CAT தேர்வில் வெற்றி பெற்று ஐஐம்-இல் சேர்ந்த பார்வையற்ற மாணவி ஷிவானியின் உத்வேகக் கதை!
“எனது பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ள பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் என்னைச் சேர்த்தனர், அதன் பிறகு, எனது கல்விப் பயணம் 10 ஆம் வகுப்பு வரை எளிதாகிவிட்டது.”
21 வயதான கொட்டக்காப்பு ஷிவானி என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண் பல தடைகளைக் கடந்து சிஏடி தேர்வில் வென்று இந்தூர் ஐஐஎம்-ல் இடம்பிடித்துள்ளார்.
ஷிவானி தெலுங்கானா மாநிலம் ஜகீராபாத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் இங்குள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் (ஐஐஎம்) மதிப்புமிக்க இரண்டாண்டு முதுகலை திட்டத்தில் (பிஜிபி) சேர முடிந்தது கடின உழைப்பினாலன்றி வேறில்லை.
சமீபத்தில் பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் அவர் கூறும்போது, சாதாரண குழந்தைகளுக்கான பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார் என்றும் ஆனால் அவருக்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி ஸ்கிரிப்ட் தெரியாது மேலும் பார்வையற்ற மாணவர்களால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சாதனங்களை அணுக முடியாததால் மிகவும் கஷ்டப்பட்டதாகத் தெரிவித்தார்.
அப்போதுதான்,
“எனது பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ள பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் என்னைச் சேர்த்தனர், அதன் பிறகு எனது கல்விப் பயணம் 10 ஆம் வகுப்பு வரை எளிதாகிவிட்டது,” என்றார் ஷிவானி.
அதன் பிறகு, அனைவருக்குமான பள்ளியில் தான் படிக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்ந்தது. இதனையடுத்து, வணிகப்பாடத்தை எடுத்து அதில் டாப் ரேங்க் எடுத்தார். சென்னையில் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்ற பிறகு, ஷிவானி நவம்பர் 2023 இல் எம்பிஏ படிப்புகளுக்கான மிகவும் கடினமான போட்டிகள் நிரம்பிய பொது சேர்க்கை தேர்வை (CAT) எழுதினார். 18 மேலாண்மை நிறுவனங்களில் நேர்காணலுக்கும் சென்றார்.

அதில்தான் இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் எம்.பி.ஏ.வுக்குச் சமமான பிஜிபி கோர்ஸைத் தேர்வு செய்தார்.
இது குறித்து ஷிவானி ஊடகத்தாரிடம் கூறும்போது,
“பிஜிபி முடித்த பிறகு, நான் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்ற விரும்புகிறேன். தொடக்கத்தில் ஒரு நிறுவனத்தின் அனைத்துத் துறைகளிலும் பணி அனுபவத்தைப் பெறவும், பின்னர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று நிர்வாகத்தின் உயர்மட்ட நிலைக்குச் செல்லவும் விரும்புகிறேன்,” என்கிறார் தன்னம்பிக்கையுடன் ஷிவானி.
வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து ஏற்றத் தாழ்வுகள் அனைத்துச் சூழ்நிலையையும் மனோபலத்துடன் எதிர்கொள்ள தனக்கு உதவியது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் போதித்த பகவத் கீதைதான் என்கிறார் ஷிவானி.

பார்வையற்ற குழந்தைகளுக்கு கல்வி ஒளி கொடுக்கும் இளம் மென்பொறியாளர் கோமதி!