ரூ.107 கோடி டர்ன்ஓவர்; விரைவில் ஐபிஓ: குழந்தைகள் ஆடை பிரிவில் இந்நிறுவனம் வெற்றி பெற்றது எப்படி?
பெங்களூருவைச் சேர்ந்த Miniklub குழந்தைகள் ஆடை பிராண்ட் நிறுவனர் அஞ்சனா பாசி நிறுவனத்தின் வெற்றிப்பயணம் பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
குழந்தைகளுக்கான ஆடைகள் துறையில் பல பிராண்டுகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த Miniklub குழந்தைகளுக்கான ப்ரீமியம் துணி வகைகளை வழங்குகிறது.
2018-ம் ஆண்டின்படி ஒட்டுமொத்த ஆடை சந்தையில் குழந்தைகளுக்கான ஆடை வகைகள் 20 சதவீதம் பங்களிப்பதாக ஸ்டாடிஸ்டா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது 2028ம் ஆண்டில் 1.7 ட்ரில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான ஆடை பிரிவு சிறப்பாக வளர்ச்சியடையும் என்பதை 2012-ம் ஆண்டே சரியாகக் கணித்தார் Miniklub நிறுவனரும் இயக்குநருமான அஞ்சனா பாசி. அந்த சமயத்தில் கணவர் மனீஷ் பாசி உடன் இணைந்து மற்ற பிராண்டுகளுக்கு ஆடை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
“2002-ம் ஆண்டு முதல் Mothercare, Morrison போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு நாங்கள் விநியோகம் செய்து வந்தோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரிவில் பணியாற்றிய நிலையில் சொந்தமாக வடிவமைத்து விநியோகம் செய்யும் வகையில் பிராண்ட் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டோம்,” என்கிறார் அஞ்சனா.
அவர் மேலும் கூறும்போது, “பெரும்பாலான பிராண்டுகள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. சில்லறை வர்த்தகர்கள் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்திய சந்தையைப் பொருத்தவரை இந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது,” என்கிறார்.
இந்த இடைவெளியை நிரப்பும் பொருட்டு அஞ்சனா, மனீஷ் இருவரும் Miniklub தொடங்கினார்கள்.
இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் 107 கோடி ரூபாய் டர்ன்ஓவர் எட்டும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் பொதுப்பங்கு வெளியீடு குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
’மேட் இன் இந்தியா’ கிட்ஸ் பிராண்ட்
சர்வதேச தரத்தில் ஆடைகளை வழங்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் 2013-ம் ஆண்டு Miniklub தொடங்கப்பட்டதாக அஞ்சனா தெரிவிக்கிறார். 450 மல்டி-பிராண்ட் அவுட்லெட்கள், மிகப்பெரிய ஸ்டோர்கள் என பச்சிளம் குழந்தை முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஆடைகளை வழங்கி வருகிறது.
Miniklub மிந்த்ரா, அமேசான், ஃப்ளிப்கார்ட், அஜியோ போன்ற தளங்கள் மூலம் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. யூகே-வில் மிகப்பெரிய கூட்டுறவு அமைப்பான John Lewis உடன் இணைந்து Miniklub யூகே-வில் Mini Cuddles என்கிற துணை பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான ஃபேஷன் ஆடைகளை Mini Cuddles வழங்குகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள்
Miniklub ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு ஸ்டைல் அறிமுகப்படுத்துகிறது. இந்த கோடைக்காலத்திற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடை வகைகள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக அஞ்சனா தெரிவிக்கிறார்.
”சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளே வருங்காலத்திற்கு முக்கியம் என்பதால் அத்தகைய ஆடை வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார்.
சவால்களும் வருங்காலத் திட்டங்களும்
Miniklub 13 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆடை தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான காட்டன் விலை அதிகரிப்பு மிகப்பெரிய சவால் என்கிறார்.
”சர்வதேச சந்தையில் சீன காட்டன் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் காட்டன் விலை அதிகரித்துள்ளது. ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிகான துணி வகைகளின் விலை அதிகரித்துள்ளது,” என்கிறார்.
இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் 15 சதவீதம் அதிகம் செலவிடவேண்டியிருக்கும். இதனால் ஒட்டுமொத்த நுகர்வின் அளவு குறையும்.
“நாம் ஒரு பொருளை உருவாக்கும்போது இறுதித் தயாரிப்பு எப்படி இருக்கிறது என்பது முக்கியம். எங்களைப் பொருத்தவரை தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் ஆடைகள் மிகுந்த அக்கறையுடன் ஆழமாக ஆய்வு செய்த பின்னரே தயாரிக்கப்பட்டுள்ளது என்கிற உணர்வு பெற்றோர்களுக்கு ஏற்படவேண்டும்,” என்கிறார் அஞ்சனா.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா