அன்று மாத வருமானம் 700 ரூபாய்; இன்று கோடிகளை ஈட்டும் 43 பேன்கேக் ஸ்டோர் உரிமையாளர்!
விகேஷ் ஷா இந்திய சந்தையில் பான்கேக்கிற்கான தேவை இருப்பதை உணர்ந்து 99 Pancakes என்கிற பிராண்ட் தொடங்கி மக்களின் சுவையுணர்விற்கு ஏற்ப வெவ்வேறு சுவைகளில் பான்கேக் வழங்குகிறார்.
விகேஷ் ஷாவிற்கு 18 வயதிருக்கும்போது மும்பையில் சிறு கேக் ஷாப் ஒன்றில் வேலை செய்து வந்தார். கூடுதல் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவே இந்த வேலை செய்து வந்தார். ஆனால் பின்னாளில் இந்த அனுபவத்தைக் கொண்டு மிகப்பெரிய வணிகத்தைத் தொடங்குவார் என அவர் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை.
அந்தக் கடையில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் கடுமையாக உழைத்தார். அப்போது அவரது மாத சம்பளம் 700 ரூபாய். கடின உழைப்பு என்றும் வீண்போகாது என்பது இவரது விஷயத்தில் உண்மையானது. இரண்டாண்டுகளில் அந்தக் கடையின் மேலாளர் ஆனார்.
அதன் பிறகு, அந்த வேலையை விட்டு விலகி சொந்தமாக கார்ப்பரேட் கேட்டரிங் நிறுவனம் தொடங்கினார். இதுதவிர உணவுப் பிரிவில் மற்றொரு தொழில் முயற்சியையும் தொடங்கினார்.
2007-ம் ஆண்டு மும்பையில் முதல் ஸ்டோர் திறந்தார். The Happiness Deli என்கிற பேக்கரி திறந்து டெசர்ட் வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆரம்பித்தார். விகேஷ் சந்தை போக்குகளை உன்னிப்பாகக் கவனித்து வருபவர். இவரது ஐரோப்பிய பயணங்களின்போது மக்கள் வெவ்வேறு டாப்பிங்ஸ் சேர்த்த பேன்கேக்கை காலை உணவாக எடுத்துக்கொள்வதை கவனித்தார்.
ஆங்கிலேயர்களின் டெசர்ட் வகைகள் இந்தியாவில் பிரபலமடைந்து வரும் நிலையில் பேன்கேக்கிற்கான தேவையும் சந்தை வாய்ப்பும் இருப்பது அவருக்குப் புரிந்தது.
“இந்தத் துறையில் எனக்கு இருபதாண்டு கால அனுபவம் உள்ளது. இந்தியர்களின் சுவையுணர்வு பற்றிய புரிதல் இருக்கிறது. இந்தியாவில் டெசர்ட் உணவாக பேன்கேக்கை அறிமுகப்படுத்துவது பலனளிக்கும் என்று நம்பினேன்,” என்கிறார்.
பான்கேக் விரைவு சேவை வழங்கும் சங்கிலித் தொடர் உணவகங்களை இந்தியாவில் தொடங்கவேண்டும் என்கிற எண்ணம் விகேஷிற்கு ஏற்பட்டது.
மிகப்பெரிய சந்தையில் செயல்பட்டார்
மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியாவில் பேன்கேக்கை காலை உணவாக யாரும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை விகேஷ் நன்கறிந்திருந்தார்.
”மக்கள் இட்லியையோ வடாபாவையோதான் விரும்புவார்கள்,” என்கிறார்.
இதனால் இந்தியர்களுக்கு ஏற்றவாறு பேன்கேக்கை வழங்க முடிவு செய்தார். இதற்காக அதிகம் மெனக்கெடவில்லை என்று குறிப்பிடும் விகேஷ் பேன்கேக்கில் நியூடெல்லா அல்லது சாக்லேட் சேர்த்தார்.
“இந்தியர்கள் டயட், ஆர்கானிக் உணவு என்றெல்லாம் பேசினாலும்கூட எல்லோருக்குமே என்றாவது ஒரு நாள் சாக்லேட், ஐஸ்கிரீம், பட்டர் போன்ற உணவு வகை, காரமான உணவு வகை போன்றவற்றை சாப்பிடத் தோன்றும்,” என்கிறார் விகேஷ்.
விகேஷ் 2017-ம் ஆண்டு மும்பையின் காலா கோடா பகுதியில் முதல் பேன்கேக் ஸ்பெஷாலிட்டி ஸ்டோர் திறந்தார். 99 ரூபாய்க்கு பேன்கேக் விற்பனை செய்யத் தொடங்கினார். இதனால்தான் 99 Pancakes என்கிற பெயர் வைக்கப்பட்டது.
