‘குண்டு', ‘வெயிட்டை குறைங்க', பாடி-ஷேமிங்கை சமாளிக்க உதவிய ‘டர்ட்டி பிக்சர்' - வித்யாபாலன்
உடல் எடை குறித்த மற்றவர்களின் கேலி, விமர்சனங்கள், எடையைக் குறைக்க அவர்கள் தாராளமாகத் தரும் ஆலோசனைகள் குறித்த அனுபவங்கள் யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்த வித்யா பாலன்.
‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் கொஞ்சம் டார்க்-ஆ இருக்கீங்க...'
‘அந்த ஆடையில் நீங்க கொஞ்சம் குண்டா தெரியுறீங்க இல்லையா?'
பெரும்பாலானோர் அவர் தம் வாழ்வில் ஒருமுறையேனும் இதுபோன்றதொரு கேள்விகளை எதிர்கொண்டிருப்பர். சுற்றியுள்ளளோர் மட்டுமின்றி, ஆன்லைனில் அந்நியர்கள் கூட ‘கொஞ்சம் வெயிட்ட குறைங்க', ‘உடம்பை ஏத்துங்க', ‘ஃபிட் ஆக இருக்காலமே...’ என அடுக்கடுக்காய் ஆலோசனைகளை பெண்களைப் பார்த்து அள்ளிவிடுவர். சிலர் இவ்வறிவுரைகளுக்கு அடிபணிந்தாலும், பலரும், சமூகம் வரையறுத்து வைத்துள்ள அழகியலுக்கான விதிமுறைகளை உடைத்தெறித்துள்ளனர்.
பல்வேறு துறைகளில் தடம் பதித்து வரும் ஊக்கமிகு மனிதர்களின் கதைகளை கேட்டறியும், யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரதா ஷ்ர்மாவின் ‘யுவர்ஸ்டோரியின் இன்ஸ்பிரேஷன்ஸ்’ தொடரில் சமீபத்திய உரையாடல் நடிகை வித்யாபாலன் உடன் நிகழ்ந்தது.
பாராட்டப்படும் நடிகையும், பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகள் வென்றவருமான வித்யா பாலன், உடல்பருமன் கேலி குறித்த அவரது அனுபவங்களையும், பாடி இமேஜ் பிரச்சனைகளுடன் அவர் எவ்வாறு போராடினார் என்பதை குறித்தும் மனம் திறந்து பகிர்ந்தார்.
பொது மக்களது பார்வையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு, அவர்கள்மீது தொடர்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை சமாளிப்பது ஒரு வேளை கடினமானதாக இருக்கலாம். அதே சமயம், சமூக ஊடகங்களால் ஆளப்படும் காலத்திலுள்ள மக்களின் கருத்துகளும், விமர்சனங்களும் கட்டுபாடற்று, முற்றிலும் ஒழுங்கற்றதாக இருப்பது, பாதிக்கப்படும் மக்களை வேறுபாதைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளுகின்றது.
நீங்கள் வெளிஉலகுக்குள் செல்லும் போது தான், மக்கள் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டு உங்களை கட்டுப்படுத்த எண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்கிறீர்கள். ஏனெனில், அதுபோன்ற எதிர்ப்பை முன்வைத்து கட்டுப்படுத்த நினைப்பது அவர்களுக்கு சுலபமானது. ஒருவித அதிர்ச்சியில் அதை வெளிப்படுத்துகின்றனர் என்பதே உண்மை.
நான் பருமனான பெண்ணாக தான் வளர்ந்தேன். மக்கள் என்னிடம் ‘உங்களுடைய முகம் அழகாயிருக்கு, ஏன் நீங்க கொஞ்சம் வெயிட்டை குறைக்கக்கூடாது,' என்று சொல்லும் வரை இந்த பிரபஞ்சத்திலே நான் தான் அழகிய பெண் என்ற எண்ணத்துடன் இருந்தேன். அத்துடன், தமிழில் ‘குண்டு, இந்தியில் ‘மோட்டி' என விதவித சொற்களையும் நமக்காக பயன்படுத்துவர். கடைசியில் பார்த்தால், திடீரென்று வீட்டு கண்ணாடியில் உங்களை நீங்களே பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்,'' என்று கூறி அவரது அனுபவங்களைப் பகிர தொடங்கினார் வித்யா.
உண்மையில், அவர் ஒரு செலிபிரிட்டியாக மாறுவதற்கு முன்பாகவே உருவகேலிகளை எதிர்கொள்ள தொடங்கிவிட்டார். ஆம், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோருக்கு நடப்பது போலவே, வித்யாபாலனுக்கும் உருவ கேலி பள்ளிப்பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதை குறித்து விவரிக்கையில்,
“நான் எப்போதும் அழகாகவே தான் உணர்ந்தேன். ஆனா, ரொம்ப சீக்கிரமே பள்ளி காலத்திலே மக்கள் உங்களை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும்போது, மக்களினுடைய புரிதல், உணர்வுகள், எதிர்பார்ப்புகள் என அவர்களுடைய கண்ணோட்டத்தின் வழியே உங்களை நீங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள்.'' என்றார் வித்யாபாலன்.
