‘என் கால்கள் போனா என்ன; ஒரு கைல மூணு விரல்கள் இன்னும் இருக்குப்பா நான் சாதிக்க’ - UPSC தேர்வில் சாதித்த சுராஜ்!
ரயில் விபத்தில் தன் இரு கால்கள், வலது கை, மற்றும் இடது கையின் இரு விரல்களை இழந்த இளைஞர் தனது அசாத்திய முயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் சாதித்ததன் பின்புலம். நான் உங்க UPSC தேர்வில் சாதித்த சுராஜின் சிலிர்ப்பூட்டும் கதை!
“ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட பொழுச்சுக்குவான் சார்...” என்று ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினியின் காளி கதாபாத்திரம் அழுத்தம் திருத்தமாகப் பேசுவது வெறும் மாஸ் வசனம் அல்ல; அது மன உறுதியுடன் கூடிய தன்னம்பிக்கையின் உச்சக்கட்ட வெளிப்பாடு.
இதெல்லாம் திரையில் தோன்றும் அசாதாரணமானவர்களுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வில் சாதாரணமானவர்களுக்கும் சாத்தியம் என்பதை மெய்ப்பித்துள்ளார் உத்தரப் பிரதேச இளைஞர் சுராஜ் திவாரி.
2017-ல் நடந்த ரயில் விபத்தில் தன் இரு கால்கள், வலது கை, மற்றும் இடது கையின் இரு விரல்கள் ஆகியவற்றை இழந்த இந்த 27 வயது இளைஞர் தனது அசாத்திய தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதித்துக் காட்டியிருக்கிறார்.
சுராஜ் திவாரியின் உத்வேகத்துக்குப் பின்னால் உடல் - மன வேதனைகளும், பொருளாதார நிலை உள்ளிட்ட புறப் போராட்டங்களும் நிறைந்துள்ளன. எல்லாவற்றையும் தாண்டி, பயிற்சி மையங்களின் துணையின்றி தன்னிச்சையாக தயாராகிதான் யுபிஎஸ்சி தேர்வில் வென்றிருக்கிறார் என்பது நமக்கு சிலிர்ப்பூட்டும் வியத்தகு முன்னுதாரணம் என்றால் அது மிகையில்லை.
குறைபாட்டை சுராஜ் திவாரி வென்றது எப்படி?
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மெயின்புரி மாவட்டத்தின் கஸ்வா குரவ்லி பகுதியைச் சேர்ந்தவர் சுராஜ் திவாரி. டெல்லியில் விடுதியில் தங்கியபடி ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் 2017-ல்தான் அந்தப் பேரிடி ஏற்பட்டது. காஸியாபாத்தின் தாத்ரியில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தனது இரு கால்கள், வலது கை, மற்றும் இடது கையின் இரு விரல்கள் ஆகியவற்றை இழந்தார் சுராஜ்.
தனது எதிர்கால கனவுகள் அனைத்தும் பொசுங்கிவிட, சிகிச்சைகளுக்குப் பின் வீட்டிலேயே வீல் சேரில் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல். எப்போதும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற குணம் கொண்ட சுராஜுக்கு தன் அன்றாட வாழ்க்கை இயக்கங்களுக்கே குடும்பத்தினரின் உதவியை சார்ந்திருக்க வேண்டிய நிலை.
இது மட்டுமல்ல. அடுத்தடுத்து அவரைத் துயரங்கள் துரத்த ஆரம்பித்தன. அண்ணனின் மரணம், தனக்கு நேர்ந்த பயங்கர விபத்து, குடும்பத்தை நெருக்கிய வறுமைச் சூழல், தையல்காரரான தந்தையால் பெரிதாக வருவாய் ஈட்ட முடியாத நிலை என தன்னைத் தொற்றிய துயரங்களால் மன அழுத்தத்துடன் துவண்டு போயிருந்தார் சுராஜ்.
ஆனாலும், தன்னுடைய அப்பா, அம்மா, இரு உடன்பிறப்புகளின் பாசமும், தன்னிடம் எஞ்சியிருந்த போராட்டக் குணமும் தன்னம்பிக்கையுடன் மீண்டெழ வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்தில் இருந்து போராடி வெளியே வந்தார்.
ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் தான் படித்து வந்த பிஎஸ்சி படிப்பைக் கைவிட்டார். தன்னை முழுமையாக திடப்படுத்திக் கொண்ட சுராஜ், ஆறு மாதங்கள் கழித்து அதே பல்கலைக்கழகத்தில் பி.ஏ ரஷ்ய இலக்கியம் சேர்ந்தார். 2020ல் அதே படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அப்போதுதான் யுபிஎஸ்சி தேர்வுக்கும் தயாராகியிருந்தார்.
யுபிஎஸ்சி கனவை நோக்கி
யுபிஎஸ்சி எழுத்துத் தேர்வில் முதல் முயற்சியிலேயே பாஸ் ஆனார். ஆனால், நேர்முகத் தேர்வில் சில பாயின்ட்டுகளில் வெற்றியை எட்ட முடியாமல் போனது. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. தோல்விகள் அவருக்குப் புதிதல்ல. 2014-ல் பிளஸ் டூ தேர்வில் தோல்வியுற்று, அடுத்த ஆண்டு தேர்வெழுதி வென்றவர். இப்போது மீண்டும் முயன்றார்.
இதோ சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில், தேசிய அளவில் 917-ம் இடம் பிடித்து சாதித்துக் காட்டியிருக்கிறார். தனது வெற்றிக்கு வழிவகுத்த உத்தி குறித்து சுராஜ் கூறியது:
“தினமும் 15, 16 மணி நேரங்கள் படிப்பதைக் காட்டிலும், ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் மிகக் கவனத்துடன் உன்னிப்பாக படித்தாலே போதும்.”
பல கடினமான சூழலுக்கிடையே தீவிர முயற்சியுடன் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வென்ற தன் மகன் குறித்து பூரிப்பும் பெருமிதமும் கொண்டுள்ளனர் சுராஜின் பெற்றோர்.
“என் மகன் ஒரு தைரியசாலி. அவன் ஒருபோதும் தனது கடின உழைப்பையும் முயற்சிகளையும் கைவிட்டதே இல்லை. அதுதான் அவனை ஜெயிக்க வைத்துள்ளது,” என்று பெருமிதத்துடன் நெகிழ்ந்தார் சுராஜின் தாய் ஆஷா தேவி திவாரி.
“நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என் மகன் எனக்குப் பெருமை சேர்த்துள்ளான். அவன் துணிச்சல் மிகுந்தவன்.
அந்த விபத்தில் என் மகனின் கை, கால்கள் பறிபோன பிறகு எங்களுக்கு இனி எதிர்காலமே இல்லை என்று வருந்தினேன். அப்போது என் மகன் சுராஜ், ‘என் ஒரு கைல மூணு விரல்கள் இருக்குப்பா. அதுல வெறும் ஒரு விரல் இருந்தா கூட போதும்ப்பா, நான் உங்களை எப்பவும் கைவிட மாட்டேன்’ன்னு சொன்னான். அவன் சொன்னதை இப்போ செஞ்சிக் காட்டிட்டான்...” என்று மகிழ்வைத் தாண்டி கலங்கினார் சுராஜின் தந்தை ரமேஷ் குமார் திவாரி.
சுராஜின் இந்த வெற்றியை அவரது ஊரே கொண்டாடி வருகிறது. இந்தத் தகவல் செய்திகளாக வெளிவர, அந்த உத்வேக நாயகனை நெட்டிசன்களும் கொண்டாடி வருகின்றனர்.
நம்மில் பலருமே நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறோம். அதில் பலரும் துவண்டு போய் முடங்கிப் போகிறோம். இத்தகைய சூழலில் இருக்கும் அனைவருக்கும் சுராஜின் வெற்றி சொல்லும் மந்திரம் வெறும் ஒற்றை வார்த்தை மட்டுமே கொண்டது. அது... முயற்சி!
அரசு ஊழியர் டு ஐ.ஏ.எஸ் அதிகாரி - தமிழகத்தில் UPSC தேர்வில் 2வது இடம் பிடித்த இளைஞரின் கதை!
Edited by Induja Raghunathan