“எனக்கு மார்க்கெட்டிங் பிரிவில் நிபுணத்துவம் கிடையாது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக் பக்கம்கூட இல்லை. அப்படியிருந்தும் முதல் ஆண்டிலேயே மூன்று அவுட்லெட் திறக்கும் அளவிக்கு வளர்ச்சி இருந்தது,” என்கிறார்.
இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேன்கேக் தயாரிப்பது வளர்ச்சிக்கு உதவுவதாகக் குறிப்பிடுகிறார். வாடிக்கையாளர்களின் கண் எதிரிலேயே ஃப்ரெஷ்ஷாக பேன்கேக் தயாரித்து வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சம்.
குஜராத், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் 65 ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. 2018-19 காலகட்டத்தில் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த இந்நிறுவனம் தற்போது ஜொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
தவறுகள் மூலம் கிடைத்த படிப்பினைகள்
நான்காண்டு காலத்தில் 99 Pancakes வளர்ச்சியை சந்தித்திருந்தபோதும் சவால்களும் சிக்கல்களும் இல்லாத பயணம் இல்லை என்கிறார் விகேஷ்.
ஃப்ரான்சைஸ் மாதிரியை அதிகம் சார்ந்திருந்தது இவர்கள் செய்த தவறுகளில் ஒன்று என அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்ப நாட்களில் வளர்ச்சியடைவதற்காக இந்நிறுவனம் பல அவுட்லெட்களை ஒவ்வொன்றாக ஃப்ரான்சைஸ் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.
“ஃப்ரான்சைஸ் மாதிரியில் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது எளிதாகவே தோன்றியது. நிறுவனத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டிருப்பதாகவும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் அதன் பிறகு மெனுவில் இல்லாத உணவு வகைகளை தரத்தில் சமரசம் செய்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது தெரிந்தது,” என்கிறார்.
அதேபோல் முக்கிய பகுதிகளில் அவுட்லெட் இல்லாததையும் விகேஷ் கவனித்தார்.
இதுபோன்ற தவறுகளை உணர்ந்து துரிதமாக அதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்தினார்.
”ஆரம்பத்தில் லாபகரமாக செயல்படுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும் தற்போது படிப்படியாக நிலையான வளர்ச்சியடைவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்,” என்கிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு 65 அவுட்லெட்கள் இருந்தன. தற்போது 43 மட்டுமே இயங்கி வருகின்றன. அதேபோல் 2020 நிதியாண்டில் 16.5 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 2021 நிதியாண்டில் 7 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதர உணவு வகைகள்
Mad Over Donuts, Dunkin Donuts போன்ற பிராண்டுகளின் முக்கிய தயாரிப்பு டோனட்ஸ். இருந்தபோதும் ஷேக்ஸ், பர்கர் உள்ளிட்ட மற்ற தயாரிப்புகளை இணைத்துக்கொள்வதை ஒரு வணிக உத்தியாக இந்த பிராண்டுகள் பின்பற்றி வருகின்றன.
99 Pancakes பிராண்டும் வேஃபிள்ஸ், ஷேக்ஸ், கேக்ஸ், பீட்சா போன்ற தயாரிப்புகளை மெனுவில் இணைத்துக்கொண்டது. புதிய வகைகளை அறிமுகப்படுத்தினாலும்கூட பேன்கேக் என்றும் முக்கிய பிராடக்டாகவே இருக்கும் என்கிறார்.
“மற்ற வகைகளை மெனுவில் இணைத்துக்கொள்வதில் ஆரம்பத்தில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டே மெனுவை விரிவுபடுத்தினோம்,” என்கிறார்.
வருங்காலத் திட்டங்கள்
அடுத்த 12-18 மாதங்களில் நிதி திரட்ட விகேஷ் விரும்புகிறார். பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீளவேண்டும் என்பதே உடனடி விருப்பமாக உள்ளது. இதற்காக மார்க்கெட்டிங் செயல்பாடுகளில் முதலீடு செய்யவும் கூடுதலாக 25 அவுட்லெட்கள் திறக்கவும் விரும்புகிறார்.
மேலும், பேன்கேக் மிக்ஸ் விற்பனை செய்யும் திட்டமும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 99 Pancakes பிராண்டிற்கு இந்தியாவில் நேரடியாகப் போட்டியாளர்கள் இல்லாதபோதும் சர்வதேச அளவில் பல பிராண்டுகள் செயல்படுவதை சுட்டிக்காட்டினார்.
“தற்சமயம் இளம் சமூகத்தினரை இலக்காகக் கொண்டே செயல்பட்டு வருகிறோம். வரும் நாட்களில் மற்ற பிரிவினருக்கும் சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறேன். சரியான முறையில் வர்த்தகம் செய்யும்போது சந்தை வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் விகேஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா