அமெரிக்காவின் டாப் யூனிவர்சிட்டியில் சீட்; சாதித்துக் காட்டிய உச்ச நீதிமன்ற சமையல்காரரின் மகள்!
உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள், தன் திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் வெளிநாட்டிற்கு மேல் படிப்புக்கு செல்கிறார். அதுவும் டாப் யூனிவர்சிட்டியில் ஊக்கத்தொகையோடு படிக்க சீட் கிடைத்துள்ளது.
சுற்றியுள்ள சூழ்நிலைகள் ஒத்துழைக்காவிட்டாலும் கடினமாக உழைத்து வாழ்க்கையில் நினைத்ததை சாதிப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் தங்கள் பெற்றோரின் கஷ்டங்களை நினைத்து தங்கள் கனவுகளை நனவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட இளம் பெண் ஒருவரின் சாதனை தான் இன்று சோசியல் மீடியாவில், உத்வேகமூட்டும் கதையாக உருவெடுத்துள்ளது.
ஆம், உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள், தன் திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் வெளிநாட்டிற்கு மேல் படிப்புக்கு செல்கிறார். அதுவும் டாப் யூனிவர்சிட்டியில் ஊக்கத்தொகையோடு படிக்க சீட் கிடைத்துள்ளது.
சமையல்காரர் மகள் செய்த சாதனை:
எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியமும், கனவும் வாழ்க்கையை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. கனவு காண அனைவருக்கும் தெரிந்தாலும், அதை சாதிப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. நிலையான கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் விரும்பிய இலக்கை அடைய அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே கனவுகள் நனவாகும். உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரரின் மகளான பிரக்யா அப்படிப்பட்டவர் என்பதை நிரூபித்துள்ளார்.
யார் இந்த பிரக்யா?
ப்ரோமிலா சமல் ஒரு இல்லத்தரசி மற்றும் அஜய் குமார் சமல் உச்ச நீதிமன்ற உதவியாளராகவும், நீதிபதிகளில் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சமையல்காரராகவும் உள்ளார். இவரது மகள் பிரக்யா. இவர் அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த 3 பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிப்பதற்காக (LLM), உதவித்தொகையுடன் சீட் பெற்றுள்ளார்.
பிரக்யா தற்போது உச்ச நீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தில் சட்ட ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு அமெரிக்காவின் கொலம்பியா லா காலேஜ் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழக கேரி சட்டப் பள்ளி ஆகியவற்றில் எல்.எல்.எம். சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, பிரக்யா சிகாகோ லா காலேஜ், நியூயார்க் யூனிவர்சிட்டி, பெர்க்லி மற்றும் மிச்சிகன் லா காலேஜ் ஆகியவற்றிலிருந்து சேர்க்கைக்கான சலுகையைப் பெற்றுள்ளார். இதில் மிச்சிகன் சட்டப் பள்ளி அவருக்கு $50,000, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 41,39,977 உதவித்தொகை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு:
அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெறும் அரிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, பிரக்யாவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.
புதன்கிழமை உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதிகள் ஓய்வறையில் பிரக்யாவிற்கு தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். அத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து எழுதப்பட்ட மூன்று புத்தகங்களையும் தனது கையெழுத்துடன் வழங்கினார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியதாவது,
“பிரக்யா சுய உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்த நிலையை எட்டியுள்ளார். எதிர்காலத்தில் அவருக்கு ஆதரவளிப்போம். குழந்தைகளின் கனவுகளை நனவாக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசு மற்றும் பெற்றோர்களின் பொறுப்பு,” என்றார்.
நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் மகளின் பாராட்டு விழாவைக் கண்டு பிரக்யாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவர்களுக்கும் நீதிபதிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இந்த இரண்டிலிருந்தும் எதாவது ஒரு பல்கலைக்கழகத்தை அவர் தேர்ந்தெடுப்பார். மேற்படிப்புக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தன்னை சட்டத்தில் எம்எஸ் செய்ய உற்சாகப்படுத்தியதாகவும், இளம் வழக்கறிஞர்களை அவர் எப்போதும் ஊக்குவிப்பதாகவும் பிரக்யா கூறினார். தன்னை கௌரவித்த நீதிபதி சந்திரசூட் மற்றும் பிற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தார்.