மதுரை மாட்டுத்தாவணியில் விரைவில் 'டைட்டில் பார்க்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" மாநாட்டை தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணியில் “டைட்டில் பார்க்” அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" மாநாட்டை தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணியில் “டைட்டில் பார்க்” அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறை சார்பில் நடைபெற்ற 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' மதுரை மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட இருக்கும் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருதுகளையும், தொழில்முனைவோர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொழில்முனைவோர் மற்றும் வங்கிகளுக்கான விருதுகள்:
தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வங்கிகளையும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கி வருகிறது.
அதன்படி, 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த தொழில் முனைவோருக்கான விருது தூத்துக்குடி மாவட்டம், கல்பகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்திற்கும்; வேளாண் சார்ந்த தொழில்களுக்கான விருது திருப்பத்தூர் மாவட்டம், ப்ரெஸ்ரா பிக்ல்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது தூத்துக்குடி மாவட்டம், ரமேஷ் ப்ளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் சிறந்த மகளிர் தொழில்முனைவோருக்கான விருது செங்கல்பட்டு மாவட்டம், ஐசிஏ ஸ்பெசாலிட்டிஸ் நிறுவனத்திற்கும் சிறப்புப் பிரிவினருக்கான விருது புதுக்கோட்டை மாவட்டம், பிரபு இண்டஸ்ட்ரியல் கேஸ்சஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. முதல் இடத்திற்கான விருதினை இந்தியன் வங்கிக்கும், இரண்டாம் இடத்திற்கான விருதினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், மூன்றாம் இடத்திற்கான விருதினை பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கும், வழங்கப்பட்டது.
4 குழுமங்கள் அமைப்பு:
மாநிலம் முழுவதும் குறுந்தொழில் நிறுவனங்களைக் கொண்ட குறுங்குழுமங்கள் (Micro Clusters) அமைக்கப்படும் என்று 2022-23ஆம் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், நான்கு குழுமங்கள் ரூ.32.98 கோடி அரசு மானியத்துடன் ரூ.44.06 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்,
மதுரை மாவட்டம் விளாச்சேரியில் ரூ.3.63 கோடி அரசு மானியத்துடன் ரூ.4.03 கோடி திட்ட மதிப்பீட்டில் பொம்மைக் குழுமம். தூத்துக்குடியில் 100 விழுக்காடு அரசு மானியத்துடன் ரூ.2.02 கோடி திட்டமதிப்பீட்டில் ஆகாயத்தாமரைக் குழுமம், விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் ரூ.3.40 கோடி அரசு மானியத்துடன் ரூ.3.77 கோடி திட்ட மதிப்பீட்டில் மகளிர் நெசவுக் குழுமம், ஆகிய மூன்று குறுங்குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.
சிறுகுறு விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள்:
- சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு, விற்பனைபத்திரம் பெறுதல் உள்ளிட்ட 12 சேவைகளை ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கான வசதிகளை முதல்வர் தொடங்கிவைத்தார்.
- கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவிக்கும் தகுதியுள்ள குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கேர் (CARE) – "தொழில்முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்" என்கின்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
- சொத்தின் மீது கடன் பெறுவதற்கான உரிமைப்பத்திரம் ஒப்படைத்து (Memorandum of Deposit of Title Deed and Equitable Mortgage) பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் வங்கிகளிலிருந்தே ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்திடும் வசதியினையும், கடன் திருப்பி செலுத்தியபின் பதிவு செய்ததை ஆன்லைன் மூலமே இரத்து செய்து இரசீது பெறுவதற்கான வசதியினையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
- நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்திற்கு (Industry 4.0) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயார்படுத்திக் கொள்ள பயிற்சி வழங்குவதற்காக இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் FaMe TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
மதுரை மாட்டுத் தாவணியில் டைட்டில் பார்க்:
மாநாடு நடைபெறும் மதுரையை மையப்படுத்தி, மற்றொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் வெளியிடுகிறேன் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையின் மையப் பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்தார்.
“தகவல் தொழில்நுட்பம் மற்றும் FINTECH போன்ற அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து SPB மூலம் ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிட்டெட் நிறுவனத்தால், இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்,” என அறிவித்தார்.
மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத் தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், ஐந்து ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் ஃபின்டெக் மற்றும் தகவல் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அது வழி வகுக்கும். முதல் கட்டத்தில், 10,000 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர் எனத் தெரிவித்தார்.