தொகுதி மக்களுடன் உரையாட தமிழக எம்பி வெளியிட்டுள்ள ஆப்!
விழுப்புரம் தொகுதி மக்களே இனி உங்களின் மனுவை உங்கள் எம்-யிடம் இந்த ஆப் வழியே அளிக்கலாம், உரையாடலாம்...
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தந்த தொகுதி மக்கள் பிரச்சனை சம்பந்தமாக சந்தித்து தங்கள் கோரிக்கை மனு அளிப்பது வழக்கம். ஆனால் பல நேரங்களில் குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்த மனுவை நேரில் கொடுப்பதில் சிரமம் உண்டு.
அந்தத் தொகுதியின் குறிப்பிட்ட மக்களவை உறுப்பினர்களை நேரில் சந்திக்க நேரம் கிடைக்காது, அல்லது நீண்ட நேரம் காத்திருக்கவேண்டும் இப்படி பல பிரச்சனைகள் இருக்கும்.
இப்படிப்பட்டச் சூழலில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ’டாக்டர் ரவிகுமார், 'Dr.Ravikumar MP' ’டாக்டர் ரவிகுமார் எம்பி’ என்று ஆன்ட்ராய்டு செயலி ஒன்றை வெள்யிட்டுள்ளார். தமிழகத்தில் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரத்யேக ஆன்ட்ராய்டு செயலி வெளிவந்துள்ளது நல்ல செய்தி.
இதன் மூலம் அந்தத் தொகுதியில் உள்ள யார் வேண்டுமானலும் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினரை நேரடியாக தொடர்பு கொள்ளவும், தொகுதியின் பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினருக்கு சென்றடையும் வகையில் பதிவிட முடியும்.
இந்த ஆப் முயற்சியை மேற்கொண்டு டிசைன் செய்து வெளியிட உதவி இருக்கிறது அதே பகுதியில் எட்டு வருடங்களாக இயங்கி வரும் Villupuram GLUG (Villupuram GNU Linux Users Group) எனப்படும் தொழில்நுட்ப அறிவுசார் அமைப்பு.
இது சம்பந்தமாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுயிடம் பேசியபோது,
”இந்த செயலியை செய்ய வேண்டும் என்ற ஐடியா எங்களுக்கு தோன்றியதும் உடனே விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக பேசினோம். அவரும் உடனடியாக சம்மதித்த பின்னர் இந்த ஆப்’பை உருவாக்குவதற்கான வேலையை எங்கள் குழு தொடங்கியது.”
பொதுவாக மற்ற ஆன்ட்ராய்டு செயலுக்கும் இதுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு அது என்னவென்றால் இந்த செயலியை ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கியுள்ளோம். அப்படி என்றால் இந்த செயலியை உருவாக்க நாங்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர் லாங்குவேஜை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் அதன் மூலம் அவர்களும் இதேப் போன்று மற்றொரு செயலியை உருவாக்கிக் கொள்ள முடியும், என்றார். இதன் மூலம் நாம் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை மற்றவரும் தெரிந்து கொள்வார்கள். மேலும்
இந்த ஆன்ட்ராய்ட் செயலியை நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினரே கையாள்வார். மக்கள் இந்த ஆப் பயன்படுத்தி, கொடுக்கக்கூடிய மனு அல்லது கேள்விகளை அவரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லமுடியும். அவரும் அதற்கான பதிலை மக்களிடம் உடனடியாக தெரிவிக்க முடியும்.
இப்படி தொடர்ச்சியாக பல தொழில்நுட்ப வேலைகளை எங்கள் அமைப்பு செய்து வருகிறது. யார் வேண்டுமானாலும் எங்கள் குழுவில் இணைந்து இந்த வேலையை செய்யலாம் அவ்வப்போது நாங்கள் தொழில்நுட்பம் சம்பந்தமான பல இலவச சிறப்பு பயிற்சிகளை நடத்துகிறோம், என்கிறார் விஜயலட்சுமி.
தொழில்நுட்பம் அனைவருக்குமானது அதைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் நாங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறோம்.
இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரவிக்குமார் எம்.பி பேசுகையில்,
“ நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கான இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ச்சியாக இப்படியான பல புதுமையான முயற்சிகளை என் தொகுதியில் மேற்கொள்வேன்,” என்றார்.