வைரங்களை லேபில் உருவாக்கி நகை தயாரிக்கும் இளைஞர்களை தெரியுமா?
டெல்லியைச் சேர்ந்த Aupulent ஸ்டார்ட் அப் இன்றைய நவீன இளைஞர்களின் ரசனையை அறிந்து அவர்கள் அன்றாடம் அணிந்துகொள்ளும் ஃபேஷன் நகைகளைக் குறைந்த விலையில் வழங்குகிறது.
உலகளவில் இயற்கையான வைரங்களுக்கு மாற்றாக ஆய்வகத்தில் வைரம் உருவாக்கப்படுகின்றன. இதன் விலை குறைவு என்பதால் இளைஞர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இளைஞர்களுக்கு ஃபேஷன் பொருட்களை குறைந்த விலையில் கொடுக்கவேண்டும் என்று விரும்பிய சூர்யா ஜெயின் ஆய்வக வைரங்கள் பிரிவில் செயல்பட முடிவு செய்தார். இவர் ஐந்தாம் தலைமுறையாக நகைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
2021-ம் ஆண்டு அபிஷேக் தக் என்பவருடன் இணைந்து
என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். டெல்லியைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் லேபில் உருவாக்கப்படும் வைரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்கிறது.குறைந்த விலையில் தினமும் அணிந்துகொள்ளும் வகையில் நகைகள் விரும்பும் இளைஞர்களுக்கு இந்த ஸ்டார்ட் அப் சேவையளிக்கிறது.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம்
பூமிக்கு அடியில் வைரம் எப்படி உருவாகிறதோ அதே செயல்முறை ஆய்வகத்தில் பின்பற்றப்பட்டு வைரம் தயாரிக்கப்படுகிறது.
வைரம் தயாரிப்பு வைர விதைகளிலிருந்து தொடங்குகிறது. இந்த விதை மனிதனின் தலைமுடியின் அளவிற்கு தடிமனாக இருக்கும். இந்த விதைகள் பிளாஸ்மா ரியாக்டர் என்கிற சாம்பரில் வைக்கப்படும். வெப்பம், அழுத்தம், கார்பன் சோர்ஸ் போன்றவற்றுடன் விதைகள் அடுக்குகளாக கரடுமுரடாக வளரும்.
இந்த கரடுமுரடான பகுதி கட் செய்யப்பட்டு இயற்கையான வைரங்கள் போன்றே பாலிஷ் செய்யப்படும். ஆய்வகத்தில் முதல் முறையாக வைரத்தை உருவாக்குவதற்கான விதைகள் சுரங்கத்திலிருந்து பெறப்படும். அதன் பிறகு, ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்தின் விதைகளைக் கொண்டு கூடுதல் வைரம் உருவாக்கிக்கொள்ள முடியும்.
சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் அசல் வைரத்திற்கும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டைக் கண்டறிவது மிகவும் கடினம் என்கிறார் சூர்யா.
தொழில்முறை வல்லுநர்களால் மட்டுமே அதற்குரிய பரிசோதனைகள் மூலம் கண்டறியமுடியும் என்கிறார்.
2021-2022 நிதியாண்டின்படி, உலகளவில் வைரத்திற்கான சந்தை 84 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுவதாக Bain & Company நிறுவனம் தெரிவிக்கிறது. 2030ம் ஆண்டில் உலகளாவிய வைர சந்தையில் லேப்களில் உருவாக்கப்படும் வைரம் 10 சதவீதம் பங்களிக்கும் என மதிப்பிடப்படுவதாக Statista சுட்டிக்காட்டுகிறது. 2030-ம் ஆண்டில் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்தின் உலகளாவிய சந்தை அளவு 19.2 மில்லியன் காரட் அளவிற்கு இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியா 24433.97 மில்லியன் டாலர் மதிப்புடைய கட் செய்யப்பட்ட, பாலீஷ் செய்யப்பட்ட வைரங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு 1313.98 மில்லியன் என Gem and Jewellery Promotion Council தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இந்த மதிப்பு 636.43 மில்லியன் டாலராக இருந்தது.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களின் விலை குறைவு – ஏன்?
சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் வைரங்கள் பல கைகளுக்கு மாறி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களிடம் வந்து சேரும்போது விலை பன்மடங்கு அதிகரிக்கிறது என்கிறார் சூர்யா.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் வைரத்தின் போலியான வடிவம் என்றாலும்கூட அசலைப் போன்ற அதே தன்மையுடன் சிறப்பாக இருக்கும் என்கிறார் சூர்யா.
உதாரணத்திற்கு விதை Type IIA வைரமாக இருந்தால் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரமும் அதே Type IIA வைரமாக இருக்கும். சுரங்கங்களிலிருந்து பெறப்படும் ஒட்டுமொத்த வைரங்களில் இந்த Type IIA வகை வைரம் வெறும் 2 சதவீதம் மட்டுமே பங்களிக்கின்றன.
இதுபோன்ற காராணங்களால் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் வைரத்தைக் காட்டிலும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம் விலை குறைவானவை, என்கிறார் Aupulent நிறுவனர் சூர்யா.
