சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான மானிய உதவித் திட்டங்கள்!
மத்திய அரசின் சிறு-குறு, நடுத்தர தொழில் துறை, இத்தொழில் துறையினருக்கு பலன் அளிக்கக்கூடிய பல்வேறு மானிய உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது என்ன? அவறின் விவரங்கள் இதோ...
மத்திய அரசின் சிறு-குறு, நடுத்தர தொழில் துறை, இத்தொழில் துறையினருக்கு பலன் அளிக்கக்கூடிய பல்வேறு மானிய உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றின் விவரம் கீழ்வருமாறு:
- குறைபாடு மற்றும் விளைவுகள் இல்லாத திட்டம் – இதுவொரு சான்றளிப்பு திட்டம். சிறு-குறு, நடுத்தர தொழில் துறையினரின் உற்பத்திப் பொருட்கள் குறைகள் அற்றவையா என்பது மதிப்பீடு செய்யப்படும். உற்பத்திக்காக அவர்கள் பின்பற்றும் நடைமுறை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதற்கான மதிப்பீடு 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வெண்கலம், வெள்ளி, தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் என 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். இந்த சான்றிதழ் பெறுவதற்கான மதிப்பீட்டுக் கட்டணத்தை மத்திய அரசு செலவினத்தில் 80% என்ற அளவுக்கு மானியமாக வழங்குவதுடன், விருப்பமுள்ள சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடைவெளியை ஆய்வு செய்யவும், விளைவுகளற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான தர மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை பெறவும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் வழங்குகிறது.
- எல்சிஎம்எஸ்-எளிமையான உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்- இந்த திட்டம் சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பல்வேறு எளிமையான உற்பத்தித் தொழில்நுட்பத்தை பின்பற்றி போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்வதாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 6 முதல் 10 தொழில் பிரிவுகள் வரை உள்ள 300 தொழில் வளாகங்கள் இத்திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆலோசகருக்கான கட்டணத்தில் 80% நிதியுதவியாக திருப்பி அளிக்கப்படுவதுடன், 20%-ஐ சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- தொழில் அரவணைப்பு – ஓராண்டுக்குள் வணிகமயமாக்கக்கூடிய, அறிவுசார்ந்த, புதுமையான வர்த்தக ஆலோசனைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். எந்தவொரு தனிநபர் அல்லது சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனமும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிபெற்றவர் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் / ஐஐடிகள் / என்ஐடிகள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.15 லட்சம் வரை நிதியுதவி பெறக்கூடிய புதுமையான ஆலோசனைகளுக்காக, குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட நிதி 15% கட்டணமாக வசூலிக்கப்படும். மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. மேலும், ஒரு கோடி ரூபாய் வரையிலான விற்று முதலீட்டு நிதியுதவிக்கு, புதிய தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும்.
ஆலோசனை வழங்கும் நிறுவனம், அதற்குத் தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்ளிட்ட தளவாடங்களை கொள்முதல் செய்து உரிய ஆலையை நிறுவ ஒரு கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.
- ஐபிஆர்-அறிவுசார் சொத்துரிமை- சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். பதிவு செய்யப்பட்ட சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், (i) உள்நாட்டு காப்புரிமைக்கு ரூ.1.00 லட்சம் (ii) வெளிநாட்டு காப்புரிமைக்கு ரூ.5.00 லட்சங்கள் (iii) புவிசார் குறியீடு பதிவுக்கு ரூ.2.00 லட்சங்கள் (iv) வணிக முத்திரைக்கு ரூ.0.10 லட்சம் வரை நிதியுதவி பெற தகுதி பெற்றவையாகும்.
- வடிவமைப்பு பயிற்சி நிறுவனம்- காலத்திற்கேற்ற வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு கூட்டிய மதிப்பை நிர்ணயிப்பதற்கான நிபுணத்துவம் வாய்ந்த தீர்வுகளை வழங்கும் அமைப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பதிவு செய்யப்பட்ட அனைத்து உற்பத்தி சார்ந்த சிறு-குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (தனிப்பட்ட அல்லது குழு) இத்திட்டத்தின்கீழ், 3 குறு-சிறு, நடுத்தர தொழில் விண்ணப்பதாரர்களைக் கொண்ட குழுவுக்கு, வடிவமைப்பு ஆலோசனை கட்டணத்தில் (15 முதல் 40 லட்சம்) 75% (குறுந்தொழில்களுக்கு), 60% (சிறு, நடுத்தர தொழில்களுக்கு) நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் ஆவர். அத்துடன் சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இறுதியாண்டு மாணவர்களின் திட்டங்களுக்கு ரூ.1.50 லட்சம் (75%) நிதியுதவியாக வழங்கப்படும். ரூ.50,000 (25%)-ஐ சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
- டிஜிட்டல் சிறு-குறு, நடுத்தரத் தொழில்கள்- தகுதிவாய்ந்த சிறு-குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் கிளவுட் கம்பியூட்டிங் மூலம் ஐசிடி உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகளைப் பின்பற்ற ஊக்கமளித்து உதவி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் இதற்கு தகுதி பெற்றவை. ஈஆர்பி, கணக்கியல், உற்பத்தி வடிவமைப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக இணையவழித் தளம் ஒன்று அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, சிறு-குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
தகுதிவாய்ந்த உத்யோக் ஆதார் ஆவணத்தைப் பெற்றுள்ள, பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு-குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இந்த சலுகைகளை பெற, www.dcmsme.gov.in என்ற இணைய தளம் அல்லது MY MSME செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் நிதியுதவி பெற, இயக்குநர் சிறு-குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், 65/1, ஜிஎஸ்டி சாலை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியிலோ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 044 22501011/12/13 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என சிறு-குறு, நடுத்தரத் தொழில் துறை சென்னை மண்டல இயக்குநர் அறிவித்துள்ளார்.