முதுமையில் ஓர் துவக்கம்; ஊட்டச்சத்து லட்டுபார் தொழிலில் வெற்றிகண்ட 62 வயது உஷா!
நவீன உலகில் மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால் இழந்து கொண்டிருக்கும் ஆரோக்கியத்தை, 1,500 ஆண்டு பழமையான சமையல் குறிப்பை பின்பற்றி, இளம் தலைமுறையினரை கவரும் வகையிலும் சாக்லேட் பார் வடிவிலான லட்டுபார்களை உருவாக்கி வெற்றிகர தொழில்முனைவராகியுள்ளார் உஷா.
மகள், மனைவி, தாய், பாட்டி என வாழ்வின் அடுத்தடுத்த பரிமாணங்களை கையாளுவதற்காகவே, வாழ்க்கையின் லட்சியங்களை மூட்டை கட்டும் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர் எண்ணிலடங்கா பெண்கள். அவர்களில் ஒருவராகயிருந்த உஷா ஷ்ரோத்ரியா அவரது 62 வயதில் லட்சிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
நவீன உலகில் மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால் இழந்து கொண்டிருக்கும் ஆரோக்கியத்தை, 1,500 ஆண்டு பழமையான சமையல் குறிப்பை பின்பற்றி, இளம் தலைமுறையினரை கவரும் வகையிலும் சாக்லேட் பார் வடிவிலான லட்டு பார்களை உருவாக்கி வெற்றிகர தொழில்முனைவராகியுள்ளார் உஷா.
சரியான ரெசிபிக்காக தொடர்ந்து சோதனை செய்து 90 முறை தோல்வியுற்ற பிறகு சரியான விகிதாச்சாரத்தை கண்டறிந்து, "மாமா நரிஷ்" (Mama Nourish) என்ற பிராண்டினை உருவாக்கியுள்ளார். இன்று, அதன் இணையதளத்தின் மூலமும், டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 விமான நிலையங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 150 கார்ப்பரேட் அலுவலகங்களில் விற்பனை இயந்திரங்களின் வழியும் அதன் விற்பனையை செய்துவருகிறது.
கனவுகளை தகர்த்த கடமை!
62 வயது வரை, உஷா ஷ்ரோத்ரியாவின் உலகம் அவரது குடும்பம் மற்றும் அவர்களின் தேவைகளைச் சுற்றியே இருந்தது. ஒரு இல்லத்தரசியாக குழந்தைகளை வளர்ப்பதிலும், அவர்களுக்கு அவருடைய பாட்டி மற்றும் அம்மா கற்றுக்கொடுத்த சமையல் குறிப்புகளால் சமைத்து கொடுப்பதிலும் மகிழ்ந்து வந்தார். தீபாவளி மற்றும் சிவராத்திரி போன்ற பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வகைகளை தயாரித்து, சமையற்கட்டுக்குள் அவரது வாழ்க்கையை முடக்கினார். ஆனால், உஷாவிற்கு வேறு கனவுகளும் இருந்தன.
பட்டதாரியான உஷா, பலமுறை அவரது லட்சியங்களை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆம் திருமணத்திற்கு முன், அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக விரும்பினார். அவரது கனவுக்கு தந்தை ஆதரவளித்தபோதும், ஒரு இளம் பெண்ணுக்கு இது சரியான தொழில் அல்ல என்று அவரது தாயாரால் அவருடைய கனவு கலைக்கப்பட்டது. பின்னர், அவர் ஒரு ஆசிரியராக விரும்பினார். ஆனால், அச்சமயத்தில் அவருடைய குடும்பம் அவரது அபிலாஷைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
உத்தரகாண்டில் உள்ள கரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அவருடைய கணவர், போக்குவரத்துத் தொழிலைத் தொடங்கும் யோசனையுடன் இருந்தார். உஷா வேலைக்கு சென்றுவிட்டால் குடும்பத்தை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழுந்து அவர் குடும்பத்தின் தலைவியாக, தாயாக பரிமாணம் எடுத்தபிறகும், அவரது கனவு சுட்டு வீழ்த்தப்பட்டது. தொடர்ச்சியாக அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், ஓய்வு காலத்தில் தொழில்முனைவோராகி சிறகடிக்க தொடங்கியுள்ளார்.
பாரம்பரிய லட்டு டூ பேன்சியான லட்டுபார்...
2021ம் ஆண்டு உஷா, மும்பையில் வசித்து வந்த அவருடைய மகன் யாஷ் பராஷை பார்க்க சென்றுள்ளார். அப்போது குழந்தையைப் பெற்றெடுத்த மருமகள் அபூர்வாவுக்காக சிறப்பு கோண்ட் லட்டுகளை உருவாக்கினார். கோண்ட் லட்டுகள் நெய், கோதுமை மாவு, வெல்லம், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தமாகும். இது பொதுவாக ஒரு பெண் குழந்தை பெற்ற பிறகு ஆரோக்கியத்திற்காக கொடுக்கப்படும் பண்டமாகும்.
