‘ஓலா தயாரிப்புகள் சிறப்பாக இருப்பதாலே மக்கள் அதை வாங்குகின்றனர்’ – பவிஷ் அகர்வால்!
யுவர்ஸ்டோரியின் பிரம்மாண்ட நிகழ்வான `டெக்ஸ்பார்க்ஸ்’ 13-வது பதிப்பில் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் மின்சார வாகனங்களின் சாதகமான அம்சங்களை வலியுறுத்தினார்.
யுவர்ஸ்டோரியின் பிரம்மாண்ட நிகழ்வான 'TechSparks’ கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்று காரணமாக ஆன்லைனில் நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு ஏராளமான பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் யுவர்ஸ்டோரியின் 'டெக்ஸ்பார்க்ஸ்’ நிகழ்வு வழக்கம்போல் மீண்டும் நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது.
பெங்களூரு யஷ்வந்த்பூரில் உள்ள தாஜ் ஹோட்டலில் இன்று முதல் நவம்பர் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளான இன்று இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி யுவர்ஸ்டோரி சிஇஓ & நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மாவின் உரையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் மின்சார வாகனங்களின் சாதகமான அம்சங்களை வலியுறுத்தினார்.
"மின்சார வாகனங்கள் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. சில வாகனங்கள் அரிதாக தீப்பிடித்த சம்பவங்கள் நடந்தபோதும் ஐசிஇ வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்கள் சிறந்தது," என்கிறார் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால்.
மின்சார வாகனங்கள் பாதுகாப்பானவை என்றும் ஐசிஇ வாகனங்களைக் காட்டிலும் விலை குறைவு என்றும் பவிஷ் அகர்வால் சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டில் இந்நிறுவனம் லித்தியன் அயன் பேட்டரிகளை அதிகளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பவிஷ் அகர்வால் மின்சார வாகனங்கள் பாதுகாப்பானவை என்பதை வலியுறுத்தினார். இந்த வகை வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்பதால் நுகவோர் வாங்கவில்லை என்றும் அவை ”சிறந்த தயாரிப்பாக” இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2022 நிகழ்வின் 13-வது பதிப்பில் பேசிய பவிஷ் அகர்வால், பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தும் நுகர்வோரின் தேவைகளை சரிவர புரிந்துகொண்டும் மின்சார வாகனங்களின் தயாரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
மீடியாக்களில் நிறைய மின்சார வாகனங்கள் தீப்பிடித்திருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ஒரே ஒரு ஓலா மின்சார வாகனம் மட்டுமே தீப்பிடித்திருப்பதாகவும் போட்டி நிறுவனங்கள் இதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஓலாவின் மின்சார வாகனம் தீப்பிடித்திருப்பது தொடர்பாகவும் சிலர் உயிரிழந்திருப்பதாகவும் அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் 1,400-க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வெளியிலிருந்து ஒரு குழுவையும் இந்நிறுவனம் நியமித்துள்ளது.
மின்சார வாகனங்கள் தீப்பிடிப்பது தொடர்பாக சம்பவங்களை அடுத்து போட்டியாளர்களான Okinawa, PureEV போன்ற நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும், பேசிய பவிஷ்,
“இந்தியா மின்சார வாகனத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இத்துறையில் நன்றாக விளங்கினால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா EV துறையில், உலக அளவின் தலைமை வகிக்கும் நாடாக இருக்கும்,” என்றார்.
இந்நிறுவனம் மே மாதம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவிஷ் அகர்வால், வரும் நாட்களில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகமிருக்கலாம் என்றாலும் அவை அரிதாகவே இருக்கும் என்றார்.
ஓலாவின் பேட்டரி செல் மற்றும் பேட்டரி மேலாண்மை அமைப்பில் பிரச்சனை இருப்பதாக அரசு விசாரணை சுட்டிக்காட்டியிருந்ததை Reuters ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. இதற்கு ஓலா நிறுவனம் பேட்டரி மேலாண்மை அமைப்பில் பிரச்சனை இல்லை என பதளித்திருந்தது.
‘சந்தைமதிப்பு மட்டுமே நிறுவன வளர்ச்சியின் சரியான அளவுகோல் அல்ல’ - Zerodha நிதின் காமத்!