படிப்பில் எப்போதும் முதலிடம்: ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தென்காசி மாணவி!
அதிகாரிகளால் ஏற்பட்ட ஊக்கத்தால் ஐஏஎஸ் தேர்வுக்கு முயன்ற சண்முகவள்ளி!
தென்காசி - மதுரை சாலையில் உள்ள அலங்கார் நகரைச்சேர்ந்த ஈஸ்வர ராஜ் - கோமதி தம்பதியின் மகள் சண்முகவள்ளி. இவர் தற்போது அந்த கிராம மக்களால் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளே அவரை கொண்டாடக் காரணம். ஆம், இந்தத் தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார் சண்முகவள்ளி. 2020 சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 108வது இடம், தமிழக அளவில் 3வது இடம், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடம் என்ற சாதனை படைத்துள்ள சண்முகவள்ளி ஒரு பொறியியல் பட்டதாரி.
தனது பள்ளிப்படிப்பை தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிந்த சண்முகவள்ளி, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படித்தார். அதில் தங்கப்பதக்கம் பெற்றவர், தனது சிவில் சர்வீஸ் தேர்வு ஆர்வம் குறித்து பேசுகிறார்.
“அண்ணா பல்கலைகழகத்தில் படிக்கும்போது தான் சிவில் சர்வீஸ் தேர்வு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வம் பின்தொடர வைத்தது. இதனால், தினமும் செய்தித்தாள்களை வாசித்து, செய்திகளின் தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பேன். இந்த சமயத்தில் எனது கல்லூரி இறுதியாண்டும் வந்தது. தீர்க்கமாக முடிவெடுத்து யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கத் தொடங்கினேன்,” என்கிறார்.
எனக்கு ஊக்கம் கொடுத்தது கிரண் பேடி, சைலேந்திரபாபு, ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் தான். சிறுவயதில் இருந்து கிரண் பேடி தொடர்பான செய்திகளை வாசிப்பேன். அதேபோல், படிக்கும் காலங்களில் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் சார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சார் பற்றிய செய்திகளை படிக்கும்போது ஊக்கம் கொடுத்தது. அந்த ஊக்கத்தில் தீவிரமாக முயற்சி செய்தேன். முதல் இரண்டு முறை யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதியபோதும் தோல்வி அடைந்தேன். என்றாலும் முயற்சியை கைவிடவில்லை.
மூன்றாவது முயற்சி கைகொடுத்தது. மூன்றாம் முறை மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன். யுபிஎஸ்சி தேர்வில் எனது பொறியியல் பாடத்தை விருப்பப் பாடமாக இல்லாமல், சமூகவியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இதற்கு அந்தப் பாடத்தில் எனக்கு இருந்த நாட்டம் தான் காரணம்.
சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ள நாம் மனதளவில் தயாராக இருந்தாக வேண்டும். தேர்வில் வெற்றிபெறவில்லையென்றால் வேறு வேலைக்கு போகலாம் என்பது போன்ற நினைப்புகளை கடந்து செல்ல வேண்டும். அப்படி வந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அந்த எண்ணம் எனது மனதில் எப்போதும் இருந்தது.
”கொரோனா லாக்டவுன் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு படித்தேன். வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு எனது குடும்பத்தினர் கொடுத்த ஆதரவு முக்கியம். இப்போது மக்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று தனது வெற்றிக் குறித்து பேசுகிறார்.
சிபிஎஸ்இ மீடியத்தில் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட சண்முகவள்ளி பத்தாம் வகுப்பில் 500க்கு 500 மார்க் வாங்கி மாநிலத்துல முதலிடம் பிடித்திருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1184 மார்க் வாங்கி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் ஐந்தாவது இடமும் பிடித்திருக்கிறார். படிப்பு என்று வந்துவிட்டால் சண்முகவள்ளி எப்போதும் அதில் முதலிடம்தான் என்கிறார் அவரின் தந்தை.
தகவல் உதவி: விகடன் | தொகுப்பு: மலையரசு