Motivational Quote | ‘உன்னைக் கொல்லாதது, உன்னை வலிமையாக்குகிறது’ - நீட்ஷே கூறுவது என்ன?
தத்துவ ஞானி நீட்ஷே கூறியது இன்று சுயமுன்னேற்ற கூறாக வலிமையிழக்கச் செய்யப்பட்டு, உளவியல் ரீதியாகப் பார்க்கப்படும் ஒரு பொன்மொழியாக சுருங்கிவிட்டது.
தத்துவ ஞானி நீட்ஷே கூறியது இன்று சுயமுன்னேற்ற கூறாக வலிமையிழக்கச் செய்யப்பட்டு, உளவியல் ரீதியாகப் பார்க்கப்படும் ஒரு பொன்மொழியாக சுருங்கிவிட்டது.
“என்னை எது கொல்லவில்லையோ, அது என்னை வலிமையாக்குகிறது” - இது பிரபல ஜெர்மானிய தத்துவ ஞானி பிரெடெரிக் நீட்ஷேவின் Twilight of the the Idols (1888) என்ற நூலில் 'Maxims and Arrows' என்ற அத்தியாயத்தில் வரும் பிரபல வாசகமாகும்.
ஆனால், உண்மையான மேற்கோள் வாசகம் என்னவெனில், “Out of life’s school of war - what doesn’t kill me, makes me stronger.” அதாவது, “வாழ்க்கையெனும் போர்ப் பள்ளியில் எது என்னைக் கொல்லவில்லையோ, அது என்னை வலிமையாக்குகிறது...” என்கிறார் நீட்ஷே. அதாவது வாழ்க்கையை போருடன் ஒப்பிடுகிறார்.
ஆனால், இதை நீட்ஷே தனிமனித முன்னேற்றவாத பழமொழியாகவோ, முதுமொழியாகவோ, பொன்மொழியாகவோ கூறவில்லை. வரலாற்றில் இயற்கையாகவே சிலருக்கு அதிர்ஷ்டபூர்வமாக கிடைக்கும் அரிதான சில விஷயங்கள். இப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார மனிதர்கள் காயங்களுக்கு மருந்தைக் கண்டுப்பிடிப்பார்கள், சீரியஸான விபத்தை எப்படி தனக்குச் சாதகமாக்கிக் கொள்வது என்று பார்ப்பார்கள், அதாவது, எது அவனைக் கொல்லவில்லையோ அதுவே அவனை வலிமையாக்குகிறது என்று கூறுகிறார்.
இங்கு அவர் வலிமை, அதிகாரம் என்று கூறுவதெல்லாம் நீண்ட நெடிய கிரேக்க, ஜெர்மானிய தத்துவப் பாரம்பரியங்களின் சுமையைக் கொண்டது.
ஆனால், இது இன்று சுயமுன்னேற்றவாத பழமொழியாக, நேர்மறை, தன்னம்பிக்கைச் சிந்தனையின் கூறாக வலிமையிழக்கச் செய்யப்பட்டு உளவியல் ரீதியாகப் பார்க்கப்படும் ஒரு பொன்மொழியாகச் சுருங்கி விட்டது. இந்த வாசகத்திற்கு விளக்கம் அளித்த கிளாஸ்கோ பல்கலைக்கழக தத்துவப் பேராசிரியர் மிகேல் பிராடி,
“அனைத்து தோல்விகளும், வாதைகளும், வேதனைகளும் வலிமையில் முடியும் என்று நீட்ஷே கூறவில்லை,” என்கிறார். மாறாக, “வேதனை, வாதை அனுபவித்தல், துன்பகரமான ஒரு சூழலை சொந்த வலிமையாக்கத்திற்கான ஒரு விஷயமாக மாற்ற முடியும்,” என்கிறார்.
நாம் உலகை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோமோ அந்தக் கண்ணோட்டத்தில்தான் யதார்த்தம் வடிவமைக்கப்படும். நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளை நாம் உணரும் விதம் நமது உணர்ச்சி நல்வாழ்வையும் ஒட்டுமொத்த வாழ்க்கை அனுபவத்தையும் வியத்தகு முறையில் பாதிக்கலாம்.
“உன்னைக் கொல்லாதது, உன்னை வலிமையாக்குகிறது...” என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னோக்கிய பார்வையில் மாற்றம் தேவைப்படுகிறது. சவால்களை தீர்க்க முடியாத பிரச்சினைகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அவற்றை வளர்ச்சி, கற்றல் மற்றும் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகப் பார்க்க நாம் தேர்வு செய்யலாம்.
வரலாறு முழுவதும், பல குறிப்பிடத்தக்க நபர்கள் துன்பங்களைச் சமாளித்து பெரிய காரியங்களைச் சாதித்துள்ளனர்.
“உன்னைக் கொல்லாதது, உன்னை வலிமையாக்குகிறது” என்ற மேற்கோளின் சக்தியை நிரூபித்துள்ளது. இந்த உத்வேகம் தரும் கதைகள் நமது போராட்டங்களும் பின்னடைவுகளும் நமது எதிர்கால வெற்றிகளுக்குத் தூண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
இதற்கு சில உதாரணங்களைக் காட்டலாம். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 21 வயதிலேயே முடக்குவாத நோயான மோட்டார் நியூரான் நோயால் (ALS) பாதிக்கப்பட்டு, சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்தாலும், ஹாக்கிங் இத்தகைய கடினப்பாடுகளைத் தாண்டி கோட்பாட்டு இயற்பியல் துறையில் அற்புதமான பங்களிப்புகளைச் செய்தார். மோட்டார் நியூரான் அவரின் உயிரைப் பறிக்கவில்லை, மாறாக அவரை வலிமைப்படுத்தியது.
இன்னொரு நபர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய். மலாலா ஓர் இளம்பெண்ணாக இருந்தபோது, ஆபத்துகள் இருந்தபோதிலும், தனது சொந்த நாடான பாகிஸ்தானில் பெண்களின் கல்வி விடுதலைக்காகப் போராடினார். தலிபான்களின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு, அவர் பெண்களின் கல்வி மற்றும் மனித உரிமைகளுக்காக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
எனவே, எது நம்மை கொல்லவில்லையோ அதுதான் நம் வலிமையின் அஸ்திவாரம். அதேபோல்தான் வாழ்க்கையும். வாழ்க்கை நம்மைக் கொல்லவில்லை; ஆகவே, வாழ்க்கையையே வெற்றியின் அஸ்திவாரமாக மாற்றுக என்பதுதான் நீட்ஷே மேற்கோளின் சாராம்சம்.
Edited by Induja Raghunathan