இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் கோடீஸ்வரர் அபூர்வா மேத்தா யார்?
மாற்றி சிந்தித்து பில்லியனர் ஆன இளைஞர்!
COVID-19 தொற்றுநோய் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு, பெரும் வேலை இழப்புகளுடன் நாடு அதன் மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் சிலருக்கு, COVID லாக்டவுன் மாறுவேடத்தில் ஆசீர்வாதமாக வந்து செல்வங்களை குவிக்க உதவியது.
2020 ஆம் ஆண்டில் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்தது. இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பில்லியனர்களின் எண்ணிக்கை சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவர்களில் இளம்வயது கொண்டவர் மளிகை விநியோக ஆப்-பான இன்ஸ்டாகார்ட் நிறுவனர் அபூர்வா மேத்தா.
34 வயதான ஜெரோடாவின் நிகில் காமத்துடன் இணைந்து இளம் பில்லியனர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் அபூர்வா மேத்தா. 2020 ஆம் ஆண்டில் லாக்டவுன் காலத்தில் மேத்தாவின் Instacart ஒரு அதிவேக வளர்ச்சியைக் கண்டது மேலும், அவரை ஒரு கோடீஸ்வரராக்கியது. தற்போது 1.7 பில்லியன் டாலர் நிகர மதிப்பு உடன் பில்லியனர் ஆகி இருக்கிறார்.
சான் பிரான்சிஸ்கோ தலைமையிடமாகக் கொண்ட மளிகை விநியோக ஆப்-பான ’இன்ஸ்டாகார்ட்’ பயனர்கள் உள்ளூர் மருந்தகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து மளிகை மற்றும் மருந்துகளை வாங்க உதவுகிறது. கடையிலிருந்து பயனரின் ஆர்டரை எடுத்து அதை வீட்டு வாசலில் வழங்கும் “personal shoppers” ஸ்கீமையும் இன்ஸ்டாகார்ட் வழங்குகிறது.
அபூர்வா மேத்தா யார்?
இந்தியாவில் பிறந்த மேத்தா, கனடாவில் வளர்ந்தார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 2012 ல் இன்ஸ்டாகார்ட் நிறுவப்படுவதற்கு முன்பு மேத்தா பிளாக்பெர்ரி, குவால்காம் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். 2010ல், தனது தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்க அமேசானை விட்டு வெளியேறி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்குச் சென்றார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தியின்படி, 2010 மற்றும் 2012க்கு இடையில், மேத்தா 20 ஸ்டார்ட் அப் யோசனைகளைக் கொண்டு வந்தார், அது தோல்வியடைந்தது. அதேநேரம் மளிகைக் கடை போன்ற தனது அன்றாட பிரச்சினைகளை தீர்க்க ஏதாவது செய்ய நினைத்தார். 2014 ஆம் ஆண்டில் ஒய் காம்பினேட்டர் நிகழ்வு ஒன்றில்,
“ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான காரணம், நீங்கள் உண்மையிலேயே, அக்கறை கொண்ட ஒரு சிக்கலைத் தீர்ப்பதாக இருக்க வேண்டும்,” என்று மேத்தா பேசியதை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
அபூர்வா மேத்தா, இன்ஸ்டாகார்ட்டின் முதல் வாடிக்கையாளர் ஆகி தானே அந்த ஆப்’பில் ஆர்டர் செய்து டெலிவரி பெற்றுக் கொண்டு அனுபவத்தை உணர்ந்தார், என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
லாக்டவுன் வளர்ச்சி கதை!
லாக்டவுன் காலத்தில் சமீபத்திய நிதியளிப்பு சுற்றுக்கு இடையில் இன்ஸ்டாகார்ட்டின் புகழ் அதிகரித்தது, இதனால் அந்நிறுவனம் 225 மில்லியன் டாலர் நிதியை திரட்டியது. ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளபடி,
இன்ஸ்டாகார்ட்ட தனது மதிப்பீட்டை 7.9 பில்லியன் டாலரிலிருந்து 13.7 பில்லியன் டாலர்களாக உயர்த்த உதவியது. இதன்காரணமாக மேத்தாவின் 10 சதவீத பங்குகளின் மதிப்பை 1.2 பில்லியன் டாலராக உயர்த்தியது, இதனால் அவர் பில்லியனர்கள் கிளப்பின் புதிய உறுப்பினராக ஆனார்.
இன்ஸ்டாகார்ட் இப்போது சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. இன்ஸ்டாகார்ட் மார்ச் 2020 முதல் 3 லட்சம் புதிய கடைக்காரர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது, மேலும் ஒரு மணி நேரம் அல்லது ஒரே நாள் டெலிவரிகளுக்கு 2.5 லட்சம் கூடுதலாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
உலகளவில் இப்போது 3,228 பில்லியனர்கள் உள்ளனர், இது 2020ல் 414 ஆக இருந்தது. அவர்களின் மொத்த செல்வம் 3.5 டிரில்லியன் டாலர் இருந்து 32 சதவீதம் உயர்ந்து 14.7 டிரில்லியன் டாலராக உள்ளது.
தகவல் உதவி: ஃபோர்ப்ஸ் மற்றும் சிஎன்பிசி18 | தொகுப்பு: மலையரசு