{மாற்றத்திற்கான வேட்பாளர்} பூம்புகார் தொகுதியை தெறிக்கவிடும் களப்போராளி காளியம்மாள்!
எளிமையானத் தோற்றம், யதார்த்தமான நகைச்சுவை பேச்சு, தெளிவான உச்சரிப்பு, பேச்சில் நறுக்,சுருக் - இதுவே காளியம்மாள். இதனாலே பொதுமக்களிடம் எளிதாகச் சென்றடைந்தார். இந்த சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை பற்றிய தொகுப்பு.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்தத்தேர்தலிலும் தனித்து களமிறங்குகிறது ’நாம் தமிழர் கட்சி.’ ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் அக்கட்சியின் தலைவர் சீமான், இந்தமுறையும் மொத்தமுள்ள 234 வேட்பாளர்களில் 117 பெண் வேட்பாளர்களையும் 117 ஆண் வேட்பாளர்களையும் சரிசமமாக களத்தில் இறக்கியுள்ளார். 50 சதவிகிதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது பலராலும் பாராட்டப்பெற்று வருகிறது.
களம் கண்டுள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்களுள் ஒருவராக விளங்குகிறார் காளியம்மாள். இவரது ரசிகர் பட்டாளம் கட்சிக்கு அப்பாற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய பேச்சாளராக வலம் வருபவர். அரசியல் மேடைகளுக்களில் தெறித்தது இவரது குரல். ஆனால், சமானியர்களுக்கான குரலாக ஒலித்தார். தாம் சொல்ல வந்ததைத் தெளிவாகவும் செறிவாகவும் பேசுபவர். மேடைப்பேச்சில் வெளுத்து வாங்குபவர். எளிமையானத் தோற்றம், யதார்த்தமான பேச்சு, தெளிவான உச்சரிப்பு, பேச்சில் நறுக், சுருக் - இதுவே காளியம்மாள்.
இதனாலே பொதுமக்களிடம் எளிதாகச் சென்றடைந்தார். இந்த சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள்.
மீனவப்பெண் முதல் அரசியல் பிரவேசம் வரை...
காளியம்மாளின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை. மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாத்தா, அப்பாவில் தொடங்கி கணவர், தம்பி என குடும்பத்தில் அனைவரும் மீன்பிடித் தொழிலிலே ஈடுப்பட்டு வருகின்றனர். சீர்காழியில் பி.காம் படித்த காளியம்மாள் சமூக ஆர்வலரும் கூட.
தேசிய மீன்வளத் தொழிலாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்த அவருக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் வேர்களைப் புரிந்துகொள்ள உதவி உள்ளது. மீனவத் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாகக் குரல் கொடுத்து வருகிறார்.
பத்து வருட காலமாக விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களின் வாயிலாக பணிசெய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் யாரோ ஒருவர் அளிக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுக்க முடிகிறதே தவிர, மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க முடியவில்லை எனத் தோன்றியது.
“எந்த தொண்டு நிறுவனம் நினைத்தாலும் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திதர இயலாது. அதுபோன்ற அடிப்படைத் தேவைகளை அரசு தான் ஏற்படுத்தித்தர வேண்டும். அப்போது அதிகாரத்தில் இருந்தால்தான், நமக்கான திட்டங்களை சரி செய்துகொள்ள முடியும்," என்று உணர்ச்சிமிகுந்து கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கொண்டிருந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைக்கவே, அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
"தமிழ் மண்ணின் பூர்வகுடி மக்கள், உரிமைகளற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த பூர்வகுடி சமூகம் குறித்து அண்ணன் சீமான் முன்வைத்த கருத்துகள் என்னை ஈர்த்தன. அதனால் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தேன்," என விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அவர்.
2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தேர்தல் களத்தில் காளியம்மாளின் பேச்சு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. காளியம்மாளின் ஹாஸ்யம் கலந்த ஆவேசப் பேச்சு இளைஞர்களையும் மீனவர்களையும் ஈர்க்கத் தொடங்கியது.
அவரது தேர்தல் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் பலமுறை பகிரப்பட்டு, ஃபேஸ்புக் லைவ்விலும் ஒளித்தது காளியம்மாளின் குரல். அவர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், கடற்கரையோரத்தில் வாழும் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஒன்றே என்று கூறி வாக்குகளைச் சேகரித்தார்.
காளியம்மாளின் ரசிகர் பட்டாளம் கட்சிக்கு அப்பாற்பட்டதாகி, தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 60,515. சதவிகிதத்தின் அடிப்படையில் என்றால், 6.33%. ஆனால், நாம் தமிழர் கட்சி கடந்த 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தனித்து தேர்தலை சந்தித்து பெற்ற மொத்த வாக்குகளின் சதவீதமோ 1.07 மட்டுமே.
