போட்டித் தேர்வு எழுதுவோருக்கு வாட்ஸ் அப் மூலம் பயிற்சி தரும் நெல்லை ஆசிரியை!
தன் கனவு நிறைவேறாததால், பிறர் படித்து, தேர்வெழுதி பணிக்குச் செல்ல, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு தொகுப்பை வாட்ஸ்-அப் வழியே பலருக்கு அனுப்பி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் புவனேஸ்வரி.
பொதுவாக மகளிர் அனைத்துத் துறைகளிலும் சாதிக்கும் காலமிது. என்னதான் சாதனைப் பெண்ணாக இருந்தாலும், அவர் ஓர் சராசரி பெண் செய்யும் அத்தனை பணிகளையும் செய்துதான் ஆகவேண்டும். திருமணமான ஓர் பெண்ணுக்கு காலை எழுந்தது முதல் மீண்டும் உறங்கச் செல்லும் வரை வேலைகள் வரிசை கட்டி நிற்கும். குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்புவது, கணவரை அலுவலகத்துக்கு கிளப்புவது, சமையல் வேலைகள், துணி துவைப்பது என அவர்களின் பணிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அதிலும் பணிக்குச் செல்லும் மகளிரின் பணி சொல்லி மாளாது. வீட்டையும் கவனித்துக் கொண்டு, அலுவலகப் பணிகளையும் திறம்பட முடிக்கவேண்டும். இவ்வாறு பெண்கள் பம்பரமாய் தனக்காகவோ அல்லது தனது குடும்பத்துக்காகவோ உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், பிறரின் நலனுக்காகவே பாடுபடும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்.
தான் தேர்வெழுதி பணிக்குச் செல்லவேண்டும் என்பதற்காக நாள் முழுவதும் உட்கார்ந்து எழுதி, படித்து உழைப்பவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பிறர் படிக்க, தேர்வெழுதி பணிக்குச் செல்லவேண்டுமென நாள் முழுவதும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஓருவர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. எம்.ஏ., எம்.எட்., முடித்துள்ள இவர், தனியார் கல்வியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். மேலும், எப்படியாவது போட்டித் தேர்வெழுதி அரசு அதிகாரியாகி விடவேண்டும் என்ற முனைப்போடு அதற்கும் தயாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கும், தனியார் பண்பலையில் பணிபுரியும் மகேந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு புவனேஸ்வரி திருநெல்வேலிக்கு வந்துவிட்டார். இங்கு சிறிதுகாலம் பணிபுரிந்த அவர் கருவுற்றதால் பணிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். அப்போதுதான் தான் இதுவரை படித்த படிப்பும், போட்டித் தேர்வுகளுக்கு தயாரித்த உழைப்பும் வீணாகி விடக்கூடாது. அது எப்படியேனும், யாருக்கேனும் பயன்படவேண்டும் எனத் திட்டமிட்டார். அவரது திட்டத்தை செயல்படுத்தி இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வழியே பயிற்சி அளிக்கிறார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,
"பொதுவாக பெண்கள் தங்களுக்குப் பொழுதுபோகவில்லையெனில் டிவியில் ஏதேனும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். ஆனால் மாறிவரும் காலகட்டத்தில் அனைவரும் செல்போனில்தான் பொழுதைக் கழிக்கும் நிலை வந்துவிட்டது. இதனையே நாம் எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என சிந்தித்தேன். அப்போதுதான் குட் மார்னிங், குட் ஈவினிங் என வரும் பொழுதுபோக்கு செய்திகளுக்கு பதிலாக போட்டித் தேர்வெழுதுவோருக்குப் பயனளிக்கும் வகையில் கேள்வி – பதில்களைத் தொகுத்து வாட்ஸ்அப்பில் வழங்கத் தொடங்கினேன்.
விளையாட்டுத்தனமாக நான் தொடங்கிய இப்பணிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. இதையடுத்து இதற்கெனவே தனியாக வாட்ஸ்அப் குரூப்களைத் தொடங்கி, இதை தினசரி பணியாக்கினேன். தற்போது என்னிடம் உள்ள 20க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குரூப்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வுக்குத் தயாரிக்கும் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதில், ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித்தனி குரூப்கள் உள்ளன. பெரும்பாலானவர்கள் தங்களின் பணிநிமித்தமாக பயணம் செய்யும்போது புத்தகங்களைத் தூக்கிச் செல்வதற்கு பதிலாக நான் இவ்வாறு பதிவிடுவதை படிப்பது பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மாணவர்களும் ரொம்ப ஆர்வமாக நிறைய சந்தேகங்களை கேட்பார்கள். அதனையும் தெளிவுப்படுத்துவேன்.
அனைத்து குரூப்களிலும் தேர்வு தொடர்பான செய்திகள் தவிரவேறு பார்வேட் மேசேஸ்களுக்குத் தடைவிதித்துள்ளேன். இதனால் மாணவர்களின் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கும் என்கிறார்.
எங்களது குரூப்பில் பொதுஅறிவு, அறிவியல், புவியியல் என அனைத்து பாடங்கள் தொடர்பான செய்தித் தொகுப்புகள், வினா-விடை தொகுப்புகள், பிடிஎப் இ-புக்ஸ் என ஓவ்வொரு தேர்வுக்கும் தகுந்தாற்போல் தகவல்கள் வெளியிடுகிறோம். இதற்கெனவே ஏராளமான புத்தகங்களை வாங்கி வீட்டில் குவித்து வைத்துள்ளோம். எனது பணிக்கு எனது கணவர் மிகுந்த ஓத்துழைப்பும், ஊக்கமும் அளித்து வருகிறார் என்கிறார்.
