61 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி; ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது ஏன்?
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க வந்த ஒருநபரை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க வந்த ஒருநபரை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
61 வயதில் அசத்திய முன்னாள் ஆசிரியர்:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 61 வயதான இவர், விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று வென்றுள்ளார். தருமபுரி மாவட்டம் இந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சிவப்பிரகாசம், கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஆசிரியராக பணியாற்ற தான் ஓய்வு இருக்கிறதோ தவிர, பிறருக்கு கற்றுக்கொடுப்பதில் வயது தடையில்லை என எண்ணினார் சிவப்பிரகாசம். எனவே தான் தன்னிடம் படித்து, தற்போது நீட் பயிற்சி எடுத்து வரும் மாணவர்களுக்கு உயிரியியல் பாடத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைத்து வருகிறார்.
“அப்படி என்னிடம் சந்தேகம் கேட்டு வரும் மாணவர்கள் நீட் தேர்வை பற்றி கூறும் தகவல்கள் ஆர்வத்தை தூண்டியது. எனவே ஒருமுறை நீட் தேர்வை முயற்சித்து பார்த்தால், மாணவர்களுக்கு அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி விளக்க முடியும். மேலும், முன்னாள் ஆசிரியராக இருந்தாலும், மாணவர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டு வருவதால், நீட் தேர்வை எழுதி பார்க்க எண்ணினேன்,” எனக்கூறுகிறார்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது என்ற அம்சம், சிவப்பிரகாசத்திற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனையடுத்து, நீட் தேர்வில் பங்கேற்ற சிவப்பிரகாசம், முதல் முயற்சியிலேயே 249 மதிப்பெண் பெற்றார். சிவப்பிரகாசம் படித்தது அரசு பள்ளி என்பதால், மாநில அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலின் கீழ் 349வது இடம் கிடைத்தது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த 544 மாணவர்களுக்கு இடம் உறுதி என்பதால், நேற்று சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். ஆனால், மருத்துவப் படிப்பில் சேர ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசத்திற்கு இடம் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு 2007ம் ஆண்டு கொண்டு வந்த பொது நுழைவுத்தேர்வு சட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற விதி உள்ளது. எனவே சிவப்பிரகாசத்திற்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்கவில்லை.
தரவரிசை பட்டியலில் இடம் பெற்றது எப்படி?
சிவப்பிரகாசத்திற்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்றதும், அது எப்படி தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஒருவர், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியற்றவராக ஆனார் என்ற கேள்வி எழுந்தது.
நீட் தேர்வு எழுத வயது வரம்பு தடையில்லை என்ற மத்திய அரசின் சட்டத்தின் படியே சிவப்பிரகாசத்திற்கு தர வரிசை பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் மாநில அரசின் சட்டத்தின் படி 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்பதால், பியூசி படித்த சிவப்பிரகாசத்திற்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டுள்ளதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது.
ஆனால், சிவப்பிரகாசம் தனது மாணவனுக்காக மட்டுமே நேற்று கலந்தாய்வில் பங்கேற்க உடன் வந்துள்ளார். மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றது குறித்து கூறுகையில்,
“61 வயதில் மருத்துவம் படித்தாலும் என்னால் சர்வீஸ் செய்ய முடியாது. ஆனால், அது ஒரு இளைஞருக்கு கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற எனது மகனின் விருப்பத்தை ஏற்று, கலந்தாய்வில் பங்கேற்க போவதில்லை என முன்னதாகவே முடிவெடுத்துவிட்டேன். எனது மாணவர் உடன் வர அழைத்ததால் தான் கலந்தாய்விற்கு வர நேர்ந்தது,” என்கிறார்.
முடிவு எதுவாக இருப்பினும், 61 வயதில் நீட் தேர்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாகசத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.