அமெரிக்காவில் பெற்றோர் தற்கொலை- 2 ஆண்டு சட்டப்போராட்டத்துக்குப் பின் அக்கா குழந்தையை தமிழகம் அழைத்து வந்த சித்தி!
2 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பெரும் சட்டபோராட்டம் நடத்தி, அமெரிக்காவில் இருந்த 4 வயது குழந்தையை, தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியத்தின் உதவியுடன் சென்னை அழைத்து வந்துள்ளார் அக்குழந்தையின் சித்தியான அபிநயா.
சினிமாவையே விஞ்சி விடும் அதிரடி திருப்பங்களுடன், இரண்டு வருட சட்டப் போராட்டம் நடத்தி, அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட தனது அக்காவின் குழந்தையை மீட்டு வெற்றிகரமாக தமிழகம் திரும்பி இருக்கிறார் அபிநயா என்ற பாசக்கார சித்தி.
நிர்கதியான குழந்தை
தமிழகத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரவீனும், திருச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய அவர்கள் இருவரும் திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மிஸிசிப்பி மாகாணத்தில் வேலை பார்த்து வந்த அவர்களுக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
விஸ்ருத் எனப் பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயதாக இருக்கும்போது, கடந்த 2022ம் ஆண்டு மே 2ம் தேதி அமெரிக்காவிலேயே பிரவீனும், தமிழ்ச்செல்வியும் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே நேரத்தில் பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவித்த விஸ்ருத்தை, அவரது பக்கத்து வீட்டுக்காரர் பொறுப்பில் எடுத்து வளர்த்து வந்துள்ளார்.

அயலக தமிழர் நல வாரியத் தலைவருடன் அபிநயா மற்றும் குழந்தை
பஞ்சாப் தம்பதிக்கு தத்து
பிரவீன் மற்றும் தமிழ்ச்செல்வியின் உடலை தமிழகம் அனுப்புவதற்காக பெறப்பட்ட பொது அதிகார ஆவணம் (power of attorney) மூலம், குழந்தை விஸ்ருத்தை தன்னுடனே வைத்துக் கொண்ட அந்த பக்கத்து வீட்டுக்காரர், பின்னர் அக்குழந்தையை அமெரிக்காவில் வசித்து வரும் பஞ்சாபைச் சேர்ந்த தம்பதிக்கு தத்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினர், குழந்தை விஸ்ருத்தை இங்கு அழைத்து வந்து தங்கள் பொறுப்பில் வளர்க்க விரும்பியுள்ளனர். ஆனால், அமெரிக்க குடியுரிமையுடன், பஞ்சாப் தம்பதியின் தத்து குழந்தையாக வளர்ந்து வந்த விஸ்ருத்தை இந்தியா அழைத்து வருவது அவ்வளவு சுலபமான வேலையாக இருக்கவில்லை.
முதல்வர் உத்தரவு
எனவே, இந்த விவகாரத்தை அவர்கள் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், இந்தப் பிரச்சினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதியை உடனடியாக அமெரிக்கா சென்று இப்பிரச்னைக்குத் தீர்வு காண உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதற்கிடையே தனது அக்கா மகனை பத்திரமாக தமிழகம் மீட்டு வர, தமிழ்ச்செல்வியின் அம்மாவும், தங்கை அபிநயாவும் நேரடியாகவே அமெரிக்கா சென்றனர். அங்குள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நல்ல உள்ளங்கள் உதவியுடன் விஸ்ருத்தை இந்தியா அழைத்துவர கடந்த இரண்டு வருடங்களாக அங்கேயே இருந்து அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது இந்த முயற்சிக்கு அயலக தமிழர் நல வாரியம் பெரும் துணையாக இருந்துள்ளது.
சட்டப்போராட்டம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா சென்ற அயலக தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மிஸிசிப்பி மாகாணத்தின் இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பில் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மிஸிசிப்பி மாநில ஆளுநர் டேட் ரிவிஸுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
மிஸிசிப்பி நகர தமிழ் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அமெரிக்காவுக்கான அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் ஆகியோரும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சகமும் குழந்தையை மீட்பதற்கான முயற்சிகளுக்குப் பங்களித்தது.

