‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தை வாங்கியது ‘டாடா டிஜிட்டல்’
டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா டிஜிட்டல், அன்லைன் மளிகைப் பொருட்கள் விற்பனை நிறுவனம் பிக்பாஸ்கெட்டில் பெரும்பான்மை பங்குகளை வாங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதம் இந்திய போட்டி ஆணையம் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.
“சூப்பர்மார்கெட் கிராசரி சப்ளைஸ் நிறுவனத்தின் 64.3% பங்குகளை டாடா டிஜிட்டல் வாங்குவதற்கு மற்றும் இன்னவேட்டிவ் ரிடைல் கான்சப்ட்ஸ் பிரைவட் லிட்டின் மீதான முழு கட்டுப்பாட்டையும் வாங்க சிசிஐ அங்கீகரிக்கிறது,” என இது தொடர்பான அறிவிப்பில் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த இணைய மளிகை நிறுவனம் 25 நகரங்களில் செயல்படுகிறது. 50,000 மேற்பட்ட சர்க்கு சேமிப்பு மையங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் 12,000 விவசாயிகளுடன் ஒப்பந்தும் செய்து கொண்டு பொருட்களை நேரடியாக வழங்குகிறது.
இந்த கையகப்படுத்தல் மூலம், டாடா டிஜிட்டல், ரிலையன்ஸ் ஜியோ மார்ட், அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் இப்பிரிவில் போட்டியிடுகிறது.
2011ல், அபினய் சவுத்ரி, விபுல் பிரகாஷ், ரமேஷ், சுதாகர் ஆகியோரால் துவக்கப்பட்ட பிக்பாஸ்கெட், அலிபாபா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களை முதலீட்டாளர்களாகக் கொண்டுள்ளது.
”டாடா குழுமத்தின் அங்கமாக எங்கள் எதிர்காலம் குறித்து உற்சாகம் அடைகிறோம். டாடா சூழலில் அங்கமாக வாடிக்கையாளர்களுடன் வலுவான தொடர்பை உண்டாக்கி, எங்கள் வளர்ச்சியை விரைவாக்குவோம்,” என சி.இ.ஓ ஹரி மேனன் கூறியுள்ளார்.
துணை நிறுவனம் மூலம் பிக்பாஸ்கெட் நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் முறைப்படி போட்டி ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
”இந்தியாவில் மளிகைப் பொருட்கள் என்பது மிகவும் முக்கிய அங்கமாக இருக்கிறது. மிகப்பெரிய மளிகை இணைய நிறுவனமாக இருக்கும் பிக்பாஸ்கெட், மிகப்பெரிய நுகர்வோர் பரப்பை உருவாக்கும் எங்கள் திட்டத்தில் பொருந்துகிறது” என டாடா டிஜிட்டல் சி.இ.ஓ பிரதிக் பால் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: பிரசன்னட்டா பட்வா | தமிழில்: சைபர் சிம்மன்