200 கோடி வருவாயுடன் வெற்றிகரமாக செயல்படும் டெல்லி மாடர்ன் பஜார் நிறுவனத்தின் வெற்றிக்கதை!
90-களில் தொழில்முனைவில் ஆர்வம் கொண்டிருந்த குனால் குமார் தேர்வு செய்வதற்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தது. பொறியியல் படிப்பு முடித்து எம்பிஏ தொடரலாம் அல்லது வணிக நுணுக்கங்களைக் கற்றறிய தனது அப்பாவின் பேக்கரி வணிகத்தில் ஈடுபடலாம். அவர் வணிகத்தில் ஈடுபட முடிவு செய்தார். தற்போது பல்வேறு பகுதிகளில் செயல்படும் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான சில்லறை வர்த்தகத்தங்களில் ஒன்றை நடத்தி வருகிறார்.
”நான் எம்பிஏ படிக்க விரும்பினேன். ஆனால் என் அப்பா எனக்கு வணிகம் சார்ந்த பாடங்களைக் கற்றுத்தர தீர்மானித்தார்,” என்றார் குனால்.
குனால் குமார் அப்பாவிடம் வணிக நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு 2005-ம் ஆண்டு தனது அப்பாவின் வென்ச்சரான மாடர்ன் பஜாரை மறு அறிமுகம் செய்தார். இந்த முறை பேக்கரியாக இல்லாமல் டெல்லி என்சிஆர் பகுதியில் பல கிளைகளைக் கொண்ட சில்லறை வர்த்தக ஸ்டோராக அறிமுகம் செய்தார்.
இன்று மாடர்ன் பஜார் வழக்கமான மளிகைப்பொருட்கள், ஆர்கானிக் உணவு என 25,000க்கும் அதிகமான பொருட்களை வழங்குகிறது. இந்த ஸ்டோரில் பேக்கரி, இறைச்சிக்கான பிரத்யேக சமையலறை, கஃபே, சர்வதேச உணவு வகைகளுக்கான பிரிவு போன்றவை இருப்பதாக தெரிவிக்கிறார் குனால். டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் கடல் உணவு பிரியர்கள் அதிகம் இருப்பதால் பிரத்யேகமான கடல் உணவு வகைகள் பிரிவு வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இங்கு தினமும் 6,000 முதல் 7,000 வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர்.
”மாடர்ன் பஜாரில் நீங்கள் மூன்று நட்சத்திர செலவில் ஐந்து நட்சத்திர அனுபவத்தை பெறலாம்,” என்றார். இத்தனை ஆண்டுகளில் சிறப்பாக வளர்ச்சியடைந்து 800-900 நபர்களை பணியிலமர்த்தி 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
குனாலின் பயணம்
சில்லறை வர்த்தகப் பிரிவில் குணாலின் பயணம் எளிமையாகவே துவங்கப்பட்டது. இவரது அப்பா விஷ்வந்த் குமார் 1971-ம் ஆண்டு முதல் மாடர்ன் பஜார் என்கிற பெயரில் ஒரு சிறு பேக்கரியை டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் நடத்தி வந்தார்.
குனால் பொறியியல் படிப்பை முடித்த பிறகு 1991-ம் ஆண்டு அப்பாவின் வணிகத்தில் இணைந்துகொண்டார். 2004-ம் ஆண்டு வரை அவருடன் அதே கடையில் பணியாற்றினார். அவர் கூறுகையில்,
“அந்த சமயத்தில் என்னுடைய அப்பா வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதன் முக்கியத்துவத்தை என் மனதில் பதியவைத்தார். நியாயமான விலையில் சிறந்த தரத்தையும் அனுபவத்தையும் வாடிக்கையாளருக்கு வழங்கினால் வெற்றியடையமுடியும் என கற்றுக்கொடுத்தார்,” என்றார்.
எந்த வணிகத்தையும் சிக்கல்களின்றி நடத்தமுடியாது. எதிர்பாராத விதமாக அவர்களது வணிக முயற்சியிலும் சிக்கல் ஏற்பட்டது என்கிறார் குனால். அவர்களது கடையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து நினைவுகூறுகையில்,
“அந்த தீ விபத்தில் எங்களது கடை முழுவதுமாக அழிந்துபோனது. அனைத்துமே தீக்கு இரையாகி சாம்பலாகிப்போனதால் உடனடியாக கடையை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது,” என்றார்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு குனாலின் அப்பா ஓய்வுபெற்றார். அப்போதுதான் தனியாக வணிகமுயற்சி துவங்கவேண்டும் என்று குனால் தீர்மானித்தார். அவர் கூறுகையில், “அதே மார்கெட்டில் 2005-ம் ஆண்டு சிறு பேக்கரி கடை துவங்கினோம்,” என்றார். ஆனால் இந்த புதிய ஸ்டோர் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
”2005-ம் ஆண்டு துவங்கப்பட்ட கடை 1,400 சதுர அடி கொண்டது. தற்போது 6,000 சதுர அடி கொண்ட ஸ்டோரில் இயங்கி வருகிறோம். ஸ்டோரின் அளவு எப்படியிருந்தாலும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவம் வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார்.