கடந்தாண்டு ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நாடுமுழுவதும் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதாவது, ‘பாடி இமேஜ்' கருத்தை நோக்கிய பெண்களின் அணுகுமுறைகள் மற்றும் அவர்களது உணர்வு என்னவென்பது பற்றியும், ‘உருவ கேலி' பெண்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை பற்றியும் அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அது.
1,200-க்கும் அதிகமான பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 90 சதவீதத்தினர் பாடி ஷேமிங் (Body-Shaming) ஒரு பொதுவான நடத்தை என்று கூறியுள்ளனர்.
95 சதவீதத்தினர் தாங்கள் உருவ கேலிக்கு ஆளாகியுள்ளதாக உணரவில்லை என்று நம்புவதாகக் கூறினர். 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், அவர்களது தோற்றம் மற்றும் உடலமைப்பு குறித்து எவரேனும் கருத்து தெரிவிக்கும்போது, பதட்டமாக உணர்வதாகக் கூறினர். 97 சதவீத மக்கள் பள்ளி காலத்திலே உருவகேலி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நம்புவதாக கூறினர். வித்யாபாலனும் தீர்வை எதிர்நோக்கியே காத்திருக்கிறார்.
உடல் எடை குறித்த மற்றவர்களின் கேலி, விமர்சனங்கள், எடையைக் குறைக்க அவர்கள் தாராளமாகத் தரும் ஆலோசனைகள் என்று நிறைய கசப்பான அனுபவங்களைக் கடந்து வந்துள்ளார் வித்யாபாலன். ஆனால் பத்மஸ்ரீ விருது பெற்ற அவருக்குக் கிடைத்த அவரது குடும்பத்தின் முடிவில்லாத ஆதரவு, அவரை பற்றி எழுந்த அறைகூவல்களை விலக்கி வைக்க உதவியது என்று கூறுகிறார். ஆனால் அதுவும் 2007-08ம் ஆண்டு வரை தான் உதவியுள்ளது. ஒருகட்டத்திற்கு பாடி ஷேமிங் அவரை ஆழமாக பாதித்துள்ளது.
“அதுநாள் வரை தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக நான் வளர்ந்தாலும், 2007-08ம் ஆண்டு தருவாயில் நான் நானாகவே இருக்க எண்ணினேன். அந்த சமயங்களில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஏன், என்னை தொடர்ந்த விமர்சிக்கின்றனர்? மக்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ அதை அப்படியே செய்தபோதும், இன்னும் அவர்களுக்கு என்னதான் பிரச்னை இருக்கிறதென்று யோசிக்க ஆரம்பித்தேன்.''
உடல் பருமன் குறித்த விமர்சனங்கள் வித்யாபாலனை வெகுவாக பாதித்த காலக்கட்டத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆம், விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்' பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
“நான் நிறைய பாடி இமேஜ் சிக்கல்களை எதிர்கொண்ட சமயத்தில், ‘தி டர்ட்டி பிக்சர்' படவாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அச்சமயத்தில், நான் ரொம்ப டாப்பில் இருந்தாலும், டர்ட்டி பிக்சர் அதற்கு அடுத்த உயரத்துக்கு என்னை கொண்டு சென்றது. இதுநாள் வரை என் உடலமைப்பு குறித்து நான் எவ்வளவு சிறுமையாக எண்ணியிருந்துள்ளேன் என்பதை அப்படம் எனக்கு உணர்த்தியது. உண்மையில், என்னுடல் குறித்த என் எண்ணங்களையெல்லாம் உடைத்தெறிந்தது அந்த படம். என் உடல் எப்படியிருந்தாலும், அதை அப்படியே நான் ஏற்றுகொள்ள வைத்தது. ஏனெனில், அந்தபடத்திற்காக சிறிய ஆடைகளை அணிய வேண்டியிருந்தது. கவர்ச்சியாக தோற்றமளிக்க என்னை நான் முதலில் கவர்ச்சியாக உணர வேண்டும் அல்லவா...?''
வித்யாபாலனின் கருத்துப்படி, பிறர் வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாமல், நாம் எப்படியிருக்கிறோமோ அப்படியே நம்மை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். நம் இயல்பான தோற்றத்தை அழகு என்று ஏற்றுகொள்ளவேண்டும்.
‘‘நான் எப்படியிருக்கிறேனோ அப்படியே என்னை நான் ஏற்றுகொள்ளவே எனக்கு ஆசை. கடந்த 9 ஆண்டுகளாக ஹீலர் ஒருவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். பொதுச்சமூக வெளிச்சத்தில் உள்ள ஒருவருக்கு, தெரபி, ஆன்மீகம் என்று ஏதாவது ஒரு வகையில் சப்போர்ட் தேவைப்படுகிறது. எல்லோருக்குமே அதுபோன்றதொரு சப்போர்ட் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.
உண்மையில், மனிதர்களாகிய நாம் விரும்புவது நம்மை நாமாகவே பிறர் ஏற்றுக்கொள்வது மட்டுமே. ஆனால் அந்த ஏற்றுக்கொள்ளல் நம்மிடமிருந்து தொடங்காமல் உலகத்திடமிருந்து எதிர்பார்க்ககூடாது,'' என்று கூறி முடித்தார்.
ஆங்கில கட்டுரையாளர் : ராமர்கோ சென்குப்தா | தமிழில்:ஜெயஸ்ரீ