சேலம், ஓசூர், கடலூரில் ஸ்டார்ட்அப் ஹப் - புத்தாக்க நிறுவனங்களுக்கு அரசின் அறிவிப்புகள் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனகள் துறையின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என அறிந்துகொள்ளலாம்...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். துபாயில் புத்தொழில் மையம் ஒன்று அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்.6) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கிண்டியில் ரூ.175 கோடியில் தொழில்முனைவோர்களுக்கு பயன்படும் வகையிலான அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும். இதன்மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் சிட்கோ மூலம் குறுத்தொழில் முனைவோரின் தேவையை பூர்த்தி செய்து வேலை வாய்ப்புகள் வழங்கக் கூடிய வகையில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும், என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம்:
தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காகவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கவும் மாநில அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது.
அதில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மாநிலத்தில், தொழில் முனைவோர் கல்வி மற்றும் புத்தாக்க ஊக்குவிப்பு துறையில் சிறந்த நிறுவனமாகும். இந்நிறுவனமானது, தமிழக அரசால் 2001ஆம் ஆண்டில், இலாப நோக்கமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு. தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சூழல்களை உருவாக்கி வளர்ப்பதற்கு, வளரும் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் குழுமங்கள், புத்தொழில் புரிபவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, தமிழகத்தில், கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பற்றிய தொழில்முனைவு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு கலாச்சாரத்தினை மாநிலம் முழுவதும் மாநில வள மையமாக செயல்பட்டு வருகிறது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி:
தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் தொழில்களை ஊக்கப்படுத்த மாநில அரசு உகந்த சூழ்நிலையை உருவாக்கியதால், ஸ்டாட்-ஆப் தர வரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு 3-ஆம் நிலைக்கு முன்னேறி "லீடர்" தகுதியை பெற்றுள்ளது.
திமுக அரசு பொறுப்போற்ற போது 2,513 ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 5,740 ஆக உயர்ந்து இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக எம்.எஸ்.எம்.இ அமைச்சர் தா.மோ. அன்பரசன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட்-அப்- நிறுவனங்களை உருவாக்க, புத்தொழில் முனைவோர்களுக்கு ரூ. ]10 லட்சம் ஆதார நிதி வழங்கும் (TANSEED) திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் – அப் நிறுவனங்கள் உள்ளிட்ட 80 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.11 கோடியே 90 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்:
மகளிரை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பெண் நிறுவர்கள் அல்லது முதன்மை பங்குதாரர்களாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் டான்சீட் நிதி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் பெற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 25 சதவீத பங்குதாரர்களாக மகளிர் இருக்க வேண்டும்.
மாநில அரசின் உதவியுடன் இயங்கி வரும் காப்பகங்களில் மகளிர்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு உறுப்பினர் கட்டணம் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான ஓராண்டுக்கான வாடகையை அரசே ஏற்றுக்கொள்கிறது.
இதுவே மகளிருக்கு 75 சதவீத பங்குகளை வழங்கியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், சேவைகளை வழங்கும் பெம்டெக் நிறுவனங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில் விரிவாக்க பயிற்சி, தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் தளம் வழியாக முதலீடு திரட்ட உதவிகள் என பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்:
காலநிலை மாற்ற மேலாண்மை, நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுழற்சி பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பசுமை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவளிக்கும் வகையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டான்சீட் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிதியானது, பசுமை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக ரீதியில் பயனளிக்கும் விதமான பசுமை தொழில்நுட்பத் திட்டங்களுக்கு பசுமை காலநிலை நிதியத்தின் மூலமாக முதலீடு வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
தமிழ்நாடு பட்டியலினத்தவர் ஸ்டார்ட்அப் நிதி:
புதுயுகத் தொழில் முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக 2022-23ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதித்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பிரிவுகளை சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு அல்லது இதுவரை ரூ.18.8 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் பிணையில்லா கடனாக நிதி வழங்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
EDII - தொழில்முனைவோர் பயிற்சி திட்டம்:
தொழில்முனைவோர் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4,356 பள்ளிகளில் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கும், கல்லூரியில் பயிலும் 2 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்களுக்கும் தொழில் முனைவோர் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
EDII - புத்தாக்க பற்று சீட்டு திட்டம்:
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடும் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 242 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.6 கோடியே 40 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்கள்:
இத்திட்டம் மூலம் புதிதாக தொழில் தொடங்கும் தொழில்முனைவோர் நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியை பெற எவ்வாறு வணிகத் திட்டங்களை தயாரிக்க வேண்டும், புதிதாக ஒரு தொழிலை எவ்வாறு தொடங்குவது மற்றும் நிர்வகிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் தங்கள் திட்டங்களை மேம்படுத்திடவும் வெற்றிகரமாக செயல்படுத்தவும் உதவுகிறது.
