வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டவர்கள் எப்போது மருத்துவமனையை நாட வேண்டும்? மருத்துவர் அறிவுரை!
வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டிருப்பவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. தொற்று உறுதியானவர்களில் அனைவருமே மருத்துவமனை அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் இல்லை. சுமார் 90 சதவீதத்தினர் லேசான அளவில் தொற்று இருப்பதனால் வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். 10 சதவிகிதத்தினரே மருத்துவமனை செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
இவ்வாறு வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டிருப்பவர்கள் எப்போது மருத்துவமனை செல்ல வேண்டும் அவர்களின் உடல்நிலையை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.
அவர்களின் குழப்பங்களுக்கு விடை தருகிறார் டாக்டர் மேத்தாஸ் மருத்துவமனையின் உள்மருத்துவப் பிரிவு தலைவர் மருத்துவர் ரோஸ் ரேச்சல்.
கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அவர்களுக்கு திடீரென அதிக காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொடர் இருமல், மிகுந்த உடல் வலி, சாதாரணமாக நடக்கும் தூரத்தை நடப்பதற்கே மூச்சிறைத்தல், வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளை வைத்து அறியலாம். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக ஸ்வாப் பரிசோதனை செய்து அதிலும் தொற்று உறுதியானால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும், என்கிறார்.
கொரோனா தொற்று உறுதியான பின்னர் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதலான பரிசோதனைகளான ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா என்று சரிபார்க்கப்படுகிறது. சிஆர்பி(CRP), எல்டிஎச்(LDH) மற்றும் ரத்த உறைதல் அளவை கணக்கிடும் டி டைமர்(D Timer) உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இந்த அனைத்துப் பரிசோதனைகளிலும் அவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறதென்றால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறோம்.
வீட்டில் தனிமைபடுத்திக்கொள்பவர்கள் காற்றோட்டமான தனி கழிப்பறை வசதி கொண்ட அறையை பயன்படுத்த வேண்டும். குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. உணவு உண்ணும் பாத்திரங்கள் முதல் அனைத்தையும் தனியே பயன்படுத்த வேண்டும், எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிமைபடுத்திக் கொண்டிருப்பவர்களின் அறைக்கு மற்றவர்கள் செல்லக் கூடாது, அவர்களுக்கு உணவு கொடுக்கச் செல்லும் போது முகக்கவசம் கையுறை அணிந்து செல்ல வேண்டும். பொதுவாகப் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்கள், கதவு தாழ்ப்பாள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி துடைக்க வேண்டும். குடும்பத்தினருடன் சகஜமாக அமர்ந்து பேசுவது ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது என அனைத்தையுமே தொற்று உறுதியானவர் தவிர்க்க வேண்டும்.
தனிமைபடுத்திக் கொண்டிருப்பவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிவிடாமல் மனதிற்கு பிடித்தமான இசையை கேட்பது, நூல்களை வாசித்தல் உள்ளிட்டவற்றை செய்யலாம். 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு அட்டவணையை போட்டு அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்கிறார் ரோஸ் ரேச்சல்.
தனிமைபடுத்திக் கொள்பவர்கள் பின்பற்றவேண்டியவை என்ன என்பதை நாங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னரே வீட்டிற்கு அனுப்புகிறோம். முதலில்,
அவர்கள் செய்ய வேண்டியது ஒரு அட்டவணை போட்டுக் கொண்டு தொடக்கத்தில் இருக்கும் நிலையை விட சளி, இருமல் அதிகரிக்கிறதா திடீரென காய்ச்சல் வருகிறதா. அப்படி காய்ச்சல் வந்தால் 6 நாட்கள் வரை நீடிக்கிறதா உடல் வெப்ப நிலையை அடிக்கடி பரிசோதித்து குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்கி வைத்துக் கொண்டு ஆக்சிஜன் அளவு 95க்கு மேல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது தவிர வயிற்றுப் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது, உடல் சோர்வு அதிக அளவில் இருக்கிறது, மூச்சுத் திணறல் மற்றும் இருமல் உள்ளதோடு படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருந்தால் தனிமைபடுத்திக் கொண்டிருப்பவர்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
மேலும், தனிமைபடுத்திக்கொண்டிருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு மோசமடைந்துவிடாமல் இருப்பதற்கு சில பயிற்சிகளையும் நாங்கள் சொல்லி அனுப்புகிறோம். எப்போது படுத்தாலும் குப்புறப் படுக்க வேண்டும் அல்லது இடது/வலது என ஒரு பக்கமாக படுக்க வேண்டும். பிரானாயமா என்று சொல்லப்படும் ஆழமான மூச்சுப்பயிற்சியை செய்ய வேண்டும்.
இன்சென்டிவ் ஸ்பைரோமீட்டரை (incentive spirometer) வாங்கி வைத்துக் கொண்டு அந்த இயந்திரத்தில் இருக்கும் மூன்று பந்துகள் மேலே எழும்பும் வகையில் நன்றாக மூச்சை உள்வாங்கி இழுத்து எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்வளவு நேரம் பிடித்து வைத்து பின்னர் மூச்சை வெளிவிட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பயிற்சியை செய்வதனால் சுவாசிப்பதில் நுரையீரலுக்கு பிரச்னை ஏற்படாது ஆக்சிஜன் அளவிலும் மாறுபாடு இருக்காது. இந்தப் பயிற்சிகளுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் ரேச்சல்.
வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு 93-92க்கு கீழ் செல்லும் போது நிச்சயமாக அவர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துவிட்டு உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். ஒருவேளை உடனடியாக மருத்துவமனையில் இடம் கிடைக்காவிட்டால் அவர்கள் ஆலோசனை பெறும் மருத்துவரின் அறிவுரையை கேட்டு விட்டு காத்திருப்பு காலம் வரை ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பயன்படுத்தலாம். அப்படியும் கிடைக்காவிட்டால் தாமதிக்காமல் அருகில் எந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இருக்கிறது என்பதை அறிந்து அங்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
இதனிடையே, சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு தொலைமருத்துவ சேவை வழங்குவதற்காக 135 இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர் அல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டல கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் முயற்சியை மாநகராட்சி எடுத்துள்ளது.
வீட்டுத்தனிமையில் இருக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை அறிந்து மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோரை கொரோனா முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.