‘டிக்டாக் தடை’ – பயனர்கள் மற்றும் வருவாயை எப்படி பாதிக்கும்?
இந்திய அரசாங்கம் டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான 59 செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது டிக்டாக் செயலியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
டிக்டாக் இந்தியா இந்தத் தடை உத்தரவு குறித்து அறிக்கை ஒன்றில் குறிப்பிடும்போது,
“இந்திய அரசாங்கம் டிக்டாக் உட்பட 59 செயலிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நாங்கள் இந்த உத்தரவிற்கு இணங்குகிறோம். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கமளிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டத்தின்கீழ் தரவுகள் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்கவே டிக்டாக் செயல்பட்டு வருகிறது. இந்திய பயனர்களின் தகவல்கள் சீனா உள்ளிட்ட அந்நிய நாடுகளுக்குப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை,” என்று தெரிவித்துள்ளது.
டிக்டாக் செயலி, சர்ச்சைகளுக்கு சற்றும் குறைவில்லாத செயலி எனலாம். இந்த ஆப் தடை செய்யப்படுவது புதிதல்ல. காரணம் மட்டுமே புதிது.
குறுகிய வீடியோக்களை பதிவிட உதவும் டிக்டாக் இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று அடையாளப்படுத்துவது போன்று டிக்டாக் பிரபலங்கள் என்று தனியே பட்டியலிடும் அளவிற்கு டிக்டாக் மக்களிடையே சென்றடைந்துள்ளது.
இந்தியப் பயனர்கள்
இந்தச் செயலி எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இதுபோன்ற அம்சங்கள் அதிகளவிலான பயனர்களை ஈர்த்தது.
அதுமட்டுமின்றி இந்த ஆப் தேசம், ஜாதி, மதம், நிறம், பாலினம், சமூக-பொருளாதார நிலை என எந்தவித பாகுபாடுமின்றி பயனர்கள் அனைவரும் சமதளத்தில் ஒன்றிணைப்பதால் நாட்டின் மூலை முடுக்குகளையும் சென்றடைந்தது. இந்தியாவின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நிலை நகரங்களில் முதல் முறையாக இணையம் பயன்படுத்துவோர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
உள்ளடக்கங்கள் – சாதக பாதகங்கள்
இசை, நடனம், வசனம் பேசுவது என பயனர்கள் தங்களின் தனித்திறனுக்கேற்ப உள்ளடக்கங்களை உருவாக்கி வீடியோவாக பதிவு செய்ய இந்தத் தளம் உதவியது.
இதுபோன்ற வீடியோக்களை பயனர்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கி வந்த நிலையில் இதைக் கொண்டு பலர் வருவாயும் ஈட்டத் தொடங்கினார்கள்.
அதேசமயம் டிக்டாக் பயனர்களில் லைக், ஷேர் இவற்றிற்கு ஆசைப்பட்டு தங்களது கடமைகளை மறந்து கவனம் சிதறியவர்கள் ஏராளம். இந்த கவன ஈர்ப்பு மோகம்தான் அத்துமீறல்களுக்கு வழிவகுத்தது. ஆபாச வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பலரை முகம் சுளிக்கவும் வைத்தது. இதுபோல் வரையறை ஏதுமின்றி பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக பல்வேறு சர்ச்சைகளை சந்திக்கத் தொடங்கியது.
சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தச் செயலிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் இந்தச் செயலி தடை செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் கோர்ட் உத்தரவுப்படி தடை விலக்கப்பட்டது.
தடையும், தாக்கமும்
டிக்டாக் பயனர்கள் பலர் இந்தச் செயலியின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தடையானது பலரது வருவாயைக் கேள்விக்குறியாக்கும்.
பெரும்பாலும் 20-களில் இருக்கும் இளைஞர்களே இந்தச் செயலியின் பயனாளர்களாக உள்ளனர். இவர்கள் உருவாக்கும் வீடியோக்கள் பார்வையிடப்படும் எண்ணிக்கையின் அடிப்படையில் வருவாய் ஈட்டுகின்றனர். முன்னணி பிராண்டுகளும் இவர்கள் மூலம் விளம்பரப்படுத்துவதால் பயனர்கள் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். இதன் மூலம் பரஸ்பரம் இருவரும் பயனடைகின்றனர்.
பல டிக்டாக் பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற மற்ற சமூக வலைதளங்களில் தங்களைப் பின் தொடருமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்வதையும் நம்மால் பார்க்கமுடிகிறது.
இது ஒருபுறம் இருக்க இளம் சமூகத்தினரை டிக்டாக் தளம் மூலம் அதிக விளம்பர உத்திகளோ, செலவுகளோ இன்றி எளிதாகச் சென்றடைந்த பிராண்டுகள் இந்தத் தடை காரணமாக பாதிக்கப்படும்.