இந்நிறுவனம் வைரத்துடன் குறைந்த எடையுடைய தங்கத்தையே பயன்படுத்துகிறது. விலை குறைவாக இருக்க இதுவும் ஒரு காரணம். அதிக கனம் இல்லையென்றாலும் நீடித்திருக்கும்படி இந்நிறுவனத்தின் நகைகள் வடிவமைக்கப்படுகின்றன.
உதய்பூரைச் சேர்ந்த மருத்துவரான ஹிமான்ஷி சிங் தன் தோழிக்காக வைரத்தோடு வாங்க ஆசைப்பட்டார். ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் தயங்கினார். Aupulent பற்றி அவருக்கு தெரியவந்தது. சூர்யா அவருக்கு ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். நகைகளின் தரத்தையும் பட்ஜெட்டையும் கருத்தில் கொண்டு ஹிமான்ஷி 22,000 மதிப்புடைய Aupulent வைரத்தோடு வாங்கியிருக்கிறார்.
தயாரிப்பு வகைகள்
குஜராத்தின் சூரத்தில் உள்ள தொழிற்சாலையில் Aupulent வைரங்கள் கட் செய்யப்பட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்படுகின்றன.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்தால் ஆன கம்மல், செயின், பிரேஸ்லெட், மோதிரம் போன்ற தயாரிப்புகளை Aupulent விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் வலைதளம் மூலம் 15,000-20,000 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் TYPE IIA விதைகளைப் பயன்படுத்துகிறது. உலகளாவிய ஃபேஷன் டிரெண்டிற்கு ஏற்ப டிசைன் செய்யப்படுகின்றன.
“இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய கலெக்ஷன்களை டிரெண்டியாக அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் நகைகள், வைரங்கள் அனைத்துமே முன்னணி சர்வதேச ஆய்வகங்களின் சான்றிதழ் பெற்றிருக்கிறது. BIS Hallmark சான்றிதழும் உள்ளது,” என்கிறார் சூர்யா.
சமூக வலைதளங்கள் மூலமாகவும் நிகழ்வுகள் மூலமாகவும் இந்நிறுவனம் அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகிறது.
விற்பனை
சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களிலேயே Aupulent 100 பீஸ் நகைகளை விற்பனை செய்தது. மூன்றாவது மாதத்தில் 70 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 2022-2023 நிதியாண்டு இறுதியில் 1,500 யூனிட்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
Aupulent இந்தியாவில் Syndiora, Avtaara, Divaa போன்ற பிராண்டுகளுடன் போட்டியிடுகிறது.
நோக்கம்
நகைகள் துறையில் புதுமை படைக்கும் வகையில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற லைஃப்ஸ்டைல் தயாரிப்பை, சுற்றுசூழலுக்கு அதிக பாதிப்பில்லாத வகையில் வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கம் என்கிறார் Aupulent நிறுவனர் சூர்யா.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம் vs சுரங்கத்தில் எடுக்கப்படும் வைரம்
பாரம்பரிய முறையில் சுரங்கத்திலிருந்து வைரம் எடுக்கப்படுவதில் பணிச்சூழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கார்பன் வெளியீட்டைப் பொருத்தவரை ஆய்வகம், சுரங்கம் இரண்டிலிருந்தும் வைரம் பெறப்படும் செயல்முறையில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியாகின்றன.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வளிக்கும் வகையில் சில பிராண்டுகள் ஆய்வகத்தில் வைரத்தை உருவாக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. ஆற்றலுக்கான மாற்று தீர்வு குறித்தும் ஆராய்ந்து வருவதாக சூர்யா தெரிவிக்கிறார்.
குழு விவரங்கள்
சூர்யாவின் குடும்பத்தினர் நகை வணிகத்தில் ஈடுபட்டவர்கள். இவர் இதற்கு முன்பு தனித்தேவைக்கேற்ற நிச்சயதார்த்த மோதிரங்களை வழங்கும் OneCarat என்கிற பி2பி வணிகத்தின் உரிமையாளராக இருந்தார்.
இணை நிறுவனர் அபிஷேக் Aupulent வணிகத்திற்கு முன்பு உதய்பூரில் குடும்ப வணிகத்தில் இணைந்திருந்தார். இது போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வணிகம் தொடர்புடையது.
சுயநிதியில் இயங்கும் Aupulent குழுவில் 5 டிசைனர்கள், 4 தொழில்நுட்ப நிபுணர்கள் என 20 பேர் செயல்படுகிறார்கள்.
வருங்காலத் திட்டம்
ஆண்களுக்கான நகைத் தொகுப்பு உட்பட பல்வேறு புதிய தயாரிப்புகளை புதிய டிசைனில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. டெல்லி, பெங்களூரு அல்லது மும்பை பகுதியில் வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து நகைகளை வாங்கும் வகையில் ஸ்டோர் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ஐஸ்வர்யா லஷ்மி | தமிழில்: ஸ்ரீவித்யா