சராசரி குடும்பப் பெண்ணான புவனேஸ்வரி காலையில் எழுந்து வழக்கமான சமையல் பணிகளை முடித்துவிட்டு, கணவர் அலுவலகம் சென்ற பின், தனது இரண்டரை வயது பெண் குழந்தை மதியழகியை பாலர் பள்ளியில் விட்டுவிட்டு வந்து, பின் தேர்வுக்கான செய்திகள், பயிற்சிக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் தனது 1 வயது பெண் குழந்தையான மதிவதனியை கவனித்துக் கொண்டே அவர் இவ்வளவு பணிகளை மேற்கொள்கிறார் என்பதே கவனிக்கத்தக்கது.
குழந்தை தூங்கும்போதுதான் பெரும்பாலும் என்னால் வீட்டு வேலைகளாகட்டும் அல்லது தேர்வுக்கான தகவல் தயாரிப்பு பணிகளாகட்டும் எதையும் செய்ய முடியும். பெரும்பாலான நேரங்களில் மாலையில் எனது கணவர் குழந்தைகளை கவனித்துக் கொள்வார். நான் வாட்ஸ்அப்பில் கேள்விகள் மற்றும் தகவல்களை பரிமாறுவேன். சிலநேரங்களில் எனது கணவரே எனக்காக வாட்ஸ்அப்பில் தகவல்களை பதிவிடுவார். பெரும்பாலும் இருவரும் சேர்ந்து இரவு நேரங்களில்தான் தேர்வுகளுக்கான தகவல்களை திரட்டுவது, அவற்றை வாட்ஸ் அப்பில் வெளியிடுவது என செயல்படுத்தி வருகிறோம்.
தேர்வு நெருங்கும் நேரங்களில் கூடுதலாக இரவு முழித்திருந்து இருவரும் பணிபுரிவோம். அதிலும் தேர்வு நெருங்கிவிட்டது என்றால் கூடுதலாக நேரம் ஓதுக்கி பணிபுரிவோம். நம்மால் 4 பேர் வேலைக்கு போனால் சந்தோஷம்தானே என்கிறார்.
இவர்கள் குழந்தைகளின் பெயரின் முதல் எழுத்து மற்றும் புவனேஸ்வரி என்பதன் முதல் எழுத்து போன்றவற்றை சேர்த்து எம்பிஎம் என்ற பெயரில் 1, 2, 3 என இருபதுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்களில் பல்வேறு தேர்வுகளுக்குத் தயார் ஆகும் மாணவர்களுக்கு இவர்கள் தேர்வுக்கான பாடக் குறிப்புகளை தயாரித்து அனுப்புகின்றனர். மேலும், மதி என்ற பெயரில் வலைப்பூ (blog) ஓன்றையும் தொடங்கி, வாட்ஸ்அப்பில் தேர்வுக்கான பாடங்களை பார்க்க இயலாதவர்களுக்காக மீண்டும் பதிவிடுகின்றனர்.
அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது ஓர் காலத்தில் எனது கனவாக இருந்தது. ஆனால், இப்போது என்னால் பலரை அரசுப் பணிக்கு போக வைக்க முடியும் எனும்போது பெருமையாக இருக்கிறது. அரசுப் பணியாளராக இருப்பதை விட ஓர் ஆசிரியையாக அனைவரையும் தயார் செய்து வாழ்க்கையில் ஓர் படி உயர்த்துவது மகிழ்ச்சியான விஷயம் தானே.
பொதுவாக கோச்சிங் சென்டருக்குப் போனால் பயிற்சிக்கு என ரூ. 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கட்டணமாக செலுத்தவேண்டியுள்ளது. ஆனால், அங்கு செல்ல வசதியில்லாதவர்களுக்காகவே இவ்வாறு நாங்கள் இலவசமாக வாட்ஸ்அப் மற்றும் வலைப் பூ மூலம் பயிற்சியளிக்கத் தொடங்கியுள்ளோம்.
இன்று செல்போன் இல்லாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அனைவர் கைகளிலும் செல் இருக்கிறது. அதில் பொழுதுபோக்கு அம்சங்களை அனுப்பி விளையாடுவதற்குப் பதிலாக, இவ்வாறு பயனுள்ள விஷயங்களை செய்யலாமே. தினசரி தேர்வுக்கான தகவல்கள், கேள்வி – பதில்கள் தொகுப்பு, இ-புக்ஸ் தவிர ரூ.500, ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள் போன்றவற்றையும் நாங்கள் முற்றிலும் இலவசமாக பிடிஎப் வடிவில் தருகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு போட்டித் தேர்வர்களுக்கு உதவ நடைபெற்றுவரும் இவர்களது வாட்ஸ்அப் குரூப்பில் இணைய விரும்பினால் 9629933144 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பலாம்.
மேலும் https://mathiacademy.blogspot.com, https://jayasrimahi.blogspot.com போன்ற இணைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இச்சேவையை பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் அரசுப் பணி கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என புவனேஸ்வரி தெரிவித்தார்.