மகளிருக்கான தொழிற் பூங்காக்கள்:
தமிழ்நாடு சிட்கோவினால் 1226 தொழில்மனைகளுடன் கூடிய கீழ்க்கண்ட 5 மகளிர் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1. திருமுல்லைவாயல் (திருவள்ளூர் மாவட்டம்)
2. திருமுடிவாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
3. கருப்பூர் (சேலம் மாவட்டம்)
4. வாழவந்தான் கோட்டை (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
5. கப்பலூர் (மதுரை மாவட்டம்)
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்:
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், 2023-24ஆம் நிதியாண்டிலிருந்து "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கருவிகளையும் இயந்திரங்களையும், கொள்முதல் செய்வதற்காக, 35 விழுக்காடு மூலதன மானியம் வழங்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்காக 6 விழுக்காடு வட்டி மானியமும் இத்திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலம், ஓசூர், கடலூரில் ஸ்டார்ட்அப் ஹப்:
தமிழ்நாடு அரசு அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் 60 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை, சேலம், நெல்லை, ஈரோடு போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டப்பட்டு வருகிறது.
இதற்காக, மண்டல ’ஸ்டார்ட்அப் ஹப்கள்’ நிறுவப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே சென்னை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய பிராந்தியங்களில் ஸ்டார்ட்அப் ஹப்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
அடுத்ததாக தஞ்சாவூர், சேலம், ஓசூர், கடலூரில் புதிய ஸ்டார்ட்அப் ஹப்கள் அமைக்கப்படுவதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் ஹப்களின் எண்ணிக்கை 8 ஆக உயரக்கூடும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு சேலம், ஓசூர், கடலூரில் மண்டல ஸ்டார்ட்அப் ஹப்கள் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், “மண்டல ஸ்டார்ட்அப் முயற்சியானது தமிழ்நாடு மாநிலத்தில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பின் விநியோகிக்கப்பட்ட வளர்ச்சிக்கு பங்களிக்கும். இந்த பிராந்திய மையங்களின் வெற்றியை உறுதி செய்வதில் சுற்றுச்சூழல் பங்குதாரர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
கிண்டியில் ஸ்டார்ட்அப் உற்பத்தி மையம்:
ஸ்டார்ட்அப்களுக்கான உற்பத்தி வசதிகளை வழங்குவதற்காக பிரத்தியேகமாக கிண்டியில் ஒரு ஸ்டார்ட்அப் உற்பத்தி மையம் நிறுவப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்றாலே அவை சிறிய அளவில் குறைவான பணியாளர்களை தான் கொண்டிருக்கும், எனவே, அதற்கு சின்ன அளவிலான அலுவலகம் அல்லது பணியிடம் போதுமானது என்ற தவறான கருத்து உள்ளது.
ஆனால், மின்சார வாகனங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், ரோபாட்டிக்ஸ் மற்றும் பல துறைகளில் உள்ள பல புதிய வயது நிறுவனங்களுக்கு உற்பத்திக்கு போதுமான இடம் தேவைப்படுகிறது. எனவே, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக முதலீடு இல்லாமல் நிலத்தில் உற்பத்தியை தொடங்கவும், நவீன கட்டமைப்பை உருவாக்கவும் இந்த ’ஸ்டார்ட் அப் உற்பத்தி மையம்’ உருவாக்கப்படுவதாக StartupTN மிஷன் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
அதாவது, கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைக்கப்பட உள்ள ஸ்டார்ட்அப் உற்பத்தி மையத்தில் தகுதியான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடப்படும்.
துபாய் உலகளாவிய ஒருங்கிணைப்பு மையம்:
முதலீடுகளை உயர்த்தவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்களுக்கான சந்தை அணுகல் வாய்ப்புகளை அதிகரிக்கவும் துபாயில் இந்த ஆண்டு உலகளாவிய ஒருங்கிணைப்பு மையத்தை (ஜிசிசி) மாநில அரசு நிறுவும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, StartupTN மிஷன் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் கூறுகையில்,
“முதலீடு, சந்தை அணுகல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மைக்காக துபாயில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளை நேரடியாகச் சென்றடைய இந்த விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தங்களது தாய்நாட்டிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர். மேலும், அவர்களது பங்களிப்பு தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த முக்கியக் காரணியாக அமையும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இருமொழி தொலைபேசி சேவை மையம்:
புத்தொழில் மற்றும் தொழில்முனைவு குறித்த தகவல்களை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் “இருமொழி தொலைபேசி சேவை மையம்” அமைக்கப்பட உள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் '155343' என்ற எண்ணில் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம். இந்த முன்முயற்சி, ஸ்டார்ட்அப் ஆர்வலர்கள், ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு தேவையான தகவல்களைப் பெறவும், அவர்களின் செயல்பாடுகளை எளிதாக முடிக்கவும் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது
உலகத் தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் இணைப்புத்தளம்:
உலக அளவிலான தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களது முதலீடுகளை சரியான திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உலகத் தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ள ஏஞ்சல் முதலீட்டளர்களை, முதலீடுகள் தேவைப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் இணைக்க உதவுகிறது.
மதுரை மாட்டுத்தாவணியில் விரைவில் 'டைட்டில் பார்க்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!