தனது 4,500 ஊழியர்களை வெளிநாட்டு சுற்றுலா அனுப்பிவைத்த தொழிலதிபர் - யார் இந்த திலிப் சங்வி?
ஒன்றல்ல.. இரண்டல்ல.. தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுமார் 4,500 ஊழியர்களை வியட்நாமிற்கு சுற்றுலா அனுப்பி, ‘இப்படி ஒரு முதலாளி தங்களுக்கும் அமைய மாட்டாரா’ மற்ற நிறுவன ஊழியர்களை ஏங்க வைத்திருக்கிறார் சன் பார்மா நிறுவனத் தலைவரும், இந்தியாவின் 5வது மிகப்பெரிய பணக்காரருமான திலிப் சங்வி.
இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் தான் தொழிலதிபர் திலிப் சங்வி. 1955ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த இவர், தனது தந்தையின் மருந்து டிரேடிங் நிறுவனத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, சன் பார்மா என்ற மிகப்பெரிய மருந்து நிறுவன சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.
இவரது நிறுவனத்தில் சுமார் 4,500 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சி தனது நிறுவனத்திற்கு மட்டும், மேலும் மேலும் லாபம் சேர்க்க வேண்டும் என நினைக்காமல், தனது ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான், தனது நிறுவனம் மேலும் பன்மடங்கு வளரும் என நினைத்துள்ளார் திலிப் சங்கி.
அதன் தொடர்ச்சியாக, தனது மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் 4,500 ஊழியர்களையும் அவர் வியட்நாம் நாட்டுக்கு இன்பச்சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது தற்போது டி என் ஏ உள்ளிட்ட சில ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
வியட்நாம் சுற்றுலா
இந்த 4,500 ஊழியர்களும் மொத்தம் 6 தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு வியட்நாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 26ம் தேதி முதல் நேற்றைய தினம் வரை அவர்கள் விமானங்களில் குழுவாக வியட்நாம் நாட்டுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு குழுவுக்கும் மொத்தம் 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை வியட்நாம் நாட்டின் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் ஹனோய், ஹாலாங், நின்பின், ஹோலோ சிறை, மாசோலேனம், ஹலாங் பே உள்ளிட்ட பல பகுதிகளை அவர்கள் கண்டுகளிக்க உள்ளனர்.
ஊழியர்கள் தங்குவதற்கு மட்டுமின்றி, அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, மொழி பெயர்ப்பாளர்கள் என அனைத்து வசதிகளையும் சன் பார்மா சிறப்பாக திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த திலிப் சங்வி?
இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் தான் தொழிலதிபர் திலிப் சங்வி. ஆகஸ்ட் 26, 2024 நிலவரப்படி, ஷாங்வியின் நிகர மதிப்பு $29.3 பில்லியனாக ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் $5 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும், சன் பார்மா என்ற மிகப்பெரிய மருந்து நிறுவன சாம்ராஜ்ஜியத்தை முன்னெடுத்துச் சென்றாலும், சங்வியின் பயணம் எளிமையான தொடக்கத்தையே கொண்டுள்ளது.
1955ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த இவர், தனது தந்தையின் மருந்து டிரேடிங் நிறுவனத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டார். தன் தந்தை மற்ற நிறுவனங்களிடம் இருந்து, மருந்து வாங்கி, அதனை லாபம் வைத்து விற்பனைக் கண்ட திலிப் சங்கிவிக்கு, நாமே ஒரு மருந்து கம்பெனி ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் உருவானது.
அதன் தொடர்ச்சியாக 1982ல் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த திலிப் சங்வி, தனது தந்தையிடன் ரூ.10,000 ரூபாயை கடனாக வாங்கி, தனது நண்பரான பிரதீப் கோஷுடன் சேர்ந்து சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸை நிறுவினார். குஜராத்தின் வாபியில் சிறிய ஆபரேஷனாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், திலிப் சங்வியின் கடின உழைப்பால் முதல் ஆண்டிலேயே மாபெரும் முன்னேற்றத்தைக் கண்டது.
முக்கிய மருந்துகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த திலிப், வணிக கடன்களைப் பெற்று வாபியில் ஒரு உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார். அதோடு, ஜெனரிக் மருந்துகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, ஆராய்ச்சி மையத்தையும் அவர் நிறுவினார்.
கிடுகிடுவென வளர்ந்த சன் பார்மா
ஆரம்பித்த ஒரே ஆண்டிலேயே சன் பார்மாசூட்டிகளின் வளர்ச்சியைக் கண்கூடாக பார்த்த மக்கள், அதன் பங்குகளில் ஆர்வமாக முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், அதன் பங்குகளுக்கான தேவை 55 மடங்கு அதிகமானது.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் டெட்ராய்ட்டை சேர்ந்த Caraco Pharma என்ற நிறுவனத்தை 1997ல் வாங்கினார் திலிப். இது அவரது தொழில் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக இஸ்ரேலைச் சேர்ந்த Taro Pharma-வை வாங்கிய அவர், தனது போட்டி நிறுவனமான ரான்பாக்ஸி லேபரேட்டரீஸை 2014ம் ஆண்டு 4 பில்லியனுக்கு 2014ல் வாங்கினார். அதன் இந்திய மதிப்பு ரூ.33,306 கோடியாகும்.
பின்னர், 2023 மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸை சேர்ந்த Concert Pharmaceuticals-ஐ 576 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதால் சன் பார்மா மிக வலுவான நிறுவனமாக உருவெடுத்தது.
இந்தியாவில் சிறிய முதலீட்டில் ஆரம்பித்த தன் சன் பார்மாவை, தற்போது உலகின் நான்காவது பெரிய ஸ்பெஷாலிட்டி ஜெனரிக்ஸ் பார்மாசூட்டிகல் நிறுவனமாக நிலை நிறுத்தி வியக்க வைத்துள்ளார் திலிப். தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சன்பார்மா இயங்குகிறது.
சங்விக்கு விபா என்ற மனைவியும், ஆலோக் என்ற மகனும், விதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சன் பார்மாவில் முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றனர். திலிப் சங்கிவின் வாழ்க்கை வரலாற்றை, 2019ம் ஆண்டில் `தி ரிலெக்டன்ட் பில்லியனர்` என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார் பத்திரிகையாளர் சோமா தாஸ். பெங்குயின் ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நவம்பர் 2019 இல் சிறந்த வணிக புத்தக பிரிவில் டாடா இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.