இவற்றின் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள டென்னசி மாகாணத்தில் குழந்தையை மீட்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அயலகத் தமிழர் நல வாரியத்தின் அமெரிக்க உறுப்பினர் கால்டுவெல் வேள்நம்பி, அட்லாண்டா இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், மிட் சௌத் தமிழ்சங்க உறுப்பினர்கள், அயலகத் தமிழர்களுக்காகச் செயல்பட்டு வரும் REACTION அமைப்பின் பிரதிநிதிகள், குழந்தையின் சித்தி அபிநயா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
ஜெயித்தது பாசம்
தொடர் முயற்சியின் பலனாக அந்த சித்தியின் பாசப்போராட்டம் ஜெயித்தது. இரண்டு வருட சட்டப் போராட்டத்திற்குப் பின், ஏப்ரல் 1ம் தேதி தனது அக்கா மகனை பத்திரமாக சென்னை அழைத்து வந்துவிட்டார் அபிநயா.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அபிநயா,
"என் அக்காவும் மாமாவும் தற்கொலை செய்து கொண்ட செய்தி எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அதைவிட அதிர்ச்சியாக, அவர்களுடைய 17 மாதக் குழந்தையை எங்களின் சம்மதமே இல்லாமல் ஒரு குடும்பம் தத்தெடுத்ததை கேள்விப்பட்டதும் எங்களால தாங்கிக் கொள்ளவே முடியவில்லை,” என்றார்.
அயல்நாட்டில் இருந்து எங்கள் குழந்தையை மீட்டு வர, அயலக தமிழர் நல வாரியம் மூலமாக தமிழக அரசு எங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்தது. அமெரிக்காவில் எங்களது சட்ட ரீதியான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண அயலக தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட குழு எங்களுக்கு மிகவும் உதவியது. இந்த அனைத்து உதவிகளுக்கும் தமிழக அரசிற்கும், அயலக தமிழர் நல வாரியத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. அவர்களது உதவி இல்லாமல் நிச்சயம் இது சாத்தியப்பட்டிருக்காது.
”ஒரு வழியாக குழந்தையை தமிழகம் அழைத்து வந்து விட்டோம். இனி, அக்கா, மாமா இல்லாத குறை தெரியாமல் அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசை,” எனக் கூறியுள்ளார்.

உதவிக்கரம் நீட்டிய தமிழர்கள்
பொறியியல் பட்டதாரியான அபிநயா, ஊரில் இருந்த தனது சொந்த வீட்டை விற்று, தனது அக்கா மகனை மீட்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சுமார் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து, மிகப் பெரிய சட்ட போராட்டத்தை நடத்தியுள்ளார். அவரது இந்த பாசப்போராட்டத்திற்கு, அமெரிக்க தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தமிழ் சங்கங்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவில் அபிநயாவிற்கு பெரும் பக்கபலமாக இருந்து, தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து, இன்று அக்குழந்தை தனது உறவினர்களிடம் பத்திரமாகச் சென்று பெரும் பங்காற்றியது அயலக தமிழர் நல வாரியம் தான்.
சிறப்பு அனுமதி
இது குறித்து அந்த வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில்,
“அமெரிக்காவில் பிறந்ததால் அக்குழந்தை அமெரிக்க குடிமகன் தான். ஆனாலும் இந்த விவகாரத்தில் அக்குழந்தை அதன் உறவினர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதில், அமெரிக்க நீதிமன்றம் எங்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. அமெரிக்காவில் ஓராண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே தங்க முடியும் என்ற சட்டத்தை தாண்டி, அபிநயாவிற்கு அந்நாட்டில் தொடர்ந்து தங்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
”குழந்தை தற்போது அவரின் சித்தியின் பராமரிப்பில் வளர வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் குழந்தை மேஜர் ஆன பிறகு, இந்தியா அல்லது அமெரிக்கா என எந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் அதுவரை ஒவ்வோர் ஆண்டும் குழந்தையின் நிலை குறித்து அமெரிக்க அரசாங்கத்துக்கு அபிநயா தகவல் அளிக்க வேண்டும்.”

மனமார்ந்த நன்றி
தொலைநோக்கு பார்வையில் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய அயலகத் தமிழர் நல வாரியம் இதுபோன்ற குரலற்றவரின் குரலாக இருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சட்டப் போராட்டத்தில் விஸ்ருத் அவரது உறவினர்களைச் சென்றடைய உதவிய முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அட்லாண்டாவில் இருக்கக் கூடிய இந்திய நாட்டு தூதருக்கும், அமெரிக்காவில் பணிபுரியக் கூடிய வழக்கறிஞர் பாலாஜி, கவிதா, ரோகிணி, லாவண்யா, வழக்கறிஞர் செல்வி நிலா, இந்திய தூதரக அதிகாரி மினி நாயர் ஆகியோருக்கு அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சட்டப் போராட்டங்களை தாண்டி இன்று குழந்தை விஸ்ருத் தன்னுடைய சித்தி மற்றும் பாட்டியுடன் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்திருப்பது பிரவீன் மற்றும் தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினரை மட்டுமல்ல, சொந்தக் குடும்பத்தினரைப் பிரிந்து அயல்நாடுகளில் வாழ்ந்து வரும் அயலக தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.