"என்னுடைய மகள் கர்ப்பமாக இருக்கும் போது, அவருக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், கோண்ட் லட்டுகளை தயாரிக்க சர்க்கரையினை பயன்படுத்தாமல் உலர்ந்த பழங்கள் மற்றும் பேரீச்சம் பழம் கொண்டு தயாரித்தேன். அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்த லட்டுகளை எப்படி செய்வது மற்றும் சேமிப்பது என்று விவாதிக்க ஆரம்பித்தோம்."
"என் மருமகள், மகனுக்கு தினமும், தானியங்களில் தயாரித்த எனர்ஜி பார்களை லன்ச் பாக்ஸில் கொடுத்து வந்தார். ஏன், லட்டுகளை பார் வடிவில் தயாரிக்கக் கூடாது என்ற யோசனை எட்டியது. 90 சோதனைகளுக்குப் பிறகு சரியான விகிதாச்சாரத்தைப் பெற்றேன்," என்றார் உஷா மகிழ்ச்சியுடன்.
பாசிப்பயறு, உளுத்தம் பருப்பு மற்றும் கம்புமாவு, சர்க்கரையை இல்லாமல், பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்தது, நெய்யை குறைத்து என அவருடைய பரிசோதனை தொடர்ந்து கொண்டே இருந்தது. தாயின் முயற்சியையும், ஆர்வத்தையும் கண்ட யாஷ், லட்டு பார்களை அவருடைய சக கார்ப்பரேட் ஊழியர்களிடம் கொடுத்து கருத்து கேட்டார்.
250 பேரிடம் ஆய்வு செய்ததில், இரட்டை வருமானம் கொண்ட நகர்ப்புற குடும்பங்களில் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுக்கான பற்றாகுறை இருப்பதை புரிந்து கொண்டனர். பின், அவருடைய நண்பர் குணால் கோயலுடன் இணைந்து அம்மாவின் ரெசிபிக்களை வணிகமாக்கினார்.
"பாரம்பரிய பதார்த்தங்களுக்கு நம்பகமான பிராண்ட் இல்லை என்று கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் கூறினர். அவர்கள் தங்கள் தாயை மட்டுமே நம்புவதாக தெரிவித்தனர். உணவு தொழில்நுட்ப வல்லுநர்களிடம் பேசியதில் லட்டுபார் முழு வடிவம் பெற்றது. இந்த சோதனைக்கு ஆறு மாதங்கள் எடுத்தது. இறுதியாக கடந்த ஜனவரி மாதம் விற்பனையை துவக்கினோம்," என்றார்.
பாட்டியின் கைப்பக்குவமும்; மகனின் ஆதரவும்;
பாட்டி மற்றும் அம்மாவின் ரெசிபிக்களுடன் மட்டும் மாமா நரிஷின் தயாரிப்புகளை நிறுத்தி கொள்ள உஷாவிற்கு மனமில்லை. அதற்காக இருவரது உதவியை நாடினார். அவரது நீண்டகால அண்டை வீட்டாரரான சரோஜ் மதன் அவரறிந்த 1,500 ஆண்டு பழமையான மூலிகை லட்டு ரெசிபியை பகிர்ந்து கொண்டார். மற்றொருவரான மகாராஷ்டிராவை சேர்ந்த யூடியூப் ஸ்டாரான 70 வயது பாட்டி ஆப்லி ஆஜியின் அவரது மேத்தி லட்டு ரெசிபியை மாமா நரிஷ்காக பகிர்ந்தார். இன்று `மாமா நரிஷ்` மொத்தம் 12 SKUகளை வழங்குகிறது.
பராஷர் மற்றும் கோயல் அமேசான் சந்தைக்கு செல்வதற்கு முன் லட்டு பார்களை தங்கள் சொந்த இணையதளத்தில் விற்க முடிவு செய்தனர். ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் செயல்திறன் சந்தைப்படுத்தல் கருவிகளைப் பயன்படுத்தி, அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் முதல் கார்ப்பரேட் ஆர்டரை பெற்றனர்.
அமேசானிலும் லட்டு பார்களை பட்டியலிட்டனர். மாமா நரிஷ் ரெசிபிகளை சொந்தமாக வைத்திருக்கும் அதே வேளையில், அதன் உற்பத்தியானது எஃப்எஸ்எஸ்ஏஐ- மற்றும் எஃப்டிஏ-சான்றளிக்கப்பட்ட மூன்றாம் தரப்பிடமிருந்து அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. இருப்பினும், உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தரச் சோதனைகளை உஷா கண்காணிக்கிறார்.
"வென்டிங் மெஷின்களில் லட்டு பார்கள் கிடைக்கும்படி வெவ்வேறு அலுவலகங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் எங்களிடம் சொல்லத் தொடங்கினர். அதனால், நாங்கள் இப்போது டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு விமான நிலையங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள 150 கார்ப்பரேட் அலுவலகங்களிலும் விற்பனை இயந்திரங்களில் லட்டுபார்கள் கிடைக்க செய்துள்ளோம்," என்று பராஷர் கூறுகிறார்.
இணையதள பக்கம் :
1 லட்சம் வாடிக்கையாளர்கள்; 1.5 மில்லியன் டாலர் நிதி - பாட்டியின் ரெசிபியால் வளர்ச்சி கண்ட 'ஸ்வீட் காரம் காபி'