குலசேகர ஆழ்வாராக மாறி மனப்பாட பாடல் பாடம் எடுத்த தமிழ் ஆசிரியர்!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் ராஜன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குலசேகர ஆழ்வார் போன்று வேடமிட்டு பெருமாள் திருமொழியைப் பாடி மனதில் பதிய வைத்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டம் அவ்வப்போது மாறி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பாடங்கள் மாறவில்லை என்றாலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் கல்வி பயிலும் முறை வெகுவாக மாறியுள்ளது.
மாணவர்களை கண்ணெதிரே உட்கார வைத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே ஆசிரியர்களுக்கு கடினமாக இருக்கும் நிலையில் ஆன்லைனில் இணைந்திருக்கும் மாணவர்களின் கவனத்தை தக்கவைப்பது இன்று ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிபவர் ராஜன். பத்தாம் வகுப்பு பாடதிட்டத்தில் தமிழ் பாடத்தில் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி பாடல் மனப்பாடப் பகுதியாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை மாணவர்களுக்குப் புதுமையாகக் கற்றுக்கொடுத்துள்ளார் ஆசிரியர் ராஜன்.
இவர் பெருமாள் திருமொழியின் ‘வாளால் அறுத்துச் சுடினும்…’ என்கிற பாடலை குலசேகர ஆழ்வாராகவே வேடமிட்டு மாணவர்களுக்காக பாடியுள்ளார்.
இதுபோல் வேடமிட்டு பாடுவதால் மாணவர்கள் மனதில் எளிதாகப் பதியும் என்பது இவரது திடமான நம்பிக்கை. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதேபோன்ற முயற்சிகளை பல ஆசிரியர்கள் எடுத்துள்ளனர்.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மனப்பாடப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களை அதன் கருத்துகளின் அடிப்படையில் காணொளியாக உருவாக்கி ‘தமிழ் முற்றம்’ என்கிற யூட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறார் மதுரை தமிழ் ஆசிரியரான ஜெரோம்.
இந்தப் பெருந்தொற்று சூழலில் ஏராளமான ஆசிரியர்கள் மாணவர்கள் நலனுக்காக எத்தனையோ புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதைப் பார்க்கமுடிகிறது. ஆசிரியப் பணியில் இவர்களுக்கு உள்ள அர்ப்பணிப்பை இத்தகைய புதுமையான முன்னெடுப்புகள் உணர்த்துகின்றன.
தகவல் மற்றும் படங்கள் உதவி: புதிய தலைமுறை