கோவிட் ஊரடங்கில் மாணவர்களுக்கு உதவிடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
ஆசிரியர் தினமான இன்று மாணவர்களின் நலனிற்காக தங்கள் கைக்காசைப் போட்டும், கூடுதல் நேரம் உழைத்தும் எழுத்தறிவித்தவன் இறைவன் என நிரூபித்து வரும் சில ஆசிரியர்கள்.
முன்பெல்லாம் தனியார் பள்ளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலான குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படித்தார்கள். பெரிய அதிகாரியின் குழந்தையும், கூலித் தொழிலாளியின் குழந்தையும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தனர். இதனால் வகுப்பறைகளே அந்தக் குழந்தைகளுக்கு உலகத்தின் முன் மாதிரியாக இருந்தது. தானும் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் மாணவர்களுக்குள் தானாகவே எழுந்தது. இன்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பலர் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் தான்.
ஆனால் படோடாப விளம்பரங்களாலும், மக்களின் ஆங்கில மோகத்தாலும் இந்த நிலை இப்போது தலைகீழாக மாறி விட்டது. வீதிக்கு நான்கு தனியார் பள்ளிகள் முளைத்து விட்டன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் தான் நல்ல தரமான கல்வி கிடைக்கும், அங்கு படித்தால் மட்டுமே தங்கள் பிள்ளைகள் இந்த போட்டி உலகில் ஜெயிக்க முடியும் என்ற பிம்பம் உள்ளது.
இதனாலேயே கடன் வாங்கியாவது தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க பெற்றோர் நினைக்கின்றனர். இந்த நிலையை மாற்ற அரசும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகள் அரசு பள்ளிகளிலும் கொண்டு வரப்படுகின்றன.
இது தவிர ஆசிரியர்களும் தங்கள் பங்கிற்கு தங்கள் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, கல்வியின் தரத்தை மேம்படுத்த தங்களால் இயன்றளவு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த கொரோனா ஊரடங்கில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்ட பல அரசு ஆசிரியர்களின் தன்னலமற்ற செயல்கள் செய்து நம்மை பிரமிக்க வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தாண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட மும்மடங்கு அதிகரிப்பு ஆகும். மாணவர் சேர்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
கொரோனா பிரச்சினையால் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வருகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலருக்கு ஆன்லைனில் பாடம் கற்கும் அளவிற்கு குடும்பச் சூழல் இல்லையென்றாலும், சில ஆசிரியர்கள் தங்களது தனிப்பட்ட முயற்சியால் மாணவர்களின் நலனிற்காக பல நல்ல காரியங்களைச் செய்து வருகின்றனர்.
ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5), மாணவர்களின் நலனிற்காக தங்கள் கைக்காசைப் போட்டும், கூடுதல் நேரம் உழைத்தும் எழுத்தறிவித்தவன் இறைவன் என நிரூபித்து வரும் சில ஆசிரியர்களை எழுத்துக்களால் கௌரக்கிறோம்.
பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ. 1,000 வழங்கிய தலைமை ஆசிரியை
கொரோனா ஊரடங்கால் தவிக்கும் தனது பள்ளி மாணவர்களுக்கு, வீடு தேடி சென்று உதவியுள்ளார் துப்பாபுரம் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை கண்ணகி. தனது பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள் எனவே, கொரோனா ஊரடங்கால் அவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் பசி, பட்டினியில் தவிப்பதைக் கேள்விப்பட்டு வேதனை அடைந்துள்ளார் கண்ணகி.
தனது சக ஊழியர் பரமேஷ்வரி வரதராஜன் உடன் இணைந்து 41 குடும்பங்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கி உதவியுள்ளார் கண்ணகி. இதில், கண்ணகி ரூ.36 ஆயிரமும், பரமேஸ்வரி ரூ.5 ஆயிரமும் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுத்துள்ளனர். நேரடியாக மாணவர்களின் வீட்டிற்கே சென்று இந்த உதவியைச் செய்துள்ளார் கண்ணகி.
ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கித் தரும் தலைமையாசிரியர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது படிக்காசுவைத்தான்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் தான் ஜெயகுமார் ஞானராஜ். மொத்தம் 16 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வரும் இப்பள்ளியில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக புதிய முயற்சி ஒன்றைச் செய்துள்ளார் இவர்.
அதாவது, இந்தாண்டு இப்பள்ளியில் புதிதாக கல்வி பயில சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனது சொந்த செலவில் ரூ.6,500 மதிப்புள்ள புதிய ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார் ஜெயகுமார் ஞானராஜ். இவரது இந்த முயற்சியால் இதுவரை அங்கு 4 மாணவர்கள் புதிதாக அப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
அதோடு, 2 கி.மீ தொலைவில் உள்ள பக்கத்து ஊரில் இருந்து பள்ளிக்கு வரும் 2 மாணவர்களுக்கு தனமும் பள்ளிக்கு வந்துபோகும் ஆட்டோ செலவு ரூ.800-யையும் தனது சொந்தப் பணத்தில் இருந்தே கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடிப் பாடி பாடம் எடுக்கும் வைரல் ஆசிரியை
ஆன்லைன் வகுப்பில் மெய்யெழுத்துகளை தன் மாணவர்களுக்கு சுவாரஸ்யமாகக் கற்றுத் தர பாடி, ஆடி வீடியோ பகிர்ந்து இணையத்தில் வைரலானவர் புதுக்கோட்டை அருகே கவரப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன்.
