'நோயாளிகளின் நம்பிக்கை நாயகி' - டாக்டர் சாந்தாவின் வாழ்வும், அர்ப்பணிப்பும்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், ஆய்வு மூலம் இத்துறையை வளர்த்தெடுப்பதிலும், முன்னோடி மருத்துவராக விளங்கிய டாக்டர்.சாந்தா, தன்னலமற்ற சேவைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
சென்னை புற்றுநோய் ஆய்வு கழகத்தின் தலைவரான டாக்டர்.சாந்தா இன்று காலை மறைந்தார்.
அவரின் மறைவிற்கு இரங்கல் குறிப்புகளும், அஞ்சலிகளும் குவிந்து வருகின்றன. தலைவர்கள், மருத்துவ வல்லுனர்கள் என பல்வேறு தரப்பினரும், நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள இரங்கல் செய்திகள், மருத்துவ உலகில் சாந்தாவின் சாதனையையும், பங்களிப்பையும் சுட்டிக்காட்டுகின்றன. முக்கியமாக அவரது அடையாளமாகத் திகழும் தன்னலமற்ற சேவையை மனதில் பதிவ வைக்கின்றன.
டாக்டர் சாந்தா மறைவிற்கான இரங்கல் செய்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
”மருத்துவர் சாந்தா, 1955ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். இவர் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவினை பெற்று 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை மேம்படுத்தி, நவீன வசதிகளைக் கொண்டு வந்து, புற்று நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்தவர் என்ற பெருமைக்குரியவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் வி சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரையில்,
“புற்றுநோய்க்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்காக டாக்டர் வி சாந்தா ஆற்றிய அரும் பணிகளுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார். ஏழை மக்களுக்கும், நலிந்தவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை முன்னணியில் இருக்கிறது. 2018-ல் அந்த மருத்துவமனைக்கு நான் சென்றதை நினைவு கூருகிறேன். டாக்டர் வி சாந்தாவின் மறைவினை அறிந்து துயருற்றேன். ஓம் சாந்தி,” என்று தெரிவித்துள்ளார்.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நோயாளிகள் நலனுக்காக செலவிட்டு, நிகரில்லாத ஆய்வுக்கு மட்டும் அல்லாமல், பரிவான சிகிச்சைக்கும் அறியப்படும் டாக்டர் சாந்தாவின் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைவதோடு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையும் தழைக்கச்செய்கிறது.
நோபல் குடும்பம்
சென்னையின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்றாக விளங்கும் அடையாறு புற்றுநோய் ஆய்வு கழகம் என்றவுடன் நினைவுக்கு வரும் வகையில் அதன் வளர்ச்சியில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் டாக்டர்.சாந்தா.
நோபல் மேதைகளுடன் தொடர்பு கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். நோபல் மேதையான சர்.சி.வி.ராமன், அவரது தாய் வழி தாத்தாவின் சகோதரர் என்றால், சுப்பிரமணியம் சந்திரசேகர் அவரது தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. 1927ல் சென்னையில் பிறந்தார் வி சாந்தா.
அறிவியல் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் சாந்தாவின் கல்வி ஆர்வத்தில் வியப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் தன் காலத்தில் விளங்கிய பல தடைகளை எதிர்கொண்டு கல்வி கற்க வேண்டியிருந்தது.
ஆரம்பக் கல்வி
தனது தாய் அந்த கால ஆறாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்த வேண்டியிருந்தாலும் அவரது சகோதரிகள் இருவரும், கல்லூரியில் படித்து பட்டம் பெற்றதாக, நியூஸ் மினிட் இணையதளத்திற்கு அளித்த முந்தைய பேட்டியில் சாந்தா கூறியுள்ளார்.
“ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டனர். இதை நான் சாதாரணமானதாக பார்க்கிறேன். நான் வெறும் பி.ஏ அல்லது எம்.எஸ்.சி பட்டதாரியாக மட்டும் இருக்க விரும்பவில்லை,” என அதே பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த முனைப்பே அவரை மருத்துவம் படிக்க வைத்தது. இந்தியாவில் பெண்கள் தொழில்முறை கல்வி பயில்வது அரிதாகக் கருதப்பட்ட காலத்தில் அவர் டாக்டருக்கு படிக்க விரும்பினார்.
“பள்ளியில் படிக்கும் போதே டாக்டராக வேண்டும் என தீர்மானித்தேன். என்னால் முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். இதில் சிறப்பாகவும் செயல்பட்டிருப்பதாக நினைக்கிறேன்,” என்று சாந்தா மேலும் கூறியிருக்கிறார்.
