’இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இலக்கை அடைவோம்’ - நம்பிக்கைக் கொடுத்த மோடி!
Chandrayaan2: விண்வெளி ஆய்வில் இஸ்ரோ புதிய உச்சத்தைத் தொடும் புதிய விடியல் காத்திருக்கிறது என்று விஞ்ஞானிகளுக்கும் கண்ணீர் விட்டு அழுத சிவனுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையூட்டியுள்ளார்.
உலகமே உற்று நோக்கிய சந்திராயன் 2 முழு வெற்றியை ருசிப்பதற்குள் நிலவில் தரையிறங்கும் சில விநாடிகளுக்கு முன்னர் ‘விக்ரம்’ லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகளை அந்த நிமிடம் சோகம் கவ்வியது. லேnடரில் இருந்து சிக்னல் ஏன் துண்டிக்கப்பட்டது, அந்த விண்கலத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சந்திராயன் – 2 பற்றிய கடைசி தகவலை இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கிச் சொன்னதையடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டார். அதிகாலை 2.30 மணியளவிலேயே வாட்டமான முகத்தோடு இருந்த விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை பேசினார் பிரதமர்.
இஸ்ரோ தலைவர் சிவனை தட்டிக்கொடுத்து நம்பிக்கை கொடுத்தார். நாடு, அறிவியல் மக்களுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் சேவை செய்திருக்கிறார்கள். வெற்றிக்கு மிக அருகில் சென்ற இந்த முயற்சியால் இந்திய மக்கள் பெருமை கொள்கிறார்கள் என்று விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டு அறைக்கேச் சென்று அவர்களை தேற்றினார்.
இதனைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
“இன்றைய நாம் கற்றுக்கொண்ட பாடம் நம்மை மேலும் சிறப்பாக செயல்படவும் வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும். நிச்சயம் புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது, இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இலக்கை அடைவோம். கடைசி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது இது நிரந்தரமல்ல. நம்முடைய ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றி வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”
உங்களுக்குள் இருக்கும் மனவிரக்தியை நான் உணர்கிறேன். லேன்டர் தகவல் துண்டிக்கப்பட்ட அந்த நேரத்தில் உங்களுடைய இருக்கமான முகங்களைக் கண்டேன். இதுவரை யாருமே செல்லாத இடத்திற்கு விண்கலனை செலுத்தி நீங்கள் சாதித்துள்ளீர்கள். எங்கள் முகங்களில் சிரிப்பை கொண்டு வர மென்மேலும் நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவீர்கள் என்று நம்புகிறோம். நிலவிற்கு செல்ல வேண்டும் என்ற நமது இலக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது.
நமது ஆராய்ச்சியை விரிவுபடுத்த வேண்டும் என்பதை இன்றைய தினம் உணர்த்தியுள்ளது. அறிவியலில் தோல்வி என்பதே இல்லை. செயல்முறைகளும் முயற்சிகளுமே பிரதானம். தாய் நாட்டுக்காக வாழ்கின்ற இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்த்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர். கடைசி வரை சந்திரயான் 2 வுக்காக உழைத்ததற்கு நன்றி.
கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல, நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைக் கொள்ளவேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உறுதணையாக எப்போதுமே இந்திய மக்களும், நானும் உங்களுடனே இருப்போம். சோகத்தை துடைத்துப் போட்டு அடுத்த இலக்கை நோக்கி நகருங்கள். வரலாற்றில் இடம்பிடிப்பதற்கு முன்னர் சில தடைகள் ஏற்படலாம் அதனால் காலதாமதம் ஏற்படலாம் ஆனால் நாம் நொருங்கிப் போய்விடக்கூடாது. விஞ்ஞானிகளின் இரவு பகல் பாராத உழைப்பாலேயே நாம் 95 சதவிகிதம் நிலவை அடைய உதவியாக இருந்துள்ளது. இந்த பயணம் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தந்துள்ளது மனம் தளராதீர்கள் என்று பிரதமர் விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.
சந்திராயன் -2 இஸ்ரோவிற்கு மட்டுமல்ல அதன் தற்போதைய தலைவர் சிவனுக்கும் ஒரு கனவுத் திட்டம். தனது முழு கடின உழைப்பை போட்டு இதன் வெற்றிக்காக பணியாற்றியவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதாரண விவசாயியின் மகனாகப் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து இளநிலை ஏரோநாடிகல் என்ஜினியரிங் முடித்து விண்வெளி ஆய்வில் தன்னை இணைத்துக் கொண்டவர். விக்ரம் லேன்டர் தரையிறக்கப்படும் கடைசி திக் திக் நிமிடங்களில் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்த சிவன் அது நிறைவேறாமல் போகவே சற்று சோர்ந்து போனார். எனினும் விஞ்ஞானிகள் மனம் தளர்ந்து விடக்கூடாது என்பதற்காக சோகத்தை வெளிக்காட்டாமல் இருந்தார்.
பிரதமர் உரையாற்றிவிட்டு இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்படும் முன்னர் அவரை வழியனுப்ப சென்ற சிவன் உடைந்து அழுதார். கலங்கிய சிவனை தனது தோளோடு சேர்த்துக் கொண்ட பிரதமர் அவருக்கு தட்டிக் கொடுத்தும், முதுகில் தடவிக் கொடுத்தும் ஆறுதல் கூறினார். சிவனுடன் பிரதமரும் சிறிது கலங்கித் தான் போனார். இந்தக் காட்சி அங்கு கூடிஇருந்த பல விஞ்ஞானிகளுக்கும் கண்ணீர் வரவழைத்தது. பின்னர் சிவனுக்கு ஆறுதல் கூறியவர்
“தைரியமாக இருங்கள், நம்பிக்கையோடு இருங்கள்,” என்று கூறி விடைப்பெற்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இஸ்ரோ விஞ்ஞானிகளின் பணியை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் “நிலவை ஆராயும் சந்திரயான் 2 விண்கலத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பமுடியாத உழைப்பை தந்திருக்கின்றனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு இந்தியருக்கும் உங்கள் ஆர்வம், அர்ப்பணிப்பு உத்வேகமான ஒன்றாகும். உங்கள் பணி வீணாவதே இல்லை. இது இன்னும் பல பாதைகளை தகர்த்து எறியும். இலக்கினை அடைய இந்திய விண்வெளி பயணங்களுக்கு இந்தஅனுபவம் அடித்தளத்தை அமைத்துள்ளது’ என பாராட்டியுள்ளார்.