‘தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 10,000 ஸ்டார்ட்-அப்ஸ் உருவாக்க இலக்கு’ - TANSIM சிஇஒ சிவராஜா ராமநாதன்
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்துக்கு (TANSIM) பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அது குறித்தும், டான்சிம்-இன் வருங்காலத் திட்டங்கள் பற்றியும் அதன் சிஇஒ சிவராஜா ராமநாதன் யுவர்ஸ்டோரி தமிழ் உடன் பகிர்ந்து கொண்டவை இதோ:
2022-23ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த தமிழக பட்ஜெட்டில் ஸ்டார்ட்-அப் அதாவது புத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்துக்கு (TANSIM) சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அது குறித்தும், டான்சிம்-இன் வருங்காலத் திட்டங்கள் பற்றியும் அதன் சிஇஒ சிவராஜா ராமநாதன் யுவர்ஸ்டோரி தமிழ் உடன் பகிர்ந்து கொண்டவை இதோ:
யுவர்ஸ்டோரி: தமிழக பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் என்ன? TANSIM-க்கு பட்ஜெட்டில் கிடைத்துள்ள சிறப்பம்சங்கள் என்ன?
சிவராஜா ராமநாதன்: ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட TANSIM நிறுவனத்தின் மூலமாக அறிமுகப்படுத்த சில ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதில், முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது,
”தாழ்த்தப்பட்ட பிரிவினரான எஸ்.இ., எஸ்.எஸ்டி பிரிவினருக்காக தனியாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே ஒரு சிறப்பான, முன்னோடியான திட்டம். இந்தப் பிரிவினர் தொடங்கக்கூடிய ஸ்டார்ட் அப்’களுக்கு முதலீடு செய்ய இந்த பட்ஜெட் மூலமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.”
அடுத்தது 50 கோடி ரூபாய் Fund of Funds மாடலுக்கானது. வரும் நாட்களில் இதை மேலும் விரிவாக்கம் செய்து தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம்.
அரசுத் துறைகளுக்கு ஒரு ஸ்டார்ட் அப்’பின் பிராடக்டை கொண்டு சேர்ப்பது கடினமாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு 20 லட்ச ரூபாய் வரை டெண்டர் மூலம் அணுகத் தேவையில்லை என தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 50 லட்ச ரூபாயாக இது உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள், துறைசார் நிபுணர்கள் போன்றோரை இணைக்கும் புள்ளியாக சென்னையில் ஒரு ’ஸ்டார்ட் அப் மையம்’ அமைக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இத்தகைய மையம் 75 கோடி ரூபாய் மதிப்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் அருகில் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஸ்டார்ட் அப் முயற்சி என்பது பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அதிகம் உள்ளது. அப்படியில்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும்.
இதற்காக முதல் கட்டமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் டான்சிம்-இன் பிரிவு ஸ்டார்ட் அப் மையம் உருவாக்க உள்ளோம். இதன் மூலமாக அந்த மாவட்டங்களில் தொழில்முனைவில் ஆர்வம் இருக்கக்கூடியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். அடுத்தடுத்த கட்டங்களாக எல்லா மாவட்டங்களுக்கும் இதை கொண்டு செல்லவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
யுவர்ஸ்டோரி: பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து TANSIM எடுக்கவிருக்கும் முதல் செயல்பாடு என்ன?
சிவராஜா ராமநாதன்: சீட் கிராண்ட் நிதி திட்டம் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டம். அது எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து அமலில் இருக்கும். தற்போது நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளவை அனைத்தும் புதிய திட்டங்கள். அடுத்த ஆண்டு சுமார் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் சீட் கிராண்ட் நிதி வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.
தனியார் முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், விசி நிறுவனம் போன்றவை 25 லட்சம் அல்லது 50 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும்போது அதற்கு சமமான தொகையை நாங்கள் கிராண்டாக கொடுப்போம். இது மேட்சிங் கிராண்ட். இதுவும் தற்போது அமலில் உள்ளது.
இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் ஸ்டார்ட் அப்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்க அங்கு மையங்கள் உருவாக்கும் செயல்பாட்டில் முதலில் கவனம் செலுத்த இருக்கிறோம். அங்கு ஒரு குழுவை உருவாக்கி இது தொடர்பான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
யுவர்ஸ்டோரி: டான்சிம் சிஇஓ ஆக பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் வரவிருக்கும் 5 ஆண்டுகளில் புத்தொழில் வளர்ச்சிக்கு வைத்திருக்கும் இலக்குகள் என்ன?
சிவராஜா ராமநாதன்: ஸ்டார்ட் அப் சூழலைப் பொருத்தவரை இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு சற்று பின்தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் நம்மிடம் போதுமான தரவுகள் இல்லை. இதை சேகரிப்பது முக்கியம். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும்.
தமிழ்நாட்டில் அடுத்த நான்காண்டுகளில் 10,000 ஸ்டார் அப்-களை உருவாக்கவேண்டும் என்பதே எங்கள் இலக்கு, இந்த எண்ணிக்கை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் யோசிக்கலாம். புத்தொழில் முயற்சிகளைப் பொருத்தவரை அவை தோல்வியடையும் விகிதம் அதிகம். எனவே, அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப் முயற்சி தொடங்கப்படுவது அவசியம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவதைக் காட்டிலும் உலகின் சக்திவாய்ந்த ஸ்டார்ட் அப் சூழலுக்கு இணையாக மேம்படுத்தவேண்டும் என்பதே நோக்கம்.
யுவர்ஸ்டோரி: தமிழகத்தில் புத்தொழில் தொடங்க இருப்பவர்களுக்கும் இளம் தொழில்முனைவோருக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
சிவராஜா ராமநாதன்: தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் காலத்தில் இங்கு ஐடி பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அதன் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் பலனடைந்தன.
ஆனால், தற்போது அடுத்த புரட்சியை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஐடி வேலை வாய்ப்புகளைத் தாண்டி நாம் வெவ்வேறு துறைகளில் ஸ்டார்ட் அப் முயற்சிகளை தொடங்கும் தொழில்முனைவோர்களாக மாறவேண்டும். இதை கல்லூரிப் பருவத்தில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் உடனிருப்பவர்களும் இதற்கான மன மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.
இன்று பல தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வரும் சூழலில் இளைஞர்கள் தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ளது. முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள் கிடைப்பதுடன் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
இதைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்டார்ட் அப் முயற்சிகளை இளைஞர்கள் தொடங்கவேண்டும். இவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்கிறது. அரசின் சார்பாக டான்சின் போன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. நீங்கள் எளிதாக எங்களை அணுகலாம். பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். 10,000 ஸ்டார்ட் அப்களை உருவாக்கத் தேவையான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மனமாற்றத்தை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.