவனம் குறித்து விளக்கினர்.
நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா இ.ஆ.ப., ஸ்டார்ட் அப் டிஎன் இயக்க இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் மற்றும் மதுரை மண்டல சிஐஐ துணைத்ன் தலைவர் அஸ்வின் தேசாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.