11 ஊழியர்களுக்கு சொகுசு கார் பரிசு; தஞ்சை ஐ.டி. நிறுவன நிறுவனர் கொடுத்த சர்ப்ரைஸ்!
தஞ்சையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் ஒருவர் தனது நிறுவனம் வளர பாடுபட்ட 11 ஊழியர்களுக்கு கார் பரிசளித்து அசத்தியுள்ளார்.
தஞ்சையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் ஒருவர் தனது நிறுவனம் வளர பாடுபட்ட 11 ஊழியர்களுக்கு கார் பரிசளித்து அசத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்று இளம் தொழில்முனைவோராக வளர்ந்து நிற்கும் ஹம்சவர்தன் என்பவர், தன் நிறுவனம் வளர்வதற்காக கடுமையாக பணிபுரிந்த உழியர்களை அவர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து பாராட்டியுள்ளார்.
யார் இந்த ஹம்சவர்தன்?
தஞ்சையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹம்சவர்தன், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த கையோடு படிப்படியாக பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் ஐ.டி.துறையில் பணிபுரிந்துள்ளார். அதன் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, 2016ம் ஆண்டு தஞ்சாவூரில் நண்பர்களுடன் சேர்ந்து ஐ.டி.நிறுவனம் ஒன்றினை தொடங்கியுள்ளார்.
5 பேருடன் தொடங்கப்பட்ட 'பரூச் பிசினஸ் சொலியூஷன்ஸ்' (Baruch Business Solution) என்ற ஐ.டி. நிறுவனத்தில் தற்போது 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
ஹெல்த் கேர் சம்பந்தமான ஐ.டி. நிறுவனமான இது அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு மெடிக்கல் பில்லிங், மெடிக்கல் கோடிங் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. தஞ்சையில் ஐ.டி. நிறுவனம் தொடங்கப்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில்,
“தஞ்சாவூரில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் படித்து முடித்து வேலைக்காக சென்னை, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே பிபிஎஸ் நிறுவனம் தொடக்கப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பணி வழங்குவதே எனது இலக்கு. தஞ்சாவூரை சிலிக்கான் வேலியாக மாற்றுவேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
11 பேருக்கு கார் பரிசு:
5 ஊழியர்களுடன் தொடங்கப்பட்டு, இன்று 400 ஊழியர்களுடன் நிறுவனம் இமாலய வளர்ச்சி அடைய ஊழியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்புமே காரணம் என சிஇஓ ஹம்சவர்தன் எண்ணினார்.
தன் நிறுவன வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தனது ஊழியர்களை சிறப்பாக கெளரவிக்க எண்ணிய அவர், சொகுசு ஓட்டலில் ஊழியர்களுக்கு பிரம்மாண்ட விருந்தை ஏற்பாடு செய்தார்.
இந்த விருந்தின் போது, ஆரம்ப கட்டத்தில் இருந்தே நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 ஊழியர்களுக்கு கார் பரிசளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஊழியர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்திய ஐ.டி. நிறுவன சிஇஓ ஹம்சவர்தனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
“5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களை ஊழியர்களாக அல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பாவித்து பாராட்ட நினைத்தேன். அதன் அடிப்படையிலேயே கார் பரிசளிக்கும் யோசனை தோன்றியது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதேபோல் ஊழியர்களை ஊக்குவிக்க பரிசளிக்க உள்ளோம்,” என்றார்.
11 ஊழியர்களில் 3 பேருக்கு ஹோண்டா சிட்டி, ஒரு ஹோண்டா அமேஸ், 7 டொயோட்டா கிளான்சா கார்களை பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘தீபாவளி பரிசு’ - ஆபீஸ் பாய் முதற்கொண்டு 12 ஊழியர்களுக்கு கார் பரிசளித்த ஹரியானா நிறுவனம்!