மோடி தர்பாரில் 2019ம் ஆண்டு அதிரடிக் கிளப்பிய 10 சட்டத் திருத்த மசோதாக்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 2.0 வெர்ஷனில் 2019ம் ஆண்டில் இந்தியாவில் பல அதிரடியான சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 370 ரத்து முதல் குடியுரிமை சட்டம் வரை என்ன மாறி இருக்கிறது?
2019ம் ஆண்டு பாஜகவிற்கு மிகவும் சவாலான ஆண்டாக அமைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலாக அருதிப் பெரும்பான்மை வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
நாட்டில் பல்வேறு சீர்திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களையும், மக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதிக்கும் மசோதாக்களாக இருந்தாலும் அதனை துணிச்சலோடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு.
2019ல் பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்த மசோதாக்கள் பற்றிய ஒரு தொகுப்பு.
1. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. அரசியல் மட்டுமின்றி பிரிவினைவாதம், தீவிரவாதம் என பல வடிவங்களைக் கொண்ட சிக்கல் நிறைந்த பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் உருவெடுத்து நிற்கிறது. இதனை ஆயுதமாக வைத்து அவ்வப்போது அமெரிக்கா, இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் செய்து வந்தது.
இதுபோன்ற சூழலின் பின்னணியில் தான் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை இந்த ஆண்டில் எடுக்கத் தொடங்கியது. ஆகஸ்டு 5ம் தேதி கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். மேலும் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாகவும் அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என்றும் அறிவித்தார்.
காஷ்மீர் மக்களுக்கு சிறப்புச் சலுகைகளான நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கே அரசுப்பணி, ஊக்கத்தொகை, நிலம், சொத்து வாங்கும் உரிமை. பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது என்பன உள்ளிட்ட ஷரத்துகளைக் கொண்ட 370 சட்டப்பிரிவின் இணைப் பிரிவான 35-ம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பொருந்தும் என்ற சட்ட மசோதா இந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது.
2. முத்தலாக் தடைச் சட்டம்
முஸ்லிம் பெண்களுக்கு அவர்களின் கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வர திட்டமிட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் சில கடுமையான தண்டனைகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. எனினும் ஆண்களுக்கு தலாக் கூறுபவர்களுக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் ’முத்தலாக் தடை அவசரச் சட்டம்’ பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் மக்களவையின் தொடரில், முத்தலாக் மசோதா கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
3. போக்ஸோ சட்டதிருத்த மசோதா
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இதன்படி மத்திய அரசும் ’போக்ஸோ’ சட்டத்தில் திருத்ததை கொண்டு வந்திருக்கிறது.
POCSO 2019 சட்டத்தின் படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வழி செய்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, ஆபாசப்படம் தொடர்பான குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது. மாநிலங்களவையின் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது கடந்த செப்டம்பர் மாதத்தில் மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
4. ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2005ல் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கான ஊதியமும் இதே சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை மாற்றி அவர்களின் பதவிக்காலத்தை மத்திய அரசுதான் தீர்மானிக்கும் என்றும், அவர்களின் ஊதியத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. மோட்டார் வாகனத் திருத்த மசோதா
இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம் 1938ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. அதில் 1988ம் ஆண்டில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு 2017ம் ஆண்டில் அதன் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ. 10,000 அபராதம், அதிவிரைவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் என அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள், போதிய ஆவணங்களின்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதத் தொகையானது ஆயிரக்கணக்கில் உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் விபத்தில் உயிரிழப்பவர்கள், படுகாயமடைபவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் ஓட்டுநர் பயிற்சி முறையும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு யாராவது உதவினால், அவர்களுக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படாத வகையில் வழக்கை நகர்த்திட மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6. என்ஐஏ சட்டதிருத்த மசோதா
வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தீவிரவாதக் குற்றங்கள், அணு மற்றும் அணுசக்திக்கு எதிரானக் குற்றங்களை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்கும். என்ஐஏவிற்கு அதிக அதிகாரம் அளித்து ஆள்கடத்தல் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், ஆயுதக்கடத்தல் சட்டம் உள்ளிட்ட வழக்குகளையும் விசாரிக்கும் அதிகாரம் அளிக்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காவும், செயல்முறைக்காகவும் காத்திருக்கிறது.
நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி குற்றத்தில் தொடர்புடையவரை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் வைத்து விசாரிக்க என்ஐக்கு சட்ட திருத்த மசோதா இடம் கொடுக்கிறது.
7. திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாதுகாப்பு உரிமை அளிக்கும் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக தேசிய ஆணையம் அமைக்கப்படும்.
திருநங்கைகளுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு 2 ஆண்டுகள் வரை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும் என புதிய சட்டம் சொல்கிறது.
8. ஊதியங்கள் திருத்த மசோதா
நாட்டில் உள்ள 50 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் ஊதியங்கள் சட்ட மசோதா 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம் மற்றும் சம ஊதிய சட்டம் ஆகிய 4 சட்டங்களை ஒருங்கிணைப்பதே ஊதியங்கள் சட்ட மசோதா 2019.
இதன்படி குறைந்தபட்ச ஊதியம் பெறுவது தொழிலாளர்களின் உரிமையாக்கப்படும். அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.
9. சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் திருத்தம்
உபா தடுப்புச் சட்டத்தில் (UAPA - உபா சட்டம்) மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதற்காக தாக்கல் செய்திருக்கும் சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று சட்டவிரோத தடுப்புச் சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்கலாம். மேலும் சட்ட திருத்தம் மூலம் என்ஐஏ இனி வரும் காலங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலத்தை, சொத்தை பறிமுதல் செய்யலாம்.
10. குடியுரிமை திருத்தச் சட்டம்
2019ம் ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது ’இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம்’. இதனால் நாடே போராட்டக்களமாகி இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act 2019) பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழி செய்கிறது.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம். இந்த அம்சத்தில்தான் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.