தமிழக தேர்தல் 2021: அமோக வெற்றியும், அதிர்ச்சி தோல்வியும் பெற்ற ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
மநீம தலைவர் கமல்ஹாசன், அதிமுக தலைவர் டி.ஜெயகுமார், திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இதில் 158 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி + முன்னிலை வகிக்கிறது. அதிலும் திமுக, 127 இடங்களில் வெற்றி + முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமாக வெற்றிபெறும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளம்படி தற்போது வரை 26 தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக-14 இடங்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அதிமுக கூட்டணி வெற்றி + முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக மட்டும் தனியாக 67 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இணையதள தகவலின்படி அதிமுக 11 இடங்களில் தற்போது வரை வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி, வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் இருந்து பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட, கோவை தெற்கு வேட்பாளர்கள் மநீம; கமல் ஹாசன், பாஜக; வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் காங்கிரஸ்; மயூரா ஜெயகுமார் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. அதற்கான பதில் ஒருவழியாக தற்போது வந்துள்ளது. பாஜக-வின் வானதி ஸ்ரீனிவாசன் சுமார் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் கமலை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் நட்சத்திர வேட்பாளர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக ஐ.பெரியசாமி மாறியிருக்கிறார்.
இவருக்கு அடுத்து திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக மற்றொரு வேட்பாளர் ஏ.வ.வேலு 94673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி 92,268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றிபெற்றுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தாங்கள் இருப்பதாக கட்சி தொடங்கி தமிழ்நாடு முழுதும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் சங்கர் அங்கு வெற்றிப்பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதியில் விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்று இருக்கிறார். திருத்துறைப்பூண்டியில் சிபிஐ-ன் மாரிமுத்து வெற்றி பெற்று இருக்கிறார். திருச்செந்தூர் தொகுதியில் திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி அடைந்துள்ளார். திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் அதிக வாக்கு விதிதியாசத்தில் முன்னிலையில் வகித்து இருக்கிறார். இதன்மூலம் அவரது வெற்றி உறுதியாகி இருக்கிறது.
ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு, காட்டுமன்னார் கோவில் சிந்தனை செல்வன், திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி என விசிக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பின் விசிக சட்டமன்றத்துக்குள் செல்கிறது.
அதேநேரம், திமுக வெற்றிபெற்றால் சபாநாயகர் ஆக்கப்படுவார் எனப் பேசப்பட்ட திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வி அடைந்துள்ளார். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வெற்றிபெற்றுள்ளார்.
அதிமுக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல், அதிமுக-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டி.ஜெயகுமார், ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
பாஜக தமிழகத் தலைவர் எல். முருகன், தேமுதி பிரேமலதா விஜயகாந்த், அமமுகவின் டிடிவி. தினகரன், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்,
”தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்,” என்றுள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன். உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்! இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி," எனக் கூறியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக அரசின் பல்வேறு அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சற்று நேரத்துக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.