சென்னையின், நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் படித்தவர் பின்னர் மாநிலக்கலூரியில் பி.யூசி. முடித்தார். அதன் பிறகு சென்னை மருத்துவக்கல்லூரியில் டாக்டருக்கு படித்தார். அவரது பேட்சில் இருந்த 100 மாணவர்களில் இருந்த பத்து பெண்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1949ம் ஆண்டு டாக்டர் படிப்பை முடித்தவர், 1954ல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
விதியின் கரம்!
அதற்கு முன், 1950ல் அவர் சென்னை பொது மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர், வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வில் முன்னின்று வழிநடத்தும் பாதைக்கான துவக்கப்புள்ளியாக இது அமைந்தது.
புற்றுநோய்க்கான சிக்கிச்சையை தனக்கான பிரிவாகத் தேர்வு செய்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு,
”இது சற்று கடினமான கதை, பொதுவாக இதை விதியின் தேர்வு என்று சொல்வேன், எனக்குத் தெரியிவில்லை, இவ்விதமாக இது அமைந்தது,” என அவர் பதில் அளித்திருக்கிறார்.
காலம் அவரை இப்பணிக்காக தேர்வு செய்தது போல, அதன் பிறகு அவர் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பதில் முன்னணியில் நின்று பணியாற்றியிருக்கிறார். இன்று புற்றுநோய் சிகிச்சை முன்னோடி என சாந்தா வர்ணிக்கப்பட்டாலும், அவர் இத்துறையில் பணியாற்றத் துவங்கிய காலத்தில் இது எளிதாக இருக்கவில்லை. புற்றுநோய் சிகிச்சைக்கான தொழில்நுட்பம் ஆரம்ப நிலையில் இருந்தது என்பதோடு, சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வும் சொற்பமாகவே இருந்தது.
மருத்துவக்கல்லூரியில் படித்த போது புற்றுநோய் பிரிவு பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை என்று சாந்தா நினைவு கூர்ந்துள்ளார். அது மட்டும் அல்ல, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இறக்கத்தானே போகின்றனர், எனில் இதற்குத் தனிப்பிரிவு எதற்கு என அப்போதைய சுகாதார அமைச்சர் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சூழலில் இருந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் தளர்ந்துவிட வேண்டியதில்லை என நம்பிக்கையோடு சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை முன்னேறியதில் புற்றுநோய் ஆய்வுக் கழகமும் அதன் தலைவரான டாக்டர்.சாந்தாவும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்.
திருப்பு முனை
புற்றுநோய் சிகிச்சையின் மறுபெயராக மாறிய சென்னை அடையாறு புற்றுநோய் ஆய்வுக் கழக மருத்துவமனை, தமிழகத்தின் மற்றொரு முன்னோடியான டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியால் துவக்கப்பட்டது. இதன் வளர்ச்சியில் அவரது மகன் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தியும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இவர்கள் இருவருமே டாக்டர் சாந்தா வாழ்கையில் முக்கிய உந்துசக்தியாக இருந்துள்ளனர்.
”முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் விரிவுரையாளராக இருந்தேன். அதிலிருந்து விலகி புற்றுநோய் மருத்துவமனையில் இணைந்தேன். இது என் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது,” என அவர் கூறியுள்ளார்.
புற்றுநோய் கழகம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றில் டாக்டர்.சாந்தாவும் தொடர்பு கொண்டுள்ளார்.
புற்றுநோய் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தது, இதற்கான ஆய்வு பணிகளில் கவனம் செலுத்தியது ஆகியவற்றோடு, சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சாந்தா முனைப்புடன் செயல்பட்டார். புற்றுநோய் சிகிச்சை தொடர்பான நம்பிக்கை ஏற்பட இதுவும் இரு காரணம்.
விருதுகள்!
புற்றுநோய் சிகிச்சைக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட சாந்தா, இந்த தன்னலமற்ற பணிக்காக பத்ம விருது, மகசாசே விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். அதைவிட முக்கியமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற நோயாளிகளிக்கு நம்பிக்கை நாயகியாக விளங்கியிருக்கிறார்.
பரிவுடன் கூடிய தன்னலமற்ற மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவர்களுக்கான முன்னுதாரணமாகவும் திகழும் டாக்டர் சாந்தா மறைந்திருந்தால் பல்லாயிரக்கணக்கானோரின் நெஞ்சங்களில் நிச்சயம் வாழ்வார்...!