அப்போதிருந்து குனாலின் முயற்சிகள் வெற்றியடைந்து வந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு 1.5 ஆண்டிற்கும் ஒருமுறை ஒரு புதிய ஸ்டோரை அவரால் துவங்கமுடிந்தது.
இத்தகைய வெற்றிக்கு குழுவே காரணம் என்று குறிப்பிடும் குனால்,
“நான் எப்போதும் என்னுடைய ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளவே விரும்புவேன். மாடர்ன் பஜார் வெற்றி குறித்து என்னைக் காட்டிலும் அவர்கள் அதிக அக்கறை செலுத்துகின்றனர்,” என்றார் குனால்.
மாற்றத்தை ஏற்படுத்துதல்
பயணமே மிகச் சிறந்த ஆசிரியர் என்கிறார் குனால். வெளிநாடுகளில் பின்பற்றப்படும் மிகச்சிறந்த நடைமுறைகளை இங்கும் செயல்படுத்த அவர் உலகம் முழுவதும் அதிகம் பயணம் செய்கிறார். ப்ராடக்ட் உருவாக்குவதில் முக்கியக் கவனம் செலுத்துவதால் அவருடைய ஸ்டோரை வந்தடையும் தயாரிப்புகளை மேற்பார்வையிடுகிறார்,”. அவர் மேலும் கூறுகையில்,
“1991-ம் ஆண்டுகளில் நாங்கள் சுமார் 10 வகை ப்ரெட்களை வழங்கி வந்தோம். தற்போது நூற்றுக்கும் அதிகமான வகைகளை வழங்குகிறோம்,” என்றார்.
ப்ராட்க்ட் உருவாக்குவது மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஸ்டோரின் தரவுகளையும் தீவிரமாக ஆராய்ந்து நுண்ணறிவைப் பெற்று அவற்றை இணைத்துக்கொள்ள முயற்சி செய்கிறோம். இவ்வாறு எங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்,” என்றார்.
2016-ம் ஆண்டு மாடர்ன் பஜார் ஆன்லைனிலும் செயல்படத் துவங்கியது. இவர்களது பிரத்யேக வலைதளத்தில் தினமும் 600-700 ஆர்டர்கள் பெறப்படுகிறது. ஆஃப்லைன் விற்பனையில் 10 சதவீதம் ஆன்லைனில் பெறப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலம் ஆன்லைனில் இருக்குமா என்கிற கேள்விக்கு குனால் பதிலளிக்கையில்,
“அப்படியில்லை. இந்தியர்கள் வெளியில் சென்று ஷாப்பிங் செய்யவே விரும்புகின்றனர். வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் ஆர்டர் செய்வது சலிப்பை ஏற்படுத்திவிடும்,” என்றார்.
எதிர்கால திட்டம்
மளிகைத் துறையில் சில்லறை வர்த்தக வணிகத்தில் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது என்கிறார் குனால். அடுத்த ஐந்தாண்டுகளில் டெல்லி-என்சிஆர் பகுதியில் மேலும் 10 ஸ்டோர்கள் திறக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறுகையில்,
”மாடர்ன் பஜார் பொருட்கள் மற்றும் சேவைக்கான தேவை அதிகம் உள்ளது. என்னால் சாத்தியப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து ஸ்டோர்களை திறப்பேன்,” என்றார்.
எனினும் அதிக ஸ்டோர்களை திறக்கும்போது தரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறித்தும் எச்சரிக்கையாக உள்ளார். இதற்கு தீர்வுகாண, “செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தினால் நீங்கள் விரைவாக வளர்ச்சியடையமுடியும்,” என்றார்.
குனால் தரத்தில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாத வகையில் தனது அனுபவங்களைக் கொண்டு விரைவாக வளர்ச்சியடைந்து இந்தியா முழுவதும் மாடர்ன் பஜார் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளார்.
தொழில்முனைவர்கள் தங்களது பணியில் நேர்மையாக இருக்கவேண்டும் என்கிறார் குனால்.
“ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி பயணிப்பது அவசியமாகும்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: மோஹித் சபர்வால் | தமிழில் : ஸ்ரீவித்யா