ஊரடங்கு நேரத்திலும் ‘சின்னக்குயில்' என்ற வாட்ஸ்அப் குழுவை ஆரம்பித்து, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தன் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வருகிறார். ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக, மெய்யெழுத்துகளைப் பாடலாகப் பாடி, அதற்கேற்ப அவரே நடனமும் ஆடி, அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார் மீனா. அந்த வீடியோவை பெற்றோர்கள் பல்வேறு குரூப்களில் பகிர, மீனாவின் இந்த புதுமையான கற்றல் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த ஒரு வீடியோ மட்டுமல்ல, தன்னுடைய மாணவர்களுக்கு ஏ, பி, சி, டி உயிரெழுத்துகள், வாய்ப்பாடு, ரைம்ஸ் என எல்லாவற்றையும் இதுமாதிரி ஆடல் பாடலுடன் தான் சொல்லிக் கொடுப்பது மீனாவின் வழக்கமாம்.
மரத்தடியில் வகுப்பெடுக்கும் தலைமை ஆசிரியர்
ஆன்லைன் வகுப்புகளில் நகரங்களில் வசிக்கும் மாணவர்களை விட கிராமத்தில் இருப்பவர்கள் பல சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. காரணம் செல்போனில் போதிய வேகத்தில் இண்டர்நெட் வசதி கிராமத்தில் கிடைப்பதில்லை. இதனால் செல்போன் இருந்தும் பலரால் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க இயலுவதில்லை.
இந்நிலையில், சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மகரஜோதி கணேசன், மாணவர்களைத் தேடி அவர்களது இருப்பிடத்திற்கே சென்று பாடம் நடத்தி வருகிறார். அந்தந்த பகுதியில் உள்ள மரத்தடி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வகுப்பெடுக்கிறார். மொத்தம் அவரது பள்ளியில் 65 மாணவர்கள் படித்து வருகிறார்கள். சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பாடம் படிக்க வருகின்றனர்.
கடந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர் மகர ஜோதி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸப்பில் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்
கொரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் தடையேதும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அம்மையநாயக்கனூர் அரசுத் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்தர், வாட்ஸப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளிக்க, தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுடைய செல்போன் எண்களைச் சேகரித்து ஒவ்வொரு வகுப்புக்கும் தனியே ஒரு வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கியுள்ளனர். அதில் தனித்தனியே பாடங்களையும் அனுப்புகின்றனர்
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதைகள் சொல்லியும், ஆடிப்பாடியும் வீடியோ வகுப்புகள் மூலம் குழந்தைகளை உற்சாகப்படுத்துகின்றனர் இந்த ஆசிரியர்கள்.
தரையில் அமர்ந்து வகுப்பெடுக்கும் ஆசிரியை
அரசுப் பள்ளி ஆசிரியராக மட்டும் இல்லாமல், யுனிசெஃப் அமைப்பின் முன்னெடுப்பான குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பவர் ஆசிரியை சுடரொளி. ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்கிற அமைப்பில் கடந்த 11 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறார்.
ஊரடங்கு நேரத்திலும் குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் முன்னெடுக்கப்படும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார் சுடரொளி. இவ்வமைப்பின் சார்பில் இனிப் பள்ளி நடைமுறை என்னவாக இருக்கும், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது அரசு, பெற்றோர், ஆசிரியர்கள் எல்லோரும் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கும், எவையெல்லாம் நடைமுறைச் செயல்பாடுகளாக இருக்க வேண்டும் என்பதை ஒரு திட்ட அறிக்கைபோல் தயாரித்து அரசுக்கு அளிக்க உள்ளார்கள்.
இத்தனை வருட ஆசிரியப் பணியில் நாற்காலியில் அமர்ந்து பாடமே நடத்தியதில்லையாம் இவர். குழந்தைகளை வட்ட வடிவில் அமரவைத்து, அவர்களுடன் தரையிலேயே உட்கார்ந்து கற்பிப்பதுதான் சுடரொளியின் வழக்கம். தேவைப்படும்போது மட்டும் எழுந்து, கரும்பலகையில் எழுதிவிட்டு மீண்டும் தரையில் அமர்வது கொள்வாராம்.
பள்ளிக்கும் அப்பகுதி மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தால் மட்டுமே, பள்ளி சிறப்பாகச் செயல்பட முடியும் என்று கூறும் ஆசிரியர் சுடரொளி, இரண்டு தரப்புக்குமான தொடர்பை உருவாக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
தாம்பூலம் வைத்து அழைப்பு
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ளது சென்னை உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், தங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு நேரில் சென்று, பள்ளியின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறி, அப்பகுதியில் உள்ள மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்க பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வெறும் வாயில் அழைப்பு விடுக்காமல், பழத்துடன் தாம்பூலம் தட்டு, வெற்றிலை, பாக்கு மற்றும் பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்த துண்டு பிரசுரத்தையும் வைத்து பெற்றோர்களிடம், அவர்கள் பிள்ளைகளை தங்கள் பள்ளிகளில் சேர்க்க அன்போடு அழைப்பு விடுக்கின்றனர்.
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் பல தனியார் பள்ளிகளில் முழுக் கட்டணமும் செலுத்த நிர்ப்பந்தித்து வருகின்றனர். முழு கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என உத்தரவு உள்ள நிலையிலும், தள்ளுபடி தருவது போல் காட்டிக் கொண்டு மறைமுகமாக அனைத்து கட்டணங்களையும் வசூலித்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு தனியார் பள்ளிகள் பற்றி பெற்றோர் மத்தியில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு சளைக்காமல் அரசுப் பள்ளிகளும், அதன் ஆசிரியர்களும் கல்விப் பணி ஆற்றி வருவது பாராட்டுகளுக்கு உரியது. அரசும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சிகளில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு என பெற்றோர் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு செயல்பட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.