ஒரே பாட்டில் நாடு முழுக்க ஃபேமசாகிய பிளாட்பார வாழ் பாட்டியின் இனிமையான குரலுக்கு ரியாலிட்டி ஷோ வாய்ப்பு!
வைரல் அளித்த வாழ்வு: உள்ளூர் ரயில்கள், ரயில் நிலையங்களிலும் பாடுவதன் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டிவந்த பாட்டியின் பாடல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலோ வைரலாக 2 மில்லியன் வியூஸ் ஆகி, ரியாலிட்டி ஷோ வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.
சும்மாயிருப்பவர்களையும் இன்ஸ்டன்ட் செலிபிரிட்டிகளாக்கி அழகு பார்க்கின்றது இன்றைய இணையம். இதில், ஆடல் பாடல், காமெடி என தனித்திறமைகளில் சிறந்தவர்களாக இருந்து அவர்களது வீடியோக்கள் வெளியானால், குறுகிய காலத்திற்கு சோஷியல் மீடியா முழுவதும் அவர்களது ராஜ்ஜியம் தான்!. அப்படி, இன்ஸ்டன்ட் ஃபேமஸ் ஆனவர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட்டாய் இணைந்துள்ளார் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாட்டி.
மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் அமர்ந்து பாட்டி ஒருவர் இந்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்துள்ளார். அதை வீடியோ எடுத்த ஒருவர் ஃபேஸ்புக்கில் வெளியிட வியூஸ்களை அள்ளியது. வீடியோவில் அப்பாட்டி 1972ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ஷோர் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய ‘ஏக் பியார் கா நக்மா ஹை’ பாடலை அவ்வளவு அழகாக பாடியுள்ளார். கடந்த இரு வாரங்களாக இணையத்தில் வைரலாகி வரும் அவ்வீடியோவில் பாடும் பாட்டியின் பெயர் ரானு மரியா மண்டல். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர், இப்போது ‘ரனகாட்டின் லதா’ என்று அழைக்கப்பட்டு பிரபலமாகி வருகிறார்.
டுவிட்டர், யூடியூப், ஃபேஸ்புக் என்று சகல சமூக வலைதளங்களிலும் ரானுவின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த பாட்டிக்குள் இப்படியொரு திறமையா என வாயடைத்து போன நெட்டிசன்களும், பிரபலங்களும் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். பாடகர் ஷங்கர் மகாதேவனும் அதிலொருவர். ஆனால்,
“அது ஒரு தற்செயலான சந்திப்பு,” என்கிறார் ரனகாட் ரயில் நிலையத்தில் ரானுவின் பாடலை கேட்டு வீடியோ எடுத்த அதிந்திர சக்கரவர்த்தி.
“ரனகாட் ரயில் நிலையத்தில் பிளார்ட்பார்ம் நம்பர் 6ல் நானும் எனது நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, ரேடியாவில் பாடகர் முகமது ரஃபியின் பாடல் ஒன்று சத்தமாக ஒலித்தது. பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த வயதான பெண் ஒருவர், அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
”நான் பக்கத்தில போய், எங்களுக்காக ஒரு பாடல் பாட முடியுமானு கேட்டேன். அவரும் பாடினார். அதை நான் போனில் வீடியோ ரெக்கார்ட் செய்து கொண்டேன். அவரது மென்மையான குரலையும், இசை உணர்வையும் கண்டு எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது,” என்று இந்தியா டுடே இடம் கூறியுள்ளார் அதிந்திர சக்கரவர்த்தி.
அன்று மாலை, சக்கரவர்த்தியும் அவரது நண்பர்களும் ரானுவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழைய பாடல்களை பாடச்சொல்லி கேட்டுள்ளனர். அவருக்கு உணவும், தண்ணீர் பாட்டிலும் வாங்கிக் கொடுத்துவிட்டு கிளம்பியுள்ளார். இரு தினங்களுக்குப் பிறகு, சக்கரவர்த்தி அவ்வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட, ரானுவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஆம், ஆல்ரெடி நாடு முழுக்க ஃபேமசாகிய அவரை மும்பையை சேர்ந்த தனியார் சேனல் நிறுவனம் ஒன்று அவர்கள் ஒளிபரப்பும் மியூசிக் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அழைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் எக்கச்சக்கமானோர் ரானுவுக்கு உணவளிக்க முன்வந்துள்ளனர். ஏன், லோக்கல் பியூட்டி பார்லர் ஒன்று ரானுவின் லுக்கையே வேற லெவலுக்கு மாற்றி பாட்டியை பியூட்டியாக்கியுள்ளது.
“என் குழந்தை பருவத்தில் இருந்தே பாடல்களை கேட்பதும், பாடுவதும் பிடித்தமான விஷயங்களாக இருந்தது. பாடகர்கள் முகமது ரஃபி மற்றும் முகேஷ்ஜியின் பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். லதா மங்கேஸ்கரது பாடல்கள் எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளன. அவருடைய பாடல்களை என்னுடன் தொடர்புப்படுத்தி கொள்ளமுடியும். அந்த மெல்லிசை எப்போதும் என் இதயத்தை தொடும்,” என்றார்.
ரானுவின் புகழ் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது. ஆம், உள்ளூர் தொகுதி மேம்பாட்டு அதிகாரி (பி.டி.ஓ) ரானுவிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்ததுடன், மற்றும் மேற்கு வங்க அரசாங்கத்தின் கன்யாஸ்ரீ திவாஸ் திட்ட வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 14 அன்று ரானுவை வாழ்த்த திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ரானுவின் மெல்லிசை பாடல் வீடியோ லிங்க் கீழே:
பி.கு: ஹெட்போன் துணையுடன் கேட்பீராக!
தகவல்& படஉதவி : இந்தியா டுடே| கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