"ஒரு தொண்டுநிறுவனத்தில் பணியாற்றிய நான், தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த வேலையை ராஜினாமா செய்தேன். இப்போது, கட்சிப்பணிகளை ஆற்றி வருகிறேன். போராட்டங்களில் பங்கேற்கிறேன். பல மாவட்டங்களுக்குச் சென்று பொது கூட்டங்களில் பேசுகிறேன். பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கியதும், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் வந்து 'நன்றாகப் பேசினீர்கள். நீங்கள் பேசியது சரியான கருத்து' என்று சொல்வார்கள். அது எனக்கு நெகிழ்ச்சியான அனுபவம்," என்று மகிழ்வுடன் தெரிவித்தார் காளியம்மாள்.
50 ஆண்டுகளாக பெண்கள் போட்டியிடாத பூம்புகார் தொகுதி
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகிருந்து முழுநேர அரசியல்வாதியாக, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என மக்களை பாதிக்கும் அரசின் திட்டங்களை நேரடியாய் எதிர்த்து வாதாடுவதும், களபோராளியாகவும் மாறியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலந்துகொள்ளும் முகமாகினார்.
புகழ்பெற்ற பரிகாலத் தலமான திருக்கடையூர், கேது தலமான கீழப்பெரும்பள்ளம், காந்திஜியோடு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வள்ளியம்மை பிறந்த தில்லையாடி உள்ளிட்ட முக்கியமான இடங்களும், பூம்புகார், தரங்கம்பாடி, பொறையார், உள்ளிட்ட பல முக்கிய நகரங்களும் இத்தொகுதியில் உள்ளன.
இப்பகுதியில் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. மீன்பிடித் தொழிலும் பிரதானம். மீனவச் சமூகத்தின் வாக்குகள் கணிசமாய் காளியம்மாளை சென்றைடயும் என்ற நம்பிக்கையில் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி.
"பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் இந்தமுறை போட்டியிடுகிறேன். எனக்கு தெரிந்து 1967ம் ஆண்டு முதல் பூம்புகார் தொகுதியில் ஒரு பெண் போட்டியிட்டதாக வரலாறே இல்லை. இந்த முறை பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு ஒரு பெண் சட்டமன்றத்திற்கு செல்லவிருக்கிறார்.”
- வெற்றி பெற்றவுடன் அங்கன்வாடி பொருள்கள் வீடுதேடி வரும். வெள்ளை சீனிக்கு மாற்றாக நாட்டுசக்கரை, பாமாயிலுக்கு மாற்றாக செக்கு கடலை எண்ணெய், முதல்தரமான அரிசி வழங்கிட வழிசெய்வேன்.
- அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நாட்டுக்கோழி முட்டை, நாட்டு மாட்டுபால் வழங்குவோம்.
- அனைவருக்கும் தகுதிகேற்ற அரசு வேலை, 15 நாட்களுக்கு ஒருமுறை நடமாடும் மருத்துவ வாகனம், முதியோர்களின் உதவித்தொகை மாதம் ரூ.3000 ஆக உயர்வு, இலவசச் கல்வி, இலவச மருத்துவம், மதுக்கடைகள் அகற்றம்.
- கம்பர் வாழ்ந்த மண்ணில் அவருக்கு உருவச்சிலையும் நினைவு மண்டபமும் கட்டியெழுப்புவேன், என்று அவரது வாக்கு உறுதிகளை கூறி பிரச்சாரங்களின் போது கைதட்டல்களை அள்ளி வருகிறார்.
பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளது. பாமக ஒரே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இத்தொதகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் எஸ். பவுன்ராஜ். பூம்புகார் தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,75,582 ஆகும்.
சேதமடைந்துள்ள மீனவக் கிராமங்களுக்கான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், பாழடைந்து கிடக்கும் பூம்புகார் கலைக்கூடத்தை புனரமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள எஸ்.பவுன்ராஜ் மீண்டும் அதிமுக சார்பில் களம் காண்கிறார். திமுக சார்பில் நிவேதா முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களுடன் போட்டியிட்டு காளியம்மாள் வெல்வாரா? பொருந்திருந்து பார்ப்போம்.
முழு பெயர்: காளியம்மாள்
கணவர் பெயர் : பிரகாஷ்
தொகுதி- பூம்புகார்
கட்சி- நாம் தமிழர்
தொழில்- ஹோம் மேக்கர்
சிறப்பம்சம்- மீனவச் சமூகத்திற்காக போராடும் களப்போராளி, மக்கள் அன்பை பெற்றவர்.
போட்டியாளர்கள்- எஸ்.பவுன்ராஜ் (அ.தி.மு.க), நிவேதா முருகன் (தி.மு.க.), ஹெச்.மெகராஜ் தீன் (மக்கள் நீதி மய்யம்), எஸ். செந்தமிழன் (